துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்! – கவிஞர் சீவா பாரதி
துடித்தேன்! வடித்தேன்! காலடிச் சுவடுகள் பதிப்பேன்!
வானத்தில் உலவிடும்
வண்ணமலர் நிலவைநான்
வடித்திட எழுதுகோல்
பிடித்தேன் – புது
வரிகளை வேண்டிநாள்
துடித்தேன் – ஆனால்
வானமே கூரையாய்
வாழ்ந்திடும் எளியவர்
வாழ்க்கையைக் கவிதையில்
வடித்தேன் – அவர்
நிலைகண்டு கண்ணீரை
வடித்தேன்! – அந்த
நிலவினைப் பாடநான்
நினைத்தேன் – நாட்டு
நிலைமையைப் பாடிநான்
முடித்தேன் – இது
நான்செய்த தவறாகுமா? – இல்லை
நான்கற்ற முறையாகுமா?
காதலின் இலக்கணம்
கண்டவர் வாழ்க்கையைப்
படைத்திட எழுதுகோல்
பிடித்தேன் – புதுப்
பாடல்கள் பாடிடத்
துடித்தேன் – ஆனால்
கடற்கரை அலைகளில்
கரைந்திடும் காதலைக்
கண்டதால் நான்மனம்
துடித்தேன் – என்
கண்ணீரால் புதுக்கவி
வடித்தேன் – உயர்
காதலைப் பாடநான்
நினைத்தேன் – இன்றைய
காதலைப் பாடிநான்
முடித்தேன் – இது
நான்கற்ற முறையாகுமா? – இல்லை
நான்செய்த தவறாகுமா?
வயல்வெளிப் பரப்பையும்
நெல்மணிக் கதிரையும்
வரைந்திட எழுதுகோல்
பிடித்தேன் – புது
வரிகளைத் தேடிநான்
துடித்தேன் – ஆனால்
வயல்களில் உழைப்பவர்
நெல்மணி கொடுப்பவர்
வாடிடும் நிலைகண்டு
துடித்தேன் – புது
வரிகளால் கவிதையை
வடித்தேன் – அந்த
வயல்களைப் பாடநான்
நினைத்தேன் – எளியோர்
வறுமையைப் பாடிநான்
முடித்தேன் – இது
நான்செய்த தவறாகுமா? – இல்லை
நான்கற்ற முறையாகுமா?
இளநங்கை இடைபற்றி
அவள்போடும் சடைபற்றி
இயற்றிட எழுதுகோல்
பிடித்தேன் – புது
இலக்கியம் படைத்திடத்
துடித்தேன் – ஆனால்
வளம்குன்றி நலம்குன்றி
வறுமைக்கு முடிவின்றி
வாடிடும் நங்கையை
வடித்தேன் – அவள்
நிலைகண்டு கண்ணீரை
வடித்தேன் – ஆம்
இளமையைப் பாடநான்
நினைத்தேன் – ஆனால்
ஏழ்மையைப் பாடிநான்
முடித்தேன் – இது
நான்கற்ற முறையாகுமா? – இல்லை
நான்செய்த தவறாகுமா?
தென்றலை மலர்களைத்
தீந்தமிழ்ச் சொற்களால்
தீட்டிட எழுதுகோல்
பிடித்தேன் – கவிதை
தீட்டிட எழுதுகோல்
பிடித்தேன் – ஆனால்
கூவத்துக் கரையிலே
குடும்பம் நடத்துவோர்
நிலைமையைக் கண்டுநான்
துடித்தேன் – அவர்
நிலைகண்டு கவிதையை
வடித்தேன் – நான்
கற்பனைக் கவிபாட
நினைத்தேன் – ஆனால்
கண்கண்ட நிகழ்ச்சியை
வடித்தேன் – இது
நான்கற்ற முறையாகுமா? – இல்லை
நான்செய்த தவறாகுமா?
மாலைப் பொழுதினில்
ஆதவன் மடிகையில்
வானத்தின் கோலத்தைக்
கண்டேன் – வண்ண
சாலத்தைக் கவியாக்க
நின்றேன் – ஆனால்
மூட்டைகள் தூக்கிடும்
தொழிலாளர் உடம்பிலே
நரம்புகள் புடைப்பதைக்
கண்டேன் – வியர்வைத்
துளிகளோ சொலிப்பதைக்
கண்டேன் – வண்ண
சாலத்தைப் பாடநான்
நினைத்தேன் – வியர்வைத்
துளிகளைப் பாடிநான்
முடித்தேன் – இது
நான்செய்த தவறாகுமா? – இல்லை
நான்கற்ற முறையாகுமா?
பணத்திற்கும் சுகத்திற்கும்
பதவிக்கும் புகழுக்கும்
பாடல்கள் முனைந்திட
நினைத்தேன் – கவிப்
பயணத்தைத் தொடர்ந்திட
நினைத்தேன் – ஆனால்
எனைப்பெற்ற தேசத்தின்
எதிர்கால வளர்ச்சிக்குக்
கவிதையை உரமாகப்
படைத்தேன் – புதுக்
கவிதைகள் பலநூறு
வடித்தேன் – நான்
பணத்திற்குக் கவிபாட
நினைத்தேன் – இந்தத்
தேசத்தின் நலன்பாடி
முடித்தேன் – இது
நான்கற்ற முறையாகுமா? – இல்லை
நான்செய்த தவறாகுமா?
இயற்கையைப் பற்றியும்
இளநங்கை பற்றியும்
ஆயிரம் கவிதைகள்
உண்டு – பாட
ஆயிரம் கவிஞர்கள்
உண்டு – ஆனால்
உழைப்பவர் திருக்கரம்
உயர்ந்திட அவர்முகம்
மலர்ந்திட நான்கவி
வடிப்பேன் – புது
மாற்றத்தைக் கவிதையில்
கொடுப்பேன் – நான்
காலடிச் சுவடுகள்
பதிப்பேன் – பாரதிக்
கவிஞனை என்றென்றும்
துதிப்பேன் – உழைப்போர்
கரங்களை என்றென்றும்
மதிப்பேன் – தடையாய்க்
காலன்வந் தாலும்நான்
மிதிப்பேன் – இது
நான்செய்த தவறாகுமா – இல்லை
நான்கற்ற முறையாகுமா?
-கவிஞர் சீவா பாரதி
‘சென்னை வானொலி கவிதைப் பூங்கா’- 13.08.1981
Leave a Reply