(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

6

காதலித்தாய் நீபெண்ணே அதனால் தானே

கண்;விழித்தேன் உன்மனத்தில்  இன்றே! என்னைப்

பேதலிக்க வைக்கின்றாய்! என்ஆ  சையில்

பெருநெருப்பைக் கொட்டுகிறாய்!  என்உள் ளத்தில்

ஆதவனாய் ஒளிவீசும் வெளிச்சக் காடே!

அச்சடித்த மறுபதிப்பு அகநா னூறே!

ஏதுமிலா ஈழத்தான் என்னை ஏற்றாய்!

என்சொந்தம் நீஎன்றேன் தவறா? கேட்டான்.

7

ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்!

இனஉணர்வுவின் பொங்கூற்று அவனின் உள்ளம்!

ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்!

இதயமெலாம் தமிழ்ப்பண்பின் குடியி  ருப்பு

ஏதுமிலா ஈழத்தான் எனச்சொல் லாதீர்!

எழுச்சிதரும் புறப்பாடல் அவனின் பாடல்

ஊதுளையாய் எழும்புகின்ற தமிழின் வேட்கை

உமக்கிருக்கும்  எனநம்பி மாலை யிட்டேன்

8

தாய்நாடாம் தமிழ்நாட்டின் தமிழ்ப்பெண் நானும்

தணல்கொதிப்பாய் தமிழுணர்வில் வளர்ந்தவள்நான்

சேய்ப் பருவநாள் தொட்டே குருதி ஓட்டம்

செந்தமிழே குடியிருப்பு! எந்தன் தந்தை

போய்சேர்ந்தார் மொழிப்போரில் செத்தார்! தாயோ

போர்க்களங்கள் கண்டுகண்டு தனைஇ ழந்தாள்!

நோய்பிடித்த நெஞ்சத்தார் எனைம ணக்க

நூறுநூறாய் வரிசையிட்டார்; நான் மறுத்தேன்

 

 

9

தன்னலத்தில் தனிநலத்தில் ஊறி ஊறி

தமிழ்மறந்தோன் தரும்தாலி எனக்கெ தற்கு?

தென்னகத்தின் பண்பாட்டை நாளுமிழ ந்தார்!

தினவெடுத்த தோள்மறந்தார்! அடிமை ஆனார்!

பொன்ஓளிரும் சங்கத்தை மறந்தே போனார்!

பொருள்தேடி நாயானார்! நித்தம் நித்தம்

கன்னமிடும் திருடனாகித்  தமிழ்ம றந்து

கால்நடையாய்த்  தாயகத்தின் தமிழன்  ஆனான்!

10

எலிவாலைக் கைபிடித்து யானை என்றான்!

எருக்கலையின்  நாற்றத்தை முல்லை என்றான்

புலிக்கொடியை வில்மீனை சுருட்டி வைத்து

புகழுக்குப் பதவியேற்று  இனம  றந்தான்

குவியலென ஈழத்தான் செத்தும் ஈங்கு

குரங்காட்டம் பதவியினைப்  பிடித்தான் தொங்கி!

புவியாண்ட தமிழினத்தான் தமிழ்நி  லத்தில்

புழுவாகி   நெளிந்தானே!  மேலும் சொன்னாள்.

11

இந்தியாவும் இலங்கையும் வேறு வேறு

இருநாடு! அந்நாட்டு விவகா ரத்தில்

முந்திரியாய்த் தலைநீட்டல் ஆகா தென்றார்

முழுவெறி சிங்களத்தான் கொலைகள் செய்து

பந்திவைத்தான் தமிழ்ச்சதையைத் தெருக்கள் தோறும்

பல்லிளித்து அதைஉண்டாள் பார  தத்தாய்!

சொந்தபுத்தி  இழந்தழிந்த  தமிழி  னத்தான்

சொரணையற்று இந்தியனாய்த்  தனைநி னைத்தான்.

12

இனம்செத்தும்  மொழிசெத்தும்  தமிழ்ப்பண் பாட்டின்

இருப்பெல்லாம் நாளும்செத்தும் ஈழ மண்ணின்

மணம்செத்தும் மறத்தமிழின்  வாசம் செத்தும்

மானமிகு தமிழச்சிக் கற்பும் செத்தும்

பணம்செத்தும் ஈழத்தான் வீடு  வாசல்

பரம்பரையாய் ஆண்டிருந்த சொத்தும் செத்தும்

மனம்வருத்த வில்லையடா இந்தி யாவும்

மடியட்டும் தமிழனென்ற நினைப்பில் தானே!

(தொடரும்)