மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 4
( 22.11.2044 / 08.12.13 இதழின் தொடர்ச்சி)
எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழிழ மக்களே, இன்றைய நாள் எமது தேசத்து விடுதலை வீரர்களின் நினைவு நாள். தாயக விடுதலையை தமது உயிரிலும் மேலாக நேசித்து, அந்த இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த எமது தேசத்தின் விடுதலை வீரர்களை இன்று நாம் எமது இதயத்துக் கோயில்களில் சுடரேற்றிக் கௌரவிக்கிறோம். எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள்.
எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத் தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் வரலாற்றின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் விடுதலையாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த விடுதலை நாடு வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த விடுதலை நாட்டின் உயிர்ப்பாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தைக் கவர்ந்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தைப் பறித்து, அதன் வளங்களை அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை ஏதிலியர்
குவது இன்னொரு புறமுமாக, எமது நிலம் மீதுகொடுமை நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே நாம் போராடுகிறோம். ஆகவே, கருத்தடிப்படையில், எமது விடுதலைப்போரானது ஒரு மண்மீட்புப் போராகும். எமக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு, அந்த நிலத்தில் எமது ஆட்சியுரிமைiயை, இறைமையை நிலைநாட்ட
நடைபெறும் போர்.
– மாவீரர் நாள் உரை – 1999
யாழ்ப்பாணம் சிங்களத் தேசத்திற்கு உரித்தானது அல்ல. யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது. இறையாண்மை என்பது ஒரு அரசின் தெய்வீக சொத்துரிமையல்ல. இறையாண்மையானது மக்களிடம் இருந்தே பிறக்கிறது. அது மக்களுக்கே சொந்தமானது. யாழ்ப்பாணத்தின் இறையாண்மை யாழ்ப்பாண மக்களுக்கே உரித்தானது.படையாளுமைக் கவர்வு மூலம் தமிழரின் வரலாற்று மண்ணில் சிங்களத்தின் இறையாண்மையைத் திணித்துவிட முடியாது. தமிழரின் விடுதலைப்படை என்ற முறையில், நாம் எமது மண்ணில் அயலவர் ஆளுமைக் கவர்தலுக்கு இடமளிக்கப்போவதில்லை. எத்தனை அறைகூவல்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தகைய ஆற்றல்கள் எதிர்த்து நின்றாலும் எமது விடுதலை இயக்கம் யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தே தீரும். . . . . . . .
. . . . . . . தமிழீழப் போரானது ஒடுக்கப்படும் தமிழ் மக்களின் விடுதலைப் போர் என்ற இயல்பான அரசியல் உண்மையை சிங்கள அதிகாரஇனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இந்த மறுதலிப்புத்தான் தமிழரின் இன உரிமையைச் சிக்கலாக்கி வருகிறது. இதுதான் போரை முனைப்பாக்குவதற்கும் காரணமாக இருக்கிறது. இதுதான் இனச்சிக்கலுக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்குப் பெரும் முட்டுக்கட்டையாகவும் இருந்து வருகிறது. அமைதி வழியில் தமிழரின் தேசிய இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு எமது விடுதலை இயக்கம் ஆயத்தமாக இருக்கிறது. நாம் அமைதி வழிமுறைகளுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேவேளை, நாம் அமைதிப் பேச்சுகளில் பங்குபற்றத்தயங்கவும் இல்லை. அமைதி வழிமூலம் கிட்டப்படும் தீர்வானது நியாயமானதாக, நீதியானதாக, சமத்துவமானதாகத் தமிழரின் அரசியல் விழைவுகளை நிறைவு செய்வதாக அமையவேண்டும் என்பதே எமது விருப்பம்.
– மாவீரர் நாள் உரை – 2000
அடக்குமுறையாலும் ஆயுத வலிமையாலும் தமிழரின் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும் என்ற மனநிலையே சிங்கள அரசியல் உலகில் மேலோங்கி நிற்கிறது. இதன் காரணமாக எந்தவொரு சிங்களக் கட்சியிடமும், தமிழரின் சிக்கலுக்கு நிலையான தீர்வுகாணும் அணுகுமுறையோ, கொள்கைத் திட்டமோ இருக்கவில்லை.
