மலைக்கவைக்கும் செல்லினம் செயலி!

 

sellinam02

 

 

muthu nedumaran03’செல்பேசி இல்லாதவர்கள், செல்லாதவர்கள்’ என்று ஆகிவிடும் போல உலகம் முழுவதும் நிலைமை மாறிவருகிறது. அலைபேசியின் பயன்பாட்டைப் பெருக்குவதற்காகத் தொலைத்தொடர்பு வல்லுநர்கள் இடைவிடாது ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழர்களும் இதற்குச் சளைத்தவர்கள் இல்லை என்பதை மெய்ப்பித்து வருகிறார், மலேசியாவைச் சேர்ந்த கணினிக் கணிய(மென்பொருள்) வல்லுநர், முத்து நெடுமாறன். தமிழில் இணையம் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கணினித் தமிழ்த் துறையில் களம் இறங்கி, இன்று உலக அளவில் முன்னணி எழுத்துரு வல்லுநர்களில் ஒருவராகப் பாராட்டப்படுகிறார். அலைபேசிகளில்  தமிழைப் பயன்படுத்துவதற்கான ’செல்லினம்’ என்ற  கட்டணமில்லா மென்பொருள், தமிழ் மன்பதைக்கு இவர் அளித்த அறிவுக்கொடை!

 

‘சோனி எரிக்சன்’  அலைபேசி நிறுவனத்தின்  துணையுடன், 2005 ஆம் ஆண்டு சிங்கப்பூரில், சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிலையத்தாருடன் இணைந்து இந்தச் செயலி வெளியிடப்பட்டது.

 

உலகம் போற்றும் இந்தக் கணினி வல்லுநருடன் இணையவழியில் உரையாடியபோது, பிற மொழி கலக்காமல், மிக இயல்பாகத் தமிழிலேயே அவர் பேசியதை, என்ன சொல்ல!

 

இனிச் செவ்விக்குப் போவோம்! – இரா.தமிழ்க்கனல்

 

?] அலைபேசிகளில் ஆங்கிலம் மட்டும்தான் உலக அளவில் இருக்கிறதா? மற்ற மொழிகள் இருந்தால், எவை எவை? எந்தெந்த நாடுகளில்? எந்த இனக் குழுக்கள் இதில் பிடியாக இருக்கின்றன? அவர்கள் தங்கள் தாய்மொழியில் பயன்படுத்துவதில் எவ்வளவு ஈடுபாடு காட்டின? அத்தகையோருள் எந்த நாட்டினர், இனத்தினர் முன்னிலையில்?

 

 

   கணினிகளைப்போல் அலைபேசிஅலைபேசியும் படிப்படியாகத்தான் வளர்ச்சி கண்டது. அதன் தொடக்கக் கால உருவாக்கம் பேசுவதற்கு மட்டுமே இருந்தது.  இப்பொது மற்ற செயல்களுக்கிடையே பேசுவதும் ஒரு செயலே!

   பேசுவதற்கு மட்டும் உருவாக்கப்பட்டக் காலத்தில் மொழி ஒரு தடையாகவே இருந்ததில்லை. யார் வேண்டுமானாலும் எந்த மொழியிலும் பேசலாம். அலைபேசிகளில் எழுத்து என்பது முதன் முதலில் வந்தது muthu nedumaran04குறுஞ்செய்திச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டப் போதுதான்.  பேசுவதை விட இந்தச் சேவைக்குச் செலவு குறைவு. மேலும் குறிப்புச் செய்திகளை உடனுக்குடன் சொல்வதற்கு இந்தக் குறுஞ்செய்திச் சேவை மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்தது.

   இந்தக் காலத்தில் ஆங்கிலத்தை அடுத்து, அலைபேசிகளை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் பேசப்படுகின்ற மொழிகளையே முதலில் சேர்த்தார்கள். இலத்தின் எழுத்துகளைக் கொண்டு எழுதும் மொழிகள் முதல்நிலை வகித்தன. மொழியின் நடைமுறை எளிமை மட்டுமல்லாது பொருள்சார் வல்லமை கொண்ட பயனர்கள் இருந்ததால் இந்த முயற்சிகளுக்கு அதிகம் வரவேற்பு இருந்தது – இருந்தும் வருகிறது.

