திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்
(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1 / 6 தொடர்ச்சி)
திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 2 / 6
3.3.0.அகஅமைதியின் — புறஅமைதியின்
இன்றியமையாமை
கடலில் கொந்தளிப்பும் சீற்றமும் புயற்காற்றும் நிலநடுக்க மும் ஆழிப்பேரலைகளும் இருந்தால், கப்பல்களும், படகுகளும் தோணிகளும் காப்புடன் பயணிக்க முடியாது. கப்பல்களும், படகு களும் தோணிகளும் கடலில் கவிழ்ந்து மூழ்கிவிடும். எண்ணில் அடங்காத உடைமை இழப்புகளும், உயிர் இழப்புகளும் ஏற்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்லவும் முடியாது; மீன்கள் பிடிக்கவும் முடியாது; வாழ்க்கையும் தடுமாறும்; மூழ்கும். அவர்களது வாழ்க்கையும் துன்பக் கடலில் மூழ்கிவிடும்.
எனவே, கப்பல்கள், படகுகள், தோணிகள் காப்புடன் அமைதியாகப் பயணிக்கக் கடல் அமைதியாக இருக்க வேண்டும். அத் தகு அமைதிச் சூழலில்தான் மீனவர்களும் கடலுக்குள் செல்ல முடியும்; மீன்களைப் பிடிக்கவும் முடியும். அவர்களது வாழ்க்கைக் கப்பல்களும் அமைதியாகப் பயணிக்கும்.
அதுபோலவே, உலகக் கடலில் அமைதிச் சூழல் இருந்தால் மட்டுமே மக்களின் வாழ்க்கைக் கப்பல்களும் வாழ்க்கைப் படகு களும் வாழ்க்கைத் தோணிகளும் அமைதியாகப் பயணிக்கும்.
புறஅமைதியால், மக்களிடம் மனஅமைதி மலரும்; வளரும். மக்களிடம் மனஅமைதி இருந்தால்மட்டுமே புறஅமைதி பொலியும். மனஅமைதியும் புறஅமைதியும் இன்றியமையாதவை எனத் தெளிவாம். மனஅமைதியும் புறஅமைதியும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை.
3.4.0.அறம் உணர்த்தும் புறச்சான்று:
மனஅமைதியும் புறஅமைதியும் அமைய வேண்டும் என்றால், எத்தகைய சூழல் அமைய வேண்டும் என்பதை எளிய முறையில் கீழ்க்காணும் கவியரசு கண்ணதாசனின் களிதமிழ்ப் பாடல் தெளிவுற விளக்கும். அந்தப் பாடல்:
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
–கவியரசு கண்ணதாசன்
4.0.0.நோபெல் பரிசு
நோபெல் பரிசுகள் (சுவீடிய Nobelpriset, நோர்வே: Nobelprisen) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக் கழகத்தாலும் சுவீடியக் கரோலின்சுகா நிறுவனத்தாலும் நார்வே நோபெல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் ஆகிய அறிவியல் புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன.
இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895ஆம் ஆண்டு இறுதிமுறியின்(உயிலின்)படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன. இது நோபெல் அறக் கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடனைச் சார்ந்த SverigesRiksbank என்னும் வங்கியால் பொருளியலில் பெரும் பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபெல் அறக்கட்ட ளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவு செய்து பணத்தொகையும் வழங்கும்.
4.1.0.நோபெல் பரிசு பெற்றவர்கள்
அமைதிக்காக நோபெல் பரிசுகள் பெற்றவர்கள் 1901 முதல் 2018வரை 115 பேர். என்பதிலிருந்தே உலகில் அமைதி நிலவ வேண்டியதன் இன்றியமையாமையை அறியலாம்.
4.2.0.அனைத்துலக மகாத்மா காந்தி அமைதி விருது
மகாத்மா காந்தி அடிகளின் பெயரில் அனைத்துலக அமைதி விருது இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 1995ஆம் ஆண்டு காந்தியின் 125ஆவது பிறந்த ஆண்டு விழா வைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகின்றது.
