(தோழர் தியாகு எழுதுகிறார் 174 : ஒரு பிழை திருத்தப்படுகிறது தொடர்ச்சி)

ஓய்வு கொள்ள நேரமில்லை!

இனிய அன்பர்களே!

பொள்ளாச்சி அருகே கள்ளிப்பாளையத்தில் இருந்து எழுதுகிறேன். இங்கே தொலைபேசித் தொடர்பே திணறும் போது இணையத் தொடர்பு பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கிருந்து நாள்தோறும் தாழி மடல் அனுப்புவதே போராட்டமாகத்தான் உள்ளது. இந்தத் திங்கட் கிழமை செய்தி அரசியல் நடத்த முடியாமற்போயிற்று. இன்று அறிவன் கிழமையில் ‘தமிழ்நாடு இனி’ அரசியல் வகுப்புக்கும் விடுமுறைதான்! எவ்வளவு இடர்ப்பாட்டிலும் அரசியல் வகுப்பை நிறுத்தக் கூடாது என்றுதான் நினைக்கிறேன்.

ஏப்பிரல் 15 கந்தர்வக்கோட்டை அருகே ஒரு சிற்றூரில் அம்பேத்துகர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு 16 காலை சென்னை வந்து விடுவேன். பிறகு வழக்கம் போல் திங்கள், அறிவன் இணைய நிகழ்வுகள் தொடரும். அது வரை பொறுத்தருள்க! இங்கிருக்கும் வரை தாழியில் முடியாமலிருக்கும் உரையாடல்களை விரைவுபடுத்தி முடிக்க இயன்ற வரை முயல்வேன்.

இரு நாள் முன்பு நானும் சுதாவும் கோவை சென்று இனிய தோழர் போத்தனூர் இராசகோபாலைப் பார்த்து வந்தோம். பல்லாண்டு இடைவெளிக்குப் பின் பார்க்கிறேன். அவரது உடல்நிலை குறித்து வினவியறிந்தேன். கிழமை மூன்று முறை கேசி மருத்துவமனையில் நீர்ப்பிரிப்பு (dialysis) செய்து கொள்கிறார். விரைவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதற்காகப் பெயர் பதிந்து பட்டியல் வரிசையில் காத்திருக்க வேண்டும். இராசகோபால் உடல்நிலை, அவருக்கான சிகிச்சை, அடுத்துச் செய்ய வேண்டியது… அனைத்தையும் பற்றி ஒரு விரிவான மருத்துவ அறிக்கை தருமாறு அன்பர் மருத்துவர் மணிகண்டனைக் கேட்டுள்ளேன். கிடைத்தும் தாழியில் அறியத் தருகிறேன்.

ஆர்எசுஎசு ஆளுநர் ஆர்என் இரவிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில் முதல் போராட்டத்தையே இந்த ஆளுநர் இரவியைப் பதவி விலகக் கோரித்தான் நடத்தினோம். அவரைக் கண்டித்துத் தமிழக சட்டப் பேரவை இயற்றிய தீர்மானத்தை வரவேற்கிறோம்.

இரவிக்கு எதிரான போராட்டம் என்பது அவரை ஆட்டுவிக்கும் பாசிச மோதி கும்பலுக்கு எதிரான போராட்டமே என்பதை மறந்து விடக் கூடாது. இரவி விலகினால் அல்லது அவரை இந்திய அரசே விலக்கிக் கொண்டால் அது தமிழக மக்களுக்கு ஒரு வெற்றிதான்! ஆனால் அத்துடன் தன்னாட்சி மலர்ந்து விடாது, இறைமை வந்து விடாது. தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றிய பொதுத்தேர்வு (‘நீட்’) விலக்கு உள்ளிட்ட சட்ட முன்வடிவுகள் சட்டங்களாக வேண்டும். இந்த நோக்கம் ஈடேற இன்னும் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். நம் போராட்டம் மேலும் முனைப்பான வடிவங்கள் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவிற்கொள்க! தமிழ் நாட்டு மக்களும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும், தமிழ்நாட்டு முதலமைச்சரும் அடுத்தடுத்தப் போராட்டக் களங்களுக்கு அணியமாவோம்! ஒய்வு கொள்ள நேரமில்லை!

(தொடரும்)

தோழர் தியாகு

தாழி மடல் 157