 

   அடுத்தது ஆங்கிலத்தில் சிசேகே(CJK). என்று சுருக்கமாக அழைக்கப்படும் சீசகொ- சீன, சப்பான், கொரிய – மொழிகள். இந்த நாடுகளில் அவரவர் மொழியில் குறுஞ்செய்திகளை அனுப்ப இயலவில்லை என்றால் அந்த அலைபேசிகள் அங்கு விலைபோகாது. யாரும் வாங்கமாட்டார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது – ஆனால் அவரவர் மொழிகளில் தொழில்நுட்பத்தை நன்கு புழங்கி வருகிறார்கள். இது போலவே அரபு மொழி, தாய்லாந்து மொழி போன்ற மொழிகள் அலைபேசிகளின் திரைகளில் தெளிவாகத் தோன்றின.

 

தமிழ் முதலிய இந்திய மொழிகள், தொடக்கக்காலக் கருவிகள் சிலவற்றில் சேர்க்கப்பட்டாலும், அவற்றின் பயன்பாடு மிகவும் குறைவாகவே இருந்தது. இதற்குப் பல காரணங்களைக் கூறலாம்.

 

   இந்தியாவில் இந்தக் கருவிகளை வாங்குபவர்களுக்கிடையே ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இப்பது, எல்லாக் கருவிகளிலும் இந்திய மொழிகள் இயல்பாக இல்லாதது, அலைபேசிச் சேவை நிறுவனங்கள் தமிழிலும் மற்ற மொழிகளிலும் போதிய உள்ளடக்கங்களை வழங்காதது … இவை சில காரணங்கள்.

   திறன் பேசிகள் (smart phones) வந்த பிறகுதான் – அதுவும் அவற்றின் விலை ஓரளவு குறைந்த பிறகுதான் – புழக்கத்தில் இருக்கும் உலக மொழிகள் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இது இன்னும் முழுமை பெறவில்லை .. ஆனால் வேகமாக வளர்ந்து வருகிறது.

 

   பயன்பாடு என்று நோக்கினால், கையடக்கக் கருவிகளுக்கு இணையம் வந்த பிறகுதான் தாய்மொழிப் பயன்பாடு அதிகரித்தது வருகிறது என்று சொல்லலாம்.

    குறுஞ்செய்தி என்று கூறினால் ஆங்கிலத்தின் ஆதிக்கம் தான் – சீசகொ. தவிர.

?] தமிழில் கொண்டுவர வேண்டும் என உங்களுக்கு எப்போது, எந்தச் சூழலில் சிந்தனை தோன்றியது. உடனடியாகச் செய்தீர்களா? முடிந்ததா? இந்த அருவினை எப்படி நடந்தது

  நான் எப்போதுமே தமிழை முதலில் பார்ப்பவன். அதன் பிறகுதான் கருவியின் மற்றக் கூறுகளை நோக்குபவன். எனவே தமிழ் இல்லாத ஒரு கருவி ஒரு முழுமையான கருவியாகவே எனக்குத் தோன்றாது.

அவற்றை ‘முழுமை படுத்தும்’ முயற்சியே என் முதல் முயற்சியாக அமையும்.

 

‘சாவா’ என்னும் பொ.நி.(பொருள்நோக்கு நிரல்)மொழித்  தொழில்நுட்பம் அலைபேசிகளில் சேர்க்கப்பட்டபோது, என்னைப்போன்ற தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பும் எண்ணியவற்றை எய்த ஒரு புதிய களமும் கிடைத்தது.

பொ.நி.(‘சாவா’) தொழில்நுட்பத்தைக் கொண்டு கணினிகளில் உருவாக்குவதைப் போலவே அலைபேசிகளிலும் செயலிகளை உருவாக்கலாம். அதுவும் குறுஞ்செய்திகளை அனுப்பும் குறுஞ்செயலிகளையும் உருவாக்கலாம் என்ற செய்தி வந்ததும் எனக்கு முதலில் தோன்றியது தமிழ்க் குறுஞ்செய்திச் சேவைதான்.

மலேசியாவில் 2003ஆம் ஆண்டு மெக்சிசு நிறுவனம் தொடங்கிய அலைபேசி மேம்பாட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்ட முதல் 8 கணிய(மென்பொருள்) மேம்பாட்டாளர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் முதன் முதலில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செயலியை உருவாக்கத் தொடங்கினேன். ஆனால் இந்தச் செயலியை பொதுப் பயனீட்டுக்குக் கொண்டுவருவதற்கு இரண்டு ஆண்டுகள் பிடித்தன. இதற்குக் காரணம் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்ப உதவும் கூறுகளைக் கொண்ட அலைபேசிகளின் எண்ணிக்கை அதுவரை மிகவும் குறைவாக இருந்ததே!

