ஆசியவியல் நிறுவனம்

திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

இலிவர்பூல், இங்கிலாந்து

ஆனி 13-15, 2049 சூன் 27 – 29, 2018

ஆரிய எதிர்ப்பே திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே!

கட்டுரையாளர்களே!

பேராயர் எசுரா சற்குணம், அமுதன் அடிகள், இலிவர்பூல் தமிழன்பர்கள், இலண்டன் தமிழன்பர்கள் முதலான அவையோரே! அனைவருக்கும் வணக்கம்.

    வாழ்வியல் அறநூலாகிய திருக்குறள் அனைவருக்கும் பொதுவான உலக நூலாகத் திகழ்கிறது. எனவே, உலக மக்களைப் பிளவுபடுத்தும் கருத்துகளுக்கு எதிரான அறஉணர்வையும் விதைக்கிறது.

    “திருவள்ளுவர் உலகின் முதல் புரட்சியாளர்” எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் கூறுகிறார். அவரே, தமிழ்நாட்டில் ஆரியத்தை எதிர்த்த முதல் புரட்சியாளர் திருவள்ளுவர் என்கிறார். சாதிப் பாகுபாட்டை வலியுறுத்தும் ஆரியத்திற்கு எதிராகத் திருவள்ளுவர் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” (குறள் 972) என முழங்கி உலக உயிரினங்கள் பிறப்பால் இணையே என்றார்.

  ஆரிய வேள்விக்கு எதிராக,

     அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

     உயிர்செகுத்து உண்ணாமை நன்று (குறள் 259)

என்கிறார் திருவள்ளுவர்.

   இவ்வாறு. பெண்களைப் பழிக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் உழைப்பாளிகளை இழித்துச் சொல்லும் ஆரியத்திற்கு எதிராகவும் மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஆரியத்திற்கு எதிராகவும் எனப் பல இடங்களில் ஆரியத்தைத் திருவள்ளுவர் எதிர்க்கிறார். எனினும் திருவள்ளுவர் தம் நூலின் தொடக்கத்திலேயே ஆரிய எதிர்ப்பை உணர்த்தியுள்ளார் என்பதை உலகம் உணரவில்லை. திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் ஆரிய நச்சுக் கருத்தை எதிர்க்கிறார்.

  திருக்குறள் முழுவதும் விரவிக்கிடக்கும் ஆரிய எதிர்ப்புக் கருத்துகளை அறிஞர்கள் பலரும் தத்தம் நூல்களிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றிற்கெல்லாம் அடிப்படையான சாதிக்கோட்பாட்டை – வருணாசிரமத்தை எதிர்க்கும் வகையில் திருவள்ளுவர் திருக்குறளைத் தொடங்கியுள்ளார் என்பதையே இங்கே நாம் காணப் போகின்றோம். இக்கருத்து யாவராலும் விளக்கப்படாததால் இங்கே வலியுறுத்துகிறோம்.

    ஆரியத்தின் ஆணிவேர் கருத்து சாதிவாழ்க்கை ஆகும். ஆரிய வேதம், மனு, கீதை, பாகவதம் முதலான ஆரிய நூல்கள் சாதிவாழ்க்கையை வலியுறுத்துகின்றன. வேதங்களில் சொல்லப்பட்ட உண்மைகளே மனுவில் சொல்லப்பட்டுள்ளன என மனு( 2: 7, 8) தெரிவிக்கிறது.

  யசூர் வேதம், புருசசூக்தம், 11, 12, 13 முதலிய  சுலோகங்களில், பிரமனின் முகத்திலிருந்து பிராமணர்களும்,  தோள்களிலிருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், பாதங்களிலிருந்து. சூத்திரர்களும் பிறந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (இ)ரிக்குவேதத்திலும் இது கூறப்பட்டுள்ளது.

    “பிரம்மா ஆனவர் உலக விருத்தியின் பொருட்டுத் தன்னுடைய முகம், தோள், தொடை, கால் இவற்றில் இருந்து பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களை வரிசையாக உண்டு பண்ணினான்”. (மனு அத்தியாயம் 1 / 31 ) என்று மனுநூலும் கூறுகிறது.

    மனுநூல் திருக்குறளுக்கு பிற்பட்டதுதான் எனினும் திருக்குறளுக்கு முந்தைய ஆரிய நூல்களும் பிற்பட்ட ஆரிய நூல்களும் இச்சாதி முறையைத்தான் வலியுறுத்துகின்றன.

    இதன் மூலம் கடவுளின் தலையில் (முகத்தில்) பிறந்த பிராமணன் உயர்ந்தவன் ஆவான். அதற்குக் கீழே உள்ள தோளில் இருந்து பிறந்த சத்திரியர்கள் அவர்களுக்குக் கீழானவர்கள். தலை, தோள், இரண்டிற்கும் கீழே உள்ள தொடையில் இருந்து பிறந்த வைசியர்கள் முதல் இரு வருணத்தார்களுக்கும் கீழ் ஆனவர்கள்.

