தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை
தேனிப் பகுதியில் காளான்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.
மழை பொழியும் நேரத்தில் இடி இடித்தால் இயற்கையாகவே காளான்கள் வெளிவரத் தொடங்கும்.
இதில் பேய்க்காளான், வெண்மை நிறக்காளான் என இரண்டு வகைப்படும். வெண்மை நிறக்காளான்கள் மருத்துவகுணம் உடையது. மேலும் சைவப்பிரியர்கள் அசைவம் சாப்பிட்டதைப்போன்று உணரும் தன்மை உடையது, இக்காளான்கள் அரிதாகத்தான் கிடைக்கும்.
மேலும் இடிஇடிக்கும்போது பூமியிலிருந்து தானாகவே வளரும் தன்மை உடையது. தற்பொழுது இடி மின்னலுடன் கூடிய மழை பொழிவதால் தென்னந்தோப்புகள், வயல் வெளிகளில் காளான்கள் தன்னியல்பில் முளைத்து வருகின்றன. தோட்ட வேலைக்குச் செல்பவர்கள் தேடிச்சென்று இவற்றைப் பறித்து விற்பனை செய்கின்றனர். அரியதாகக்கிடைக்கும் பொருள் என்பதால் காளான் அயிரைக்கல் (கிலோ) உரூ.200 வரை விற்பனை ஆகிறது. விலை அதிகம் ஆனாலும் தேனிப் பகுதி மக்கள் போட்டி போட்டு வாங்கி உண்கின்றனர்.
எல்லாக் காளான்களும் உண்பதற்கு ஏற்றவை அல்ல. சில வகைக் காளான்கள் நஞ்சாகும். மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்த வேண்டும்.
இங்கே அமெரிக்காவில் நவம்பர்த் திங்களில் காளான் வேட்டைக்குப் போகும் குழுக்கள் உண்டு. காட்டுப் பகுதிகளில் முளைத்துக் கிடக்கும் காளான்களை அவரவர் எடுத்து வந்து ஒரு பெரிய அறையில் மேசைகளில் பார்வைக்கு வைப்பார்கள். பிறகு காளான்களைப் பற்றி நன்கு அறிந்த ஒருவர் ‘இதைச் சாப்பிடலாம், இது நஞ்சு’ என்று தெரிவு செய்வார். அதன் பின்னர் அவரவர் தாங்கள் எடுத்துவந்த காளான்களை எடுத்துப் போவார்கள் அல்லது தூக்கி எறிவார்கள்.
நானும் ஒரு முறை போயிருக்கிறேன். அழகழகான நிறங்களில் (வெள்ளை, பழுப்பு, கருப்பு, செம்மை …) காளான்கள் பார்த்தேன். பல வகை வடிவும் அளவும் வியப்பூட்டின.
படத்தில் காட்டியிருக்கும் காளானைப் பச்சையாகச் சாப்பிட்டால் முந்திரிப்பருப்பைக் கடிப்பது போன்ற உணர்வு கிடைக்கும். அப்படிச் சாப்பிடத்தான் எனக்குப் பிடிக்கும். சிலவகைக் காளான்களைச் சமைத்தால் விலங்குக்கறியைச் சவைக்கும் உணர்வு கிடைக்கும் என்று பிறர் சொன்னார்கள். உண்ணாமல் மீந்து போன சமைத்த காளானின் வாடையை எல்லாராலும் தாங்கிக்கொள்ள முடியாது!
அம்மையீர், தாங்கள் குறிப்பிட்டது போன்று நஞ்சுக் காளான்களும் உள்ளன. எனவேதான், படம் நல்ல காளான்தானா எனச் சரிபார்த்து வெளியிடப்பட்டுள்ளது.
காளான் நிறங்கள், உண்ணும் முறை பற்றிய தங்கள் குறிப்பு இச் செய்திக்கட்டுரைக்கு அழகூட்டுவதாக அமைந்துள்ளது. நன்றி.