 

இந்தச் செயலிதான் 2005ஆண்டு சிங்கப்பூரில் ‘செல்லினம்’ என்று அறிமுகமானது. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலி நிலையத்தாருடன் ‘சோனி எரிக்சன்’ அலைபேசி நிறுவனத்தின் ஆதரவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வாழ்த்துரையுடன் வெளியிடப்பட்டது.

?]தனியாகவே செய்தீர்களா? குழுவினர் உதவியுடனா? உடனிருந்து ஊக்கப்படுத்தியவர்கள், தூண்டுகோலாக இருந்தவர்கள்? விவரங்கள்.

   தமிழ் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் எனது முழு மன நிறைவிற்காக நான் செய்பவை. ஒருசில முயற்சிகளைத் தவிர எல்லா முயற்சிகளையும் முழுமையான வணிக நோக்கில் செய்யவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை இந்தியாவில் இருந்திருந்தால் பெரிய அளவில், வணிக நோக்கில் செய்யவேண்டும் என்ற சிந்தனை தோன்றியிருக்கலாம்.

 

  மேலும் இந்தத் துறையை விரும்பி வருபவர்கள் மிகக் குறைவு. வருபவர்கள் நிலைத்து நிற்பது அதைவிடக் குறைவு. எனவே ஒரு குழுவாக இருந்து தொடர்ச்சியாக செய்வதற்கான வாய்ப்பு அவ்வளவாக இல்லை. என்னுடைய முயற்சிகளெல்லாம் தனிப்பட்ட முயற்சிகளே. எனினும், ஊக்கம் ஊட்டுபவர்கள் பலர் இருந்தார்கள்; இருந்தும் வருகிறார்கள்.

tablet01

முதன் முதலில் ‘முரசு’ என்ற மென்பொருளை உருவாக்கிய ஆண்டு 1985. இந்தச் செயலிக்கு ‘முரசு’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறி ஊக்கம் கொடுத்தவர் திருமதி சரோசினி சுந்தரராசு. அதனைத் தொடர்ந்து 1986ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளியில் இந்தக் கணினியைப் பயன்படுத்த வேண்டும் என்று பெரும் முயற்சியை எடுத்து ஒரு விழாவையே ஏற்பாடு செய்திருந்தார் அந்தப் பள்ளியின் அப்போதைய தலைமையாசிரியர் மறைந்த திரு தங்கவேலு.  அதே ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற 6 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் என்னுடைய கணியம்(மென்பொருள்) குறித்து ஒரு கட்டுரையைப் படைத்தேன். அரங்கில் இருந்த எனது அப்பாவின் நண்பர் எழுத்தாளர் முனைவர் இரெ. கார்த்திகேசு தமது புதிய கணினியில் தமிழ் வேண்டும் என்று கேட்டார்.  இவர்தான் முரசு கணியத்தின் முதல் தனியாள் பயனர்; தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

 

    முரசு கணியத்தின் வளர்ச்சியில் மிகப் பெரிய மேம்பாடு 1980களின் இறுதியில் ஏற்பட்டது. முதன் முதலில் ஒரு மாத இதழ் முழுக்க முழுக்க முரசு கணியத்தைக் கொண்டே வெளியிடப்பட்டது. “மயில்” என்ற அந்த இதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியர் திரு ஆ. சோதினாதன் அவர்களின் பேராதரவில் முரசு கணியத்தின் இந்தப் புதிய பதிப்பு வெளிவந்தது. அதன்பிறகு பல மாத வார இதழ்களும் நாளிதழ்களும் முரசு கணியத்தின் துணையோடு வெளிவரத் தொடங்கின. எனது நண்பர்களான திரு இராசகுமாரன், மலேசியக் கல்வி அமைச்சின் திரு ம கோவிந்தன் போன்றோரின் அன்பும் ஆதரவும் இன்றும் எனக்கு பெரிய உந்துதலாக அமைந்து வருகிறது.

  முரசு கணியத்தின் மேம்பாட்டுக்கு பலரின் பங்கு உண்டு. எனது குடும்பத்தார் மட்டும் அல்லாமல் பல நண்பர்கள் நல்ல எண்ணத்துடன் அவ்வப்போது உதவி வந்தார்கள்; உதவி வருகிறார்கள். அவர்களின் பங்கைப் பட்டியலிட்டால் ஒரு புத்தகத்தையே எழுதிவிடலாம். எழுதவேண்டும்!

