arangarasan_thirukkural_arusolurai_attai

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து திருவள்ளுவர் ஆண்டு தைத் திங்கள் 2—ஆம் நாள் [16 –- 01 – 2015] அன்று நடத்திய திருக்குறள் எழுச்சி மாநாட்டில், திருக்குறள் தூயர் பேராசியர் முனைவர் கு. மோகனராசு அவர்கள முன்னிலையில், திருக்குறள் பண்பாட்டுச் சிற்பி கோ. பார்த்தசாரதி அவர்கள் பேராசிரியர் வெ. அரங்கராசன் அவர்கள் எழுதிய திருக்குறள் அறுசொல் உரை என்னும் நூலை வெளியிட்டார்கள். முதல் படியைக் கவிமாமணி க. குணசேகரன் அவர்கள். பெற்றார்கள்.

அந்நூலில் இடம் பெற்ற மதிப்புரை வருமாறு:

                  மதிப்புரை            

                                 பேராசிரியர் முனைவர் கு. மோகனராசு

                                 நிறுவனர், உலகத் திருக்குறள் ஆய்வு மையம்

                                 வள்ளுவர் கோட்டம்.

                                

 அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்

என்று திருக்குறள் குறித்து ஔவைப் பெருமாட்டியார் சொன்னதாக ஒரு திருவள்ளுவமாலை இணைப்பு உள்ளது. அது திருவள்ளுவர் தந்த குறளின் குறுகிய வடிவம் – பொருள் ஆழம் பற்றிய அவர்தம் மதிப்பீடு. ஆனால், அந்த ஔவையின் பெயரால் அமைந்த ஒருவரே, அறம் செய விரும்பு; ஆறுவது சினம் – என்று வள்ளுவத்தைவிடச் சுருக்கமாச் சொல்லி, எல்லார் மனத்திலும் இடம் பிடித்துவிட்டார். எதையும் சுருக்கமாகச் சொல்வதில் ஒரு ஈர்ப்பு – ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.

      திருக்குறளுக்குப் பின்னர் எத்தனையோ அற நூல்கள் தொன்றின. அவையெல்லாம் பெறாத வாழ்வை வள்ளுவம் பெற்றிருக்கிறது என்றால், அதற்கு அடிப்படைக் காரணங்களுள் ஒன்று அதன் சுருங்கிய வடிவம்தான்.

திருக்குறளில் இரண்டு சீர்களுக்குள், மூன்று சீர்களுக்குள், மற்றும் நான்கு சீர்களுக்குள் சீரிய கருத்துகள் கிடைப்பதையும் சான்றோர்கள், குறிப்பாக உரையாசிரியர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில், திருக்குறள் கருத்துகளையே ஏன் ஒரு வரிக்குள் கொண்டுவரக் கூடாது? என்ற எண்ணம் திருக்குறளுக்கு உரை கண்ட சான்றோர்களிடயே எழுந்தது. தம் உரைகளுக்கிடையே அதனைச் செயலாக்க முனைந்தனர். இத்தகைய போக்கிற்கு முதன்முதல் வித்திட்டவர் காயாமொழி குமரகுருபரர் அவர்கள். இவர், தாம் எழுதிய ‘திருக்குறள் அறம்’ என்னும் உரை நூலில் (1928) குறளுக்கு வசனம், பொருள், குறிப்பு எனத் தந்து கடைசியில் கருத்து என ஒரு பகுதியை அமைத்துத் திருக்குறளின் கருத்தை ஒரு வரியில் தரும் முயற்சியை மேற்கொண்டார்.

      இத்தகைய போக்கினால் ஈர்க்கப்பட்ட வ.உ.சிதம்பரனார், வித்துவான் மு.இரா.கந்தசாமி பிள்ளை, நாகை சொ.தண்டபாணி பிள்ளை, வித்துவான் கன்னியப்ப நாயகர், திருக்குறள் பீடம் அழகரடிகள் போன்றவர்கள் தத்தம் உரைகளுக்கிடையே முடிந்தவரை ஒருவரி உரையையும் தரும் முயற்சியை மேற்கொண்டார்கள்.

   திருக்குறளுக்கே ஒருவரி உரை காணும் போக்கிற்கு வித்திட்டது. முதன் முதல், சுகவனம் சிவப்பிரகாசர் (1940), ‘திருக்குறள்  நூற்பா – குட்டிக் குறள்’ என்னும் பெயரில் ஒருவரி உரை வழங்கினார்.

  இவரைத் தொடர்ந்து, வித்துவான் இல.சண்முகசுந்தரம் (1994),  சி,வெற்றிவேல் (1997), மேலகரம் முத்துராமன் (1999), நேருகுமாரி கண்ணம்பிரத்தினம் (2000), பேராசிரியர் கருவை பழனிசாமி (2007) திருக்குறள் நம்பி தங்க.பழமலை (2010), ஆகியோர் திருக்குறளுக்கு ஒருவரி உரை வழங்கினர். குறள் மாமணி பிரதாப்பு(2006), முனைவர் அ. ஆறுமுகம் (2007), பேராசிரியர் செந்தமிழ்ச்செழியன் (2008), போன்றவர்கள் தத்தம் உரையோடு ஒருவரி உரையும் வழங்கினர்.

