பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

நூன்மரபு

tholkappiyar01

 

21.

இடையெழுத்து என்ப ய, ர, ல, வ, ழ, ள.

 

ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையெழுத்துகள் என்று சொல்லப்படும்.

 

மெய்யெழுத்துகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என வகுத்திருப்பது அவற்றின் ஒலிப்பு முறையால் ஆகும். மேலைநாட்டு மொழிநூலார் எழுத்துகளின் பிறப்பிடத்தால் வகைப்படுத்தியுள்ளனர்.

 

22.

அம்மூவாறும் வழங்கியல் மருங்கின்

மெய்ம்மயக்கு உடனிலை தெரியுங்காலை

 

ஆராயுமிடத்து, அங்ஙனம் மூவினமாக வகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும், மொழிப்படுத்தி வழங்குமிடத்து, தன்னோடுதான் சேரும் உடனிலை மயக்கம், பிற மெய்யோடு சேரும் மெய்ம்மயக்கம் என இரு வகைப்படும்.

 

காட்டு :  உடனிலை மயக்கம் : தன்னொடு தான் சேர்ந்துள்ளது.

 

பங்கு :  மெய்ம்மயக்கம் : பிற மெய்யோடு சேர்ந்துள்ளது.

23.

ட, ற. ல, ள என்னும் புள்ளிமுன்னர்க்

க, ச, ப என்னும் மூவெழுத்தும் உரிய.

 

ட், ற், ல், ள் என்று சொல்லப்படும் மெய்யெழுத்து களோடு ‘க’, ‘ச’, ‘ப’ எனப்படும் மூன்றும் சேர்ந்து வரும்.

 

காட்டு : கட்க, கற்க, செல்க, கொள்க

 

24.

அவற்றுள்

ல ளஃ கான் முன்னர் ய வ வும் தோன்றும்

மேற்கூறிய நான்கு மெய்களுள், ‘ல’, ‘ள’ என்பனவற்றின் பின்னர்  ‘ய’, ‘வ’, இரண்டும் வரும்.

 

காட்டு :  கொல்யானை, கோல்வளை,

வெள்யானை, வெள்வளை.

 

25.

ங, ஞ, ண, ந, ம, ன எனும் புள்ளிமுன்னர்த்

தத்தம் மிசைகள் ஒத்தன நிலையே.

 

ங, ஞ, ண, ந, ம, ன  என்று சொல்லப்படும் மெய்யெழுத்துகளுக்குப் பின்னர், நெடுங்கணக்கு வரிசையில் தத்தமக்குமுன் உள்ள எழுத்துகளோடு சேர்ந்து வரும்.

ங், ஞ், ண், ந், ம், ன், என்பனவற்றுக்குப் பின்னர் முறையே ‘க, ச, ட, த, ப, ற’ என்பன வரும்.

 

இந் நூற்பாவால், தொல்காப்பியர் காலத்தில் ‘கங, சஞ, டண,  தந, பம, றன’ என எழுத்துகள் முறைப்படுத்தப்பட்டிருந்தன என்று அறியலாம்.

 

26.

அவற்றுள்

ண ன ஃகான் முன்னர்க்

க, ச, ஞ, ப, ம, ய, வ ஏழும் உரிய

 

மேற்கூறப்பட்ட மெல்லின மெய்கள் ஆறனுள் ண, ன, என்னும் இரண்டின் பின்னர், ‘க, ச, ஞ, ப, ம, ய, வ’ எனும் ஏழும் வரும்.

 

காட்டு :உண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன்ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை, மண்யாது, பொன்யாது, மண்வலிது, பொன்வலிது.

 

27.

ஞ, ந, ம, வ என்னும் புள்ளிமுன்னர்

யஃகான் நிற்றல் மெய்பெற்றன்றே.

 

ஞ, ந, ம, வ என்று சொல்லப்படுகின்ற நான்கு மெய்யெழுத்துகளின் பின்னர்  ‘ய’ வரும்.

காட்டு : உரிஞ்யாது, பொருள்யாது, திரும்யாது, தெவ்யாது

 

28.

 

மஃகான் புள்ளிமுன் வவ்வும் தோன்றும்.

 

‘ம்’ என்னும் மெய்யெழுத்தின் முன்னர் ‘வ’ வரும்.

 

29.

ய, ர, ழ வென்னும் புள்ளிமுன்னர்

முதலாகு எழுத்து ஙகர மொடு  தோன்றும்.

 

ய், ர், ழ், என்னும் மெய் எழுத்துகளுக்குப்பின்னர் மொழி முதலாக வரும் எனக் கூறப்பட்டுள்ள க, ச, த, ப, ஞ, ம, ந, ய, வ எனும் ஒன்பது மெய்களும் ங வும் வரும்.

 

காட்டு :

வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது,

வேய்சிறிது, வேர் சிறிது, வீழ்சிறிது,

வேய்தீது, வேர்தீது, வீழ்தீது,

வேய்பெரிது, வேர்பெரிது, வீழ்பெரிது,

வேய்ஞான்றது, வேர்ஞான்றது, வீழ்ஞாண்டது,

வேய்நீண்டது, வேர்நீண்டது, வீழ்நீண்டது,

வேய்மாண்டது, வேர்மாண்டது, விழ்மாண்டது,

வேய்யாது, வேர்யாது, விழ்யாது,

வேய்வலிது, வேர்வலிது, வீழ்வலிது

 

30.

மெய்நிலை சுட்டின் எல்லா வெழுத்தும்

தம்முன் தாம் வரும் ர, ழ, அலங்கடையே.

 

சொற்களில் மெய் எழுத்துகள் நிற்கும் நிலையை அறிந்தால், ‘ர’, ‘ழ’ எனும் இரண்டும் பிற மெய்களோடுதான் வரும். தம்முன்தாம் வரா.

 

31.

அ இ உ அம்மூன்றும் சுட்டு.

 

 

அ, இ, உ எனும்மூன்று உயிர்களும் சுட்டுப் பொருளில் வருங்கால் சுட்டெழுத்துகள் என்னும் பெயர்பெறும்.

 

காட்டு :

அம்மாடு

இம்மாடு

உம்மாடு

(தொடரும்)

குறள்நெறி 01.04.1964