?]  மலேயாவில் பிற மொழியினர் அலைபேசிகளில் அவரவர் மொழியைப் பயன்படுத்துகிறார்களா? எப்போது இருந்து? அரசின் ஊக்கம் எப்படி? உங்கள் முயற்சிக்கு ஊக்கம் எப்படி? அதை எதிர்பார்க்காமலேயே செய்ய முடிந்ததா?

  மலேசியாவில் நான்கு முக்கிய மொழிகள் உள்ளன: மலாய் (தேசிய மொழி), ஆங்கிலம், சீனம், தமிழ். மலாயும் ஆங்கிலமும் இலத்தின் எழுத்துகளில் எழுதப் படுவதால் ஆங்கிலத்தில் உள்ள பெரும்பாலானத் தொழில்நுட்பக் கூறுகள் மலாய் மொழிக்கும் பயன்படும். மேலும் தேசிய மொழி என்பதாலும் புழங்குபவர்களின் எண்ணிக்கை மிகுதியாய் இருப்பதாலும் மலாய் மொழியிலேயே இடைமுகங்களைக் கொண்ட அலைபேசிகள் பல காலமாகவே இருந்து வருகின்றன. மேலும், ஆங்கிலத்தில் குறுஞ்செய்திகளை அனுப்பும் போது சுருக்கி எழுதுவதைப் போலவே மலாயிலும் எழுதுகிறார்கள். எனவே பயன்பாட்டில் ஆங்கிலத்துக்கு நிகராக மலாய் இருக்கிறது என்று சொல்லலாம்.

 

   சீனர்கள் மொழிப்பற்று மிக்கவர்கள். ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தாலும் சீனர்களுக்கிடையே பேசிக் கொள்ளும் போது சீனத்தில் தான் பேசிக்கொள்வார்கள். சீன மொழி இயல்பாக அலைபேசிகளில் இருப்பதாலும் அலைபேசிச் சேவை நிறுவனங்கள் சீனத்திலும் உள்ளடக்கச் சேவைகளை வழங்குவதாலும் இந்த மொழியின் புழக்கமும் அதிகமாகவே உள்ளது.

   தமிழில் குறுஞ்செய்திகள் அவ்வளவாக இல்லை. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வாழ்த்து அனுப்புவதோடு சரி. அதுவும் படச் செய்திகளாகத்தான் வரும்(Picture Messages).  இருப்பினும் திறன் பேசிகள் வந்த பிறகு, தமிழில் உள்ளடக்கங்களைப் பெறவும் முகநூல், குரல்நூல்(டுவிட்டர்)போன்ற நட்பூடகத் தளங்களில் தமிழில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் இப்போது பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

   குறிப்பாகச் செல்லினம் ஆண்டிராய்டு இயங்குதளக் (android) கருவிகளில் இயங்கத் தொடங்கியதும், அது வழங்கும் முன்கூறும் வசதியைக் கொண்டு (predictive text), எளிமையாகவே தமிழில் எழுதுகிறார்கள்.

?] உங்களின் முரசு அஞ்சல் முயற்சிக்கும் மென்பொருள் ஆக்கத்துக்கும் அரசுத் தரப்பில் என்ன வகையான ஊக்கம், ஆக்கம் கிடைத்துள்ளது? எந்த அளவுக்கு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

 

அரசு தரப்பில் ‘தமிழ்ச் செயலிகள் வளரவேண்டும்’ என்ற நோக்கில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை; நானும் எதிர்பாக்கவில்லை. ஆனால், 2002,  2003 ஆம் ஆண்டுகளில் மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ்க் கணியம் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில், தேர்வு முறையில், முரசு அஞ்சல் செயலியைத் தேர்ந்தெடுத்தார்கள். இது எனக்குப் பெரிய ஊக்கத்தை அளித்தது. இதுபோலவே, 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சும் அவர்கள் தமிழ்த் தேவைக்கு முரசு அஞ்சல் செயலியையே தேர்ந்தெடுத்தார்கள்.

 

?]  சிங்கப்பூரில் செல்லினத்துக்கு என்ன மாதிரியான வரவேற்புஅங்கு இப்போது எவ்வளவு விழுக்காட்டினர், அலைபேசிகளில் தமிழைப் பயன்படுத்துகின்றனர்?