இது மென்முறை / அகிம்சை மற்றும் பிற காந்திய வழி முறைகளால் சமூக, பொருளியல், அரசியல் மாற்றம் தொடர்பாக தனி மனிதர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும். ஆண்டு தோறும் விருதுத் தொகை உரூபாய் ஒரு கோடி [10 million] இஃது உலகில் எந்த நாணயத்திலும் மாற்றத்தக்கதாகும். ஒரு தகடு[plaque] மற்றும் சான்று [citation] கொண்டது. இது தேசியம், இனம், மதம், பாலியல் வேறுபாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனை வருக்கும் பொதுவானது; அனைவருக்கும் வழங்கப்படுகின்றது.
மேற்கண்ட இரு வகைப் பரிசுகளும் உலகில் அமைதி நிலவ வேண்டியதன் இன்றியமையாமையை வெளிப்படுத்தும்.
நன்றி: விக்கிப்பீடியா, கூகுள்,
இணைய வலைத் தளம்
4.3.0.உலக அமைதி நாள்
உலக அமைதி நாள் [International Day of Peace] ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பெருமுழக்கத்தின்வழி ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ஆம் நாளில் அனைத்து ஐ.நா.அவையின் உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலக அமைதி நாள் முன்னர் 1981ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர்த் திங்களில் மூன்றாம் செவ்வாய்க் கிழமைகளில் கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால், 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் செப்டம்பர்த் திங்கள் 21ஆம் நாள் உலக அமைதி நாளாகக் கொண்டாடப்பட்டு வரு கின்றது.
5.0.0.ஆய்வுக் குறள்கள் — 127
தனிமனிதர்கள்முதல் உலக நாடுகள்வரை அமைதி நிலவ வேண்டியதன் இன்றியமையாமையைத் தொலைநோக்குப் பார்வையோடு ஆழ்ந்து ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அத்தகு அமைதி அரும்பி, மலரக் கடைப்பிடிக்க வேண்டிய செயற்பாடுகள் எவை என்பதையும், கைவிட வேண்டிய செயற்பாடுகள் எவை என்பதையும் குறளியத்தில் குறைவறப் பொதிந்து வைத்துள்ளார்.
அவற்றுள் 127 குறள்கள்மட்டும் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அவை கீழ்க்காணும் வகைப்பாடுகளில் ஆராயப்பட்டுள்ளன.
5.1.0.எண்ண அளவில் அமைதியை ஏற்படுத்தும்
சிந்தனைகள் — குறள்கள் 47
5.2.0.சொல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
சிந்தனைகள் — குறள்கள் 20
5.3.0.செயல் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
சிந்தனைகள் – குறள்கள் 60
6.0.0.எண்ண அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — 47 குறள்கள்
அமைதி மலர எவற்றை எண்ண அளவில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது 47 குறள் பாக்களில் தரப்பட்டுள்ளன. அறி பொருள் அறியப்படுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் இங்குப் பொருள் உரை அமைப்பட்டுள்ளது. இங்குச் சில சான்றுகளே காட்டப்பட்டுள்ளன.
கீழ்வரும் குறளாசிரியரின் மேலான சிந்தனைகளைக் கடைப்பிடியாகக் கொண்டு வாழ்வியல் ஆக்கினால், தனிமனிதர்களிடம் மனஅமைதி தணியாத நிலையில் அமையும். அவர் களால் புறஅமைதியும் அமையும். அந்தப் புறஅமைதியால் எல் லோரிடமும் மனஅமைதி மாண்புறும். எங்கும் எப்போதும் எவரிடமும் மலர்ச்சியும் மகிழ்ச்சியும் மாறா இன்பமும் மலர்ந்து நிலை பெறும்; அன்பும் அருளும் தளிர்க்கும்.