     இவர்கள் வழங்கிய ஒருவரி உரையில் ஓர் ஒழுங்கமைவு காணப்படவில்லை. அதனால், ஒரு சில திட்ட வரைவுகளோடு – பத்துக் கட்டளைகளோடு – ஒருவரி உரை காணும் முயற்சியை வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கில் மேற்கொண்டோம். முதல் நான்கு அதிகாரங்களுக்கு நான் ஒருவரி உரை வழங்கினேன். ஐந்தாவது அதிகாரம் வரும்போது பேராசிரியர் திருக்குறள் தேனீ வெ. அரங்கராசன் அவர்கள் ஒருவரி உரை வழங்கத் தொடங்கினார். பின்னர், முனைவர் திருக்குறள் நயம்பு அறிவுடை நம்பி, முனைவர் கவிமாமணி குமரிச்செழியன், அருள்திரு திருக்குறள் தூதர் இல. ச. சதாசிவம், திருக்குறள் இராம். மோகன்தாசு, புலவர் திருக்குறள் தி. வெ. விசுயலட்சுமி, அருள்திரு தூதர் மு. வேங்கடேசன் ஆகியோர் தொடர்ந்து ஒருவரி உரை அறத்துப்பால் வரை வழங்கினர். நானும் அறத்துப்பாலுக்கு ஒருவரி உரை வழங்கினேன். அது, ‘திருக்குறள் மக்கள் உரை – ஒருவரி உரை (அறத்துப்பால்)’ என்னும் பெயரில் 2014இல் வெளிவந்தது.

   வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொண்ட இந்த முயற்சியால் தூண்டப்பட்ட பேராசிரியர் திருக்குறள்தேனீ வெ. அரங்கராசன் அவர்கள், திருக்குறள் முழுமைக்கும் குறிப்பிட்ட வரைவோடு ஒருவரி உரை காணும் முயற்சியை மேற்கொண்டார். அந்த முயற்சியின் விளைவுதான் அன்னாரின் ‘திருக்குறள் அறுசொல் உரை’ என்னும் இந்நூல்.

   இந்நூல், திட்டமிட்ட வரைவோடு கூடிய பிறிதொரு வளர்ச்சி நிலை எனலாம். பெரிதும் ஆறு சொற்களுக்குள் ஒருவரி வழங்கும் போக்கைத் திட்டமிட்டு மேற்கொண்டு, கடுமையாக உழைத்து, இந்த அரிய நூலை வழங்கியுள்ளார் பேராசிரியர் திருக்குறள்தேனீ வெ. அரங்கராசன் அவர்கள்.

      இந்த நூலின் தனிச்சிறப்புகள்:

  1. எளிய சொற்கள்
  2. சிறிய சிறிய சொற்கள்
  3. தூய தமிழ்ச் சொற்கள்

ஆகியவற்றைப் பயன்படுத்தியமை என்னும் பெருமிதத்தை இந்நூல் பெற்றிருப்பது. பிறமொழி கலந்து பேசுதல் கூடாது என்பதைத் தம் வாழ்க்கையில் இலக்காக் கொண்ட பேராசிரியர் அவர்கள், அந்த இலக்கை தம் நூலிலும் நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளார்.

      இந்த நூலின் பிறிதொரு சிறப்பு, பல குறள்களுக்கான புதிய உரைப் பார்வை. திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்துள்ள உரைகளை முடிந்த அளவு பார்வையிட்டு, ஒவ்வொரு குறளையும் தாமே ஆய்ந்து, புதிய உரைகள் கண்டு, அவற்றை அறுசொல் உரை ஆக்கியுள்ளார். அதில் வழிகாட்டியும் விளங்குகிறார்.

     இந்த உரை, சமயம் சாரா உரை; பொதுமறையாம் திருக்குறளின் பொதுமைக்கு ஏற்ற உரை; உலகப் பார்வையில் மலர்ந்த உரை; ஆய்வு உரை.

    திருக்குறளை நுட்பமாகக் காணும் ஆற்றல் படைத்த பேராசிரியர் திருக்குறள்தேனீ வெ. அரங்கராசன் அவர்கள், தம் முயற்சியில் —முனைப்பில் இந்நூல்வழி வெற்றி கண்டிருப்பது போன்று, திருக்குறளுக்கு நூல்கள் பல வழங்கி, வரலாற்றில் நிலைபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கு.மோகனராசு    

பேரா.வெ.அரங்கராசன்

பேரா.வெ.அரங்கராசன்

முனைவர் கு.மோகன்ராசு

முனைவர் கு.மோகன்ராசு