 

இ-பேசி/ஐஃபோன் கருவியில் செல்லினத்தின் பதிவிறக்கம் சிங்கப்பூரில் தான் அதிகமாக இருக்கிறது. திறன்பேசிகளை ஒரு திட்டத்தோடு வாங்கினால் அவற்றின் விலை இங்கு மிகவும் குறைவாக இருக்கும். எனவே பலர் திறன்பேசிகளை வாங்கி அவற்றில் செல்லினத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்கிறார்கள்iphone02.  ஆனால் எத்தனை பேர் நாள்தோறும் பயன்படுத்துகிறார்கள் எனும் புள்ளிவிபரம் கிடைப்பது கடினம். முகநூலில் தமிழில் செய்திகளைப் பார்க்கும் போது பலர் அவரவர் கையடக்கக் கருவிகளில் இருந்து எழுதுகிறார்கள் என்று தெரிகிறது. இது மேன்மேலும் பெருகும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

 

?]  நான் தமிழகத்தில் இருக்கும் இயல்பான அலைபேசிப் பயன்பாட்டாளன். நான் தமிழை இதில் பயன்படுத்த என்னென்ன செய்யவேண்டும்? அதாவது, என்ன வகை அலைபேசி வைத்திருக்கவேண்டும்? ப்படிக் கணியத்தை உள்ளிடுவது, பயன்படுத்தத் தொடங்குவது? இதன் மூலம் என்னென்ன செய்யலாம். வழமைக்கு மாறான கூடுதல் பயன்கள் இதில் ஏதேனும்…

 

  குறுஞ்செய்திகளுக்கு அப்பால் பலவாறான செயலிகளில் தமிழில் தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்றால் உங்களிடம் திறன் அலைபேசி இருக்க வேண்டும். இப்போதெல்லாம் ஐயாயிரம் உரூபாய்க்குக் குறைவாகவே ‘ஆண்டிராய்டு வகைக் கருவிகளை வாங்கிவிடலாம்.  குறிப்பாக இணையம், மின்னஞ்சல், சிறு கட்டுரைகள், நட்பூடகங்கள் போன்ற செயலிகளில் தமிழ் எழுத்துகளைக் கொண்டே தகவல் பறிமாற்றம் செய்துகொள்ளலாம்.

 

   தமிழ் எழுத்துகள் சரிவரத் தோன்றும் ஆண்டிராய்டு கருவிகளில் ‘செல்லினம்’ எனும் செயலியை இலவசமாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் வழி தமிழில் எளிதாக எழுதலாம்.

   அலைபேசிகளில் தமிழ் என்றால் குறுஞ்செய்திகளையே குறியிடுகிறார்கள். தமிழ் வசதியுள்ள அலைபேசிகள் பலரிடம் இல்லாததால் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்ப இயலவில்லை என்ற காரணத்தை மட்டும் கூறிக்கொண்டு இருந்தால் வேறு எந்த வகையில் கையடக்கப் பயன்பாட்டில் தமிழை நாம் வளர்ப்பது?

 

   குறுஞ்செய்தியை விட்டுவிடுங்கள். மின்னஞ்சல் உள்ளது, இணையம் உள்ளது, விக்கிப்பீடியா உள்ளது, முகநூல் உள்ளது குரல்நூல் உள்ளது – இவை எல்லாம் மொழிக்கு அப்பாற்பட்ட செயலிகள். இவற்றில் தமிழில் எழுதலாமே!

கணினிகளின் பலவாறான பயன்களை இப்போது கைக் கணினி (tablet) வகைக் கருவிகள் செய்யத் தொடங்கிவிட்டன. கணினிகளில் காலம் கடந்து வந்த தமிழ் இந்தக் கையடக்கக் கருவிகளில் மிக விரைவாகவே வந்துவிட்டது.

 

அதன் மேம்பாடு இனித் தொழில்நுட்ப வல்லுநர்களின் கையில் மட்டுமல்ல – பயனர்களின் கையிலும் உள்ளது. என்னதான் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழைப் பல நிலைகளுக்குக் கொண்டு சென்றாலும் பயன்பாடு இல்லை எனில் அந்த வளர்ச்சித் தொடராது.

?]  தமிழகத்தில் தமிழ்க் கணிமையை மேம்படுத்த என்னென்ன செய்யவேண்டும்? உங்கள் அறிவுரைகள்?

  தமிழ்க் கணிமை மேம்பட முதலில் தமிழ்க் கணிமையின் புழக்கம் மிகுதியாக வேண்டும்; அல்லது மிகுதியாக்கப்பட வேண்டும்.