✪எண்ண அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகளின் வகைகள் — 4
அவை:
6.1.0.மனம் அளவில்
அமைதியியல் சிந்தனைகள் — 27 குறள்கள்
6.2.0.உணர்வு அளவில்
அமைதியியல் சிந்தனைகள் — 3 குறள்கள்
6.3.0.பண்பு அளவில்
அமைதியியல் சிந்தனைகள் — 14 குறள்கள்
6.4.0.அறிவு அளவில்
அமைதியியல் சிந்தனைகள் — 3 குறள்கள்
6,1.0.மனம் அளவில்
அமைதியியல் சிந்தனைகள் — 27 குறள்கள்
6.1.1.குணம்என்னும் குன்[று]ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது [குறள்.29]
அறிபொருள்:
ஒரு நொடியும் சினம் கொள்ளா மனம்
6.1.2.மனத்துக்கண் மா[சு]இலன் ஆதல் [குறள்.34]
அறிபொருள்:
குற்றம் அற்ற தூய மனம்
6.1.3.ஆகுல நீர [குறள்.34]
அறியப்படுபொருள்:
ஆராவார உணர்வு அற்ற மனம்
6.1.4.அழுக்கா[று] அவா [குறள்.35]
அறிபொருள்:
பொறாமையும் பேராசையும் அற்ற மனம்
6.1.5.ஈன்ற பொழுதில் பெரி[து]உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் [குறள்.69]
அறிபொருள்:
தன் மகனை உயர்பண்பன் எனக் கேட்டு மகிழும் தாயின் மனம்.
6,1.6.மறவற்க மா[சு]அற்றார் கேண்மை [குறள்.106]
அறிபொருள்:
குற்றம் அற்றாரது நட்பை மறவா மனம்
6,1.7.நன்றி மறப்பது நன்[று]அன்று [குறள்.108]
அறிபொருள்:
ஒருவர் செய்த உதவியை என்றும் மறவா மனம்
6.1.8.ஒருதலையா உள்கோட்டம் இன்மை [குறள்.119]
அறிபொருள்:
கோணல் இல்லாத உறுதிப்பாட்டு மனம்
6.1.9.இறத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று [குறள்.152]
அறிபொருள்:
பிறர் செய்த அளவு கடந்த துன்பத்தைப் பொறுத்தலைவிட அதனை மறக்கும் மனம்
6.1.10.ஏதிலார் குற்றம்போல்
தன்குற்றம் காண்கிற்பின் [குறள்.190]
அறிபொருள்:
பிறர் குற்றத்தையும் தமது குற்றம்போல் ஆராயும் மனம்
6.1.11.மறந்தும் பிறன்கேடு சூழற்க [குறள்.204]
அறிபொருள்:
மறந்த நிலையிலும் பிறருக்குக் கேடு எண்ணா மனம்
6.1.12.ஒத்த[து] அறிவான் [குறள்.214]
அறிபொருள்:
தமக்கு ஒப்ப எல்லாரையும் ஆராயும் சமன்மை மனம்
6.1.13.தன்உயிர் தான்அறப் பெற்றானை [குறள்.268]
அறிபொருள்:
தன் உயிர், தான் எனும் செருக்கு முழுமையாக இல்லா மனம்
6.1.14.வஞ்ச மனத்தான் [குறள்.271]
அறியப்படுபொருள்:
வஞ்சகம் இல்லா மனம்
6.1.15.எனைத்[து]ஒன்றும் கள்ளாமை
காக்கதன் நெஞ்சு [குறள்.282]
அறிபொருள்:
பிறர் பொருளைப் பறிக்க எண்ணா மனம்
6.1.16.அறிவினான் ஆகுவ[து] உண்டோ..? பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை [குறள்.315]
அறியப்படுபொருள்:
பிற, பிறர் உயிர்களையும் தமது உயிர்போல் எண்ணும் மனம்
6.1.17.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு [குறள்.347]
அறிபொருள்:
பற்றினை விட்டமையால் அமைந்த துன்பம் அற்ற மனம்
6.1.18.ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு [குறள்.353]
அறிபொருள்:
ஐயத்தின் நீங்கிய தெளிந்த மனம்
6.1.19.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை [குறள்.439]
அறிபொருள்:
தற்பெருமை கொள்ளா மனம்
6.1.20.ஒல்வ[து] அறிதல் [குறள்.472]
அறிபொருள்:
தம்மால் செய்ய முடிந்ததை ஆராயும் மனம்
(தொடரும்)
பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502
Leave a Reply