பெரியாரைப் படி! உரிமையைப் பிடி! – கவிஞர் கண்மதியன்
இளைய சமூகமே!
பெரியாரைப் படி!
எரிமலையாய் எழுந்துன் உரிமையைப் பிடி!
காற்றும் மழையும் புயலும் – இங்கே
காண்ப துண்டோ நாட்டின் எல்லை? ஏற்றும் விளக்கின் ஒளியை – அந்த
இருளும் விழுங்கித் தடுப்பதும் இல்லை? போற்றும் மனித நேயம் – ஒன்றே
புத்தியில் கொண்ட தந்தை பெரியார்
ஏற்றிய சுயமரியாதை – இயக்கம்’
இம்மண் கண்ட மானுட ஏக்கம்!
கிழக்கிலோர் கதிரோன் எழுந்தால் – அந்த
மேற்கிலோர் கதிரோன் பெரியார் எழுந்தார்!
விழித்திடா இருட்டுக்கே வெளிச்சம் – வேண்டும்!
மேற்கிலோர் கதிரோன் சென்றால் இங்கே
கிழக்கிலோர் கதிரோன் பெரியார் – வந்தார்!
கிழக்கு மேற்கு வடக்குத் தெற்கென்(று)
உலகெலாம் பெரியார் பகுத்தறிவு – வெளிச்சம்
உலாவர மடமைகள் பூண்ட(து) அச்சம்!
உயரத்தி லிருந்து கண்ணன் – என்பான்
ஓதிய தாக உளறி வைத்த
உயர்ந்தான் தாழ்ந்தான் என்னும் – ஆரியர்
உளுத்துப் போன வர்ண பேதக்
கயமை நெறிகள் யாவும் – பெரியார்
கடைக்கண் பார்வை கண்ட போது
புயலில் சிக்கிச் சாய்ந்த – அந்தப்
பூவாழை மரமாய்ப் பிய்ந்து போனது!
சாதி மதங்கள் இருக்கும் – வரையில்
சரித்திரச் சண்டைகள் இருந்தே தீரும்!
நீதியின் நிழலாய் இருக்கும் – பெரியார்
நிமிர்ந்துள இமயம் ஆவார்! யாரும் மோதிடின் பொடியாய்ப் போவார்! – ஆல
மரத்தை அருகுபுல் ஆட்டல் உண்டோ ? வேத மந்திர மாய- மான்கள் வேட்டைப்புலியிடம் மீளல் உண்டோ ?
கடவுளர் கதைகள் வீழ்த்திய – பெரியார்!
கண்களில் பகுத்தறிவைப் பாய்ச்சிய பெரியார்!
மடமைப் பழமைகள் மாற்றிய – பெரியார்!
மானுடர் காதல்மணம் மலர்த்திய பெரியார்!
இடஒதுக் கீட்டைக் கொணர்ந்த – பெரியார்!
ஏளனப் பெண்ணடிமை ஒழித்த பெரியார்!
மடைதிற வெள்ளமாய்க் குறளொளி- ஏற்றி
மனஇருள் கீதையை மாய்த்த பெரியார்!
பெரியார்போல் மண்ணில் பிறந்தார் – இல்லை!
பெரியார்போல் பதவிகள் துறந்தார் இல்லை!
பெரியார்போல் வாழ்ந்து காட்டினார் – இல்லை!
பெரியார்போல் பகுத்தறி வூட்டினார் இல்லை!
பெரியாரே உலகப் பகுத்தறி(வு) – எல்லை!
பெரியாரே ஆரியப் பாம்புக்குத் தொல்லை!
பெரியாரை இளைய சமூக – மேபடி!
எரிமலையாய் எழுந்துன் உரிமை யைப்பிடி!
– கவிஞர் கண்மதியன்
http://www.viduthalai.in/page-1/168540.html
விடுதலை 16.09.2018
Leave a Reply