 

  வணிக முறையிலான வரவேற்பு தமிழ்ப் பயன்பாட்டிற்கு இருந்தால் அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு யாரும் தனிபட்ட ஊக்கம் ஊட்டத் தேவையில்லை. திரைப்பட வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் முயற்சிகள் நடக்கின்றனவா? இல்லையே. மக்கள் விரும்பிப் பார்ப்பதனால் தயாரிப்பாளர்களிடையே ஒரு போட்டி மனப்பான்மை உள்ளது. எனவே திரைப்பட உருவாக்கத்தில் தொழில்நுட்பப் பயன்பாடு பெருகிக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே வந்த படத்தை விடச் சிறப்பான படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே வந்துவிடுகிறது.

  தமிழ்க் கணிமையின் பயன்பாடு அவ்வாறு இருந்தால் தொழில்நுட்ப வல்லுநர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு மேம்பாடுகளைக் கொண்டு வருவர்.

 

ஓரிருவர் மட்டும் பயன்படுத்தினால் போதாது. ஊரே பயன்படுத்த வேண்டும்.

  ‘சீரீ’ (siri) எனும் தொழில்நுட்பம் ஒன்று இ-பேசி / ஐஃபோன்-இல் 2011இல்  சேர்க்கப்பட்டது. இது நாம் பேசுவதை உள்வாங்கிக்கொண்டு, ஒலி வடிவில் இருக்கும் நமது செய்தியை எழுத்துகளாக மற்றி, அந்த எழுத்துகளைக்predective-text02 கட்டளைகளாகக் கொண்டு பல சேவைகளை வழங்கும். இதன்வழி நாம் இ-பேசி/ஐஃபோன்-இல் எழுத்துகளைத் தட்டச்சிடத் தேவையில்லை. பேச்சுவழியாகவே அதனிடம் வேலை வாங்கலாம்! (குறிப்பு: சிரீ என்றால் நார்வே மொழியில் வாகைக்கு அழைத்துச் செல்லும் அழகு மங்கை எனப் பொருள். எனவே, வாகைஅழகி வாகி எனலாம். – ஆசிரியர்)

 

  தொடக்கத்தில் ஆங்கிலத்தை மட்டும் புரிந்துகொண்ட இந்த ‘சீரீ’ காலப்போக்கில் சீனம், சப்பான் உட்பட பல மொழிகளையும் புரிந்துகொள்ளும் வல்லமையைப் பெற்றுள்ளது. தமிழ் இல்லை!

  இதுபோன்ற தொழில்நுட்பங்கள் விலை உயர்ந்த கருவிகளில் தான் கிடைக்கும் என்ற காலம் மாறிவிட்டது.

 

   அது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு அலைபேசியை வாங்கும் போது, “தமிழில் செய்திகள் சரிவரத் தோன்றுமா?” iphone01என்று கேட்டு வாங்குபவர் எத்தனைபேர்? இந்தியாவிற்கு வரும்போதெல்லாம் அங்குள்ள அலைபேசிக் கடைகளுக்குச் சென்று நான் கேட்கும் கேள்வி இதுதான்: “இந்தக் கடைக்கு வருபவர்களுள் எத்தனை பேர் ‘தமிழ் வேண்டும்’ என்று கேட்டுக் கருவிகளை வாங்குகிறார்கள்?” இதற்குக் கிடைக்கும் மறுமொழி: “யாரும் கேட்கிறதில்லையே”. இன்னும் சொல்லப்போனால் கடைக்காரர்களுக்குக் கூட எந்தெந்தக் கருவிகளில் தமிழ் இருக்கிறது என்பது தெரியாது. எனவேதான் தொழில்நுட்ப மேம்பாடுகளைவிடப் பயன்பாட்டை மிகுதியாக்கும் – ஊக்குவிக்கும் முயற்சிகளே அதிகம் தேவைப்படுகிறது.

 

  தொலைக்காட்சிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்ச்சிகளில் ஒன் றைத் தமிழில் வரும் குறுஞ்செய்திகளை மட்டும் ஏற்கும் நிகழ்ச் சியாக அமைக்கலாமே! இதுபோலத் தமிழில் எழுதுவதை ஊக்குவித்தாலே போதும். தமிழ்க் கணிமைத் தானாக வளரும்!” என்கிறார், கணித்தமிழ் மூத்தமுனைவர் முத்து நெடுமாறன்.

 

சொல்வதற்கு இன்னும் நிறைய செய்திகள் வைத்துள்ளார். அவரின்

http://sellinam.com/ இணையத்தளத்தில்

அல்லது

 https://www.facebook.com/sellinam முகநூலில் காண்க

sellinam01