இந்த உண்மை பன்னாட்டு மன்பதைக்குத் தெரியாததல்ல. தமிழர் சிக்கலுக்கு அமைதி வழிமூலமான தீர்வை வலியுறுத்தும் உலக நாடுகள், அதேசமயம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அரசியல் வழியிலும் படையாளுமை மூலமாகவும் வலிமைகுன்றச் செய்யும் சிறீலங்காவின் அரசதந்திர நகர்வுகளுக்கும் போர் முயற்சிகளுக்கும் முண்டுகொடுத்து உதவத் தவறவில்லை. உலக நாடுகளின் இந்த முரண்பாடான அணுகுமுறையும் தமிழரின் சிக்கல் தீராது இழுபடுவதற்கு ஒரு காரணம் எனலாம்.
நாம் சிங்கள மக்களுக்குப் பகைவர்கள் அல்லர். எமது போராட்டமும் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அடக்குமுறைக் கொள்கை காரணமாகவே தமிழ், சிங்கள இனங்கள் மத்தியில் முரண்பாடு எழுந்து போராக வெடித்திருக்கிறது. ஆயுத வலிமையால் எமது மக்களை அடிமைகொள்ள முனையும் அரசுக்கும் அரச படைகளுக்கும் எதிராகவே நாம் போர் புரிந்துவருகிறோம். இந்தப் போரானது தமிழ் மக்களை மட்டுமன்றி சிங்கள மக்களையும் ஆழமாகப் பாதித்து வருகிறது என்பது எமக்குத் தெரியும். போர்வெறிகொண்ட அதிகாரஇனத்தின் அடக்குமுறைக்கொள்கையால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிச் சிங்கள இளைஞர்களும் நயன்மையின்றிக் கொல்லப்பட்டுவருகிறார்கள். அதுமட்டுமன்றி, இனப்போரினால் எழும் பொருளாதாரப் பளுவை சிங்களப் பொது மக்களே சுமக்கவேண்டியுள்ளது என்பதும் எமக்குத் தெரியும். எனவே இக்கொடிய போருக்கு முடிவுகட்டி, நிலையான அமைதியை நிலைநாட்டுவதாயின் போர் வெறிகொண்ட இனவாத ஆற்றல்களை இனம்கண்டு ஒதுக்கிவிடுவதோடு, தமிழ் மக்களுக்கு நீதி வழங்கவும் சிங்கள மக்கள் முன்வரவேண்டும்.
தமிழ் மக்கள் தமது இனத்துவ அடையாளத்துடன் தமது சொந்த மண்ணில் வரலாற்று அடிப்படையில் தாம் வாழ்ந்துவந்த தாயக மண்ணில், மனநிறைவுடன், அமைதியாக, மதிப்புடன் வாழவிரும்புகிறார்கள். அவர்களது அரசியற் பொருளாதார வாழ்வை அவர்களே வடிவெடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். தம்மை அமைதியாகத் தம்பாட்டில் வாழவிடுமாறு கேட்கிறார்கள். இதுதான் தமிழர்களது அடிப்படையான அரசியல் விழைவு. பிரிவினைவாதமோ, பயங்கரவாதமோ அல்ல தமிழர்களது இவ்வேண்டுகை. சிங்கள மக்களுக்கு எந்தவகையிலும் ஓர் அச்சுறுத்தலாக அமையவுமில்லை. சிங்கள மக்களது அரசியல் உரிமைகளையோ விடுதலையையோ அவர்களது குமுகாய, பொருளியல், பண்பாட்டு வாழ்வையோ இவ்வேண்டுகையானது எவ்வகையிலும் ஊறுபடுத்தவில்லை. தமது சொந்த நிலத்தில் தம்மைத் தாமே ஆளும் ஆட்சியுரிமையோடு வாழ வழிவகுக்கும் ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். தன்வரையறு உரிமையின் அடிப்படையில் அரசியற் தீர்வு அமையவேண்டுமென அவர்கள் வலியுறுத்துவதும் இதைத்தான்.
மாவீரர் நாள் உரை – 2001
(தொடரும்)
Leave a Reply