தமிழ்த் தேசிய ஊடக உலகில்புகழ் பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசிஇரவிசங்கர் அவர்கள் காலமானார்.  பன்னாட்டு ஒலிபரப்பு அவையின் தமிழ் (ஐ.பி.சி) ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி இரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முகமாலையில் யாழ் – கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும்,ப.ஒ.அ.(ஐ.பி.சி) வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர்க் கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவரின் செய்தியாளர் மாநாட்டில்  இரண்டு ஊடகங்களின் சார்பாகவும் கௌசி இரவிசங்கர் கலந்து கொண்டார். 2010ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அனைத்துலக உயிரோடை தமிழ் (ஐ.எல்.சி) வானொலி தொடங்கப்பட்ட பொழுது மூன்று மாதங்களுக்கு அதன் செய்தி வாசிப்பாளராகக் கௌசி இரவிசங்கர் கடமையாற்றினார். தவிர 2003ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்  முதலான பல்வேறு எழுச்சி நிகழ்வுகளிலும், கலை நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஒருவராகவும் கௌசி இரவிசங்கர் திகழ்ந்தார். அண்மைக் காலமாக உடல்நலக் குறைவுக்கு ஆளாகியிருந்த கௌசி ரவிசங்கர் 18.11.2013 திங்கட்கிழமை மருத்துவமனையில் காலமானார். தமிழ்த் தேசிய ஊடக உலகைத் தனது குரலால் சிறப்பிக்க வைத்த ஒலிப்பரப்பாளர் கௌசி இரவிசங்கர் அவர்களை இழந்து தவிக்கும் அவரது துணைவருக்கும்,பிள்ளைகளுக்கும் குடும்பத்தினருக்கும்  ‘அகரமுதல’ ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

தரவு : முகநூல் வழி ஈழம் இரஞ்சன்