(இராவண காவியம்: 1.2.26-30 தொடர்ச்சி)

1. தமிழகக் காண்டம்

2. தமிழகப் படலம்

ஐந்நிலம் – குறிஞ்சி

வேறு

31.இவ்வகை நான்குட னியன்று பல்வளந்

துவ்விய தமிழகத் துணிந்த மேலவர்

செவ்விய முறையினிற் சென்ற வைந்நிலக்

குவ்வையின் முதலிய குறிஞ்சி காணுவாம்.


32.இடிகுரல் யானைதன் னிளைய வின்னுயிர்ப்

பிடிபசி களைந்திடப் பெரிய யாக்கிளை

முடியது படியுற முறிக்கு மோசையாற்

படிசிறு கிளியினம் பறந்து செல்லுமால்.


33.அருவிய முருகிய மார்ப்பப் பைங்கிளி

பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்

அருகிய சிறைவிரித் தாடப் பூஞ்சினை

மருவிய குரக்கினம் மருண்டு நோக்குமால்.

34.பன்றியி னினமுறாப் பரணங் காப்பருஞ்

சென்றற முதிர்தினைக் கதிர்கொய் செம்மருங்

கன்றிய வள்ளியின் கிழங்கு கன்னருங்

குன்றெதி ரொலிபடக் குறிஞ்சி பாடுவர்.


35.கிளிகடி பரணிடைக் கிளவி வேட்டவன்

குளிர்நிழல் வேங்கையிற் குரவை யாடிடும்

அளிமுரல் குழலியி னளகத் துண்மறை

ஒளிமுக மதியினை யுருவி நோக்குமால்.

குறிப்புகள்

  1. முன்-கிழக்கு. இந்திரம்-கிழக்கு, தலைமை.
  2. குவ்வை -கூட்டம்,  யா-ஒருமரம், படி-நிலம்,
  3. முருகியம்-குறிஞ்சிப்பறை.   34, கன் று தல்-முதிர் தல், கல் நர்— ேதாண்டுவோர்.

35, அளி-வண் டு. அளகம்-மயிர்

(தொடரும்)

இராவண காவியம்

புலவர் குழந்தை