     எல்லா உறுப்புகளுக்கும் கீழே உள்ள காலில் இருந்து பிறந்த சூத்திரர்கள் அனைவரிலும் கீழ் ஆனவர்கள்.

    இதுவே ஆரிய வருணாசிரமம். மனித உடலில் உயரத்தில் உள்ள தலையை உயர்வாகவும் கீழே உள்ள காலைக் கீழாகவும் ஆரியம் கற்பிக்கிறது. நமக்கு எல்லா உறுப்புகளும் சமம். அதுமட்டுமல்ல! உறுப்பில் குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் “உருவுகண்டு எள்ளாமை வேண்டும்” என்கிறார் திருவள்ளுவர் (குறள் 667).

   இறைவனின் உறுப்புகளிலிருந்து மனித இனம் பிறந்ததாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி ஆனால் காலில் பிறந்தவன் தாழ்ந்தவன் என்பது தவறு. காலைத் தாழ்வாகக் கருதுவதினாலே காலில் இருந்து பிறந்தவன் தாழ்ந்தவன் என்கிறது ஆரியம். எனவே ஆரியத்திற்கு எதிராகக் காலை உயர்வாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.

  “பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் உயர்ந்த இடத்தில் (முகத்தில்) பிறந்ததனாலும் இந்த உலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” என்கிறது  மனு (அத்.1.சு100).

    திருவள்ளுவர் , “தலையே ! நீ உயரத்தில் இருந்தாலும் கீழே உள்ள காலை வணங்கித்தான் ஆக வேண்டும்” என்கிறார். எனவே தலையில் பிறந்ததாகக் கற்பித்துக்கொண்டு உயர்வானவர்களாகக் கற்பிதம் செய்வோருக்குக் ‘கடவுள் வாழ்த்து’  அதிகாரத்தின் மூலம் திருவள்ளுவர் வலிமையான அடி கொடுக்கிறார்.

      திருக்குறள் நூலின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் 2,3,4,7,8,9,10 ஆகிய 7 குறட்பாக்கள் மூலம் காலை – தாளை – அடியை வணக்கத்திற்குரியதாகத் திருவள்ளுவர் கூ றுகிறார்.

    “கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

    நற்றாள் தொழாஅ ரெனின் (குறள் 2)

என்பது இரண்டாவது திருக்குறள். தூய அறிவுடைய ஆசிரியரின் தாளை – வணங்காவிட்டால் கற்றதனால் பயன் ஒன்றும் இல்லை என்கிறார். வாலறிவன் என்பது இறைவனைக் குறிப்பதாகக் கொண்டாலும் இறைவனின் தலையில் பிறந்திருந்தாலும் காலை வணங்க வேண்டும் என்கிறார். “நீ பிறந்ததாகக் கூறிக்கொள்ளும் இடம் உயரத்தில் இருந்தாலும் உயர்வானதல்ல; கால்தான் உயர்ந்தது. எனவே காலில் பிறந்தவனே உயர்ந்தவன்” என்கிறார் திருவள்ளுவர்.

  ஆகப் பிரமாணர் தம்மை உயர்வாகக் கருதாமல் காலில் பிறந்ததாகக் கூறப்படும் சூத்திரரை வணங்க வேண்டும் என்பதே வள்ளுவர் நெறி. எனவே, திருவள்ளுவர் காலை வணங்கத்தக்கதாக உயர்த்திக் கூறுகிறார்.

“இடைக்கு மேல் உடல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது” என மனு(1.92) கூறுகிறது. “மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றி யமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் பிராமணன் சிறந்து விளங்குகின்றான்” என்றும்  ஆரியத்தைச் சொல்கிறது மனு(1.93).

 இதன் மூலம் ஆரியம், பிராமணரைத் தூய முகத்தில் இருந்து பிறந்ததாகக் கூறிச் சிறந்தவராகக் கூறுகிறது.

  ஆனால், இதற்கு மாறாக, உலகில் நெடுங்காலம் வாழக் கூடிய சிறந்தவர்களாக, யாரைத் திருவள்ளுவர் கூறுகிறார் ?

    மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார் (குறள் 3 ) 

என்கிறார் திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்.

    திருவள்ளுவர், துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை வணங்க வேண்டும் என்கிறார்

      வேண்டுதல் வேண்டாமை யில்லா னடிசேர்ந்தார்க் கு

      யாண்டு மிடும்பை மில. என்பதே அக் குறள் (4)

 மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர் திருவடிகளைப்பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்,

    தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

    மனக்கவலை மாற்ற லரிது. (குறள் 7)

என்ற குறள் மூலம் உணர்த்துகிறார்

  பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் பணிதல் வேண்டும் என்கிறார்.

    அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லாற்

    பிறவாழி நீந்த லரிது என்னும் குறளில் (8) இதனை வலியுறுத்துகிறார்.

   தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?

    எண்ணிப் போற்றும் குணம் உடையவனின் தாளை வணங்காத தலை பயன்அற்றது என்கிறார். தலையே தாளை வணங்க வேண்டும் என்று சொல்லுவதன் மூலம் தலையில் பிறந்ததாக கூறிக் கொள்வோருக்குச் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்.

     கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்

     தாளை வணங்காத் தலை. (குறள் 9)

என்னும் திருக்குறள் உணர்த்துவது இது தான்.

  பிறவியில் ஏற்படும் துன்பக் கடலை யாரால் நீந்திக் கடக்க முடியும்?

     பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார்

     இறைவ னடிசேரா தார். (குறள் 10)

என்பதன் மூலம் நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அவர் நெஞ்சம் அல்லது வேறு உறுப்பைக் கூறாமல், காலடியைக் கூறுவதன் நோக்கமே கால்களின் உயர்வைக் கூறத்தான் எனப் புரிந்து கொள்ளலாம்.

    நற்றாள் (நல்ல கால்), மாணடி (மாண்புக்குரிய கால்) என்று காலை உயர்த்திக் கூறுவதன் மூலம் மனித உறுப்புகளில் கீழே உள்ள உறுப்பான காலில் பிறந்தவர்களே உயர்வானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். அடிசேர்தல், தாள் பணிதல் முதலானவை வெறும் வணக்கத்தை மட்டும் குறிக்கவில்லை. அவர்கள் வழியைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதுதான் முதன்மைக் கருத்து. அஃதாவது தலையில் பிறந்தவர்கள் காலில் பிறந்தவர்களைப் பின்பற்றிச் செல்லவேண்டும்.

   திருவள்ளுவருக்குச் சாதிபாகுபாட்டை உண்டாக்கும் வருணாசிரமக் கொள்கையில் உடன்பாடு இல்லை. சாதியே இல்லாத காலத்தில் சாதிப் பாகுபாடு எப்படி வரும்? அனைவரையும் ஒருவருக்கொருவர் இணையாகக் கருதும் தமிழ் நெறியைத்தானே திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இருப்பினும் ஆரியக் கருத்து செல்வாக்கு பெற்று, தலை தோள், தொடை, காலில் மனிதர்கள் பிறந்ததாக எண்ணி அதற்கேற்ப உயர்வு தாழ்வு கற்பிக்கும் போக்கு வேர் ஊன்றுமோ என்ற அச்சம் வந்து விட்டதால் தொலை நோக்குடன் சிந்தித்துள்ளார் எந்தக் காலை ஆரியர் இழிவாகக் கூறுகிறார்களோ அதை உயர்வாகக் காட்ட விரும்பி உள்ளார் அதற்கு என்ன வழி?  இழிவாக கூறப்படும் கால்களை வணங்கச்செய்வதுதான்? திருவடிகளை வணங்கச் செய்வதுதான்! கால் வணக்கத்திற்கு உரியது என்றால் அதில் பிறந்தவர்களும் வணக்கத்திற்கு உரியவர்கள்தானே! அப்படியானால் காலில் பிறந்தவர்கள் – சூத்திரர்கள்  எனச் சொல்லப்படுபவர்களை இழிவாகக் கூறாமல் காலில் பிறந்தவர்கள் என உயர்வாகத்தானே கருதிப் போற்ற வேண்டும்?  அவ்வாறே அவர்களை உயர்வாகத்தானே மதிக்க வேண்டும்.

  உலக அறவாணர் திருவள்ளுவர் மேற்போக்காக கல்வியிலும் பண்பிலும் உயர்ந்தோரை அல்லது படைத்தவரை வாழ்த்துவது போல் குறட்பாக்களை அமைத்துள்ளார். ஆனால் நுண்மையாகத் தான் வலியுத்த விரும்பும் உட்பொருளை அவற்றுள் பொதிந்து வைத்துள்ளார் முள்ளை முள்ளால் எடுத்துள்ளார். வருணாசிரமக் கருத்தை எதிர்ப்பதற்கு அதன் அடிப்படையையே கருவியாகக் கொண்டுள்ளார் வருணாசிரமத்தின் அடிப்படையிலான பிறப்பு முறையையே தகர்க்க விரும்பியுள்ளார். எனவேதான் ஆரியர்களால் இழிவாகக் கூறப்பட்ட  கால்களை உயர்த்திக்கூறியுள்ளார். கால்களை உயர்வாகக் கூறுவதன் மூலம் உயர்வான காலில் இருந்து பிறந்தவர்களும் உயர்வானவர்களே! வணங்கத்தக்கவர்களே என்கிறார்.

கடவுள் வாழ்த்து மூலம் ஆரியத்தின் பிறப்பு அடிப்படையிலான சாதிக் கோட்பாட்டை  எதிர்த்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், பின்னரும் அதை வலியுறுத்துகிறார். “சூத்திரன் சுவர்க்கத்திற்காவது சீவனத்திற்காவது அல்லது இரண்டிற்குமாவது பிராமணனையே தொழ வேண்டும்”  என்கிறது மனு(அத் 10. சு.122). ஆனால் யாவரும்  தொழ வேண்டியவர்கள் உழைப்பவர்களே என்கிறார் திருவள்ளுவர்.

மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)

இதற்கு விளக்கம் அல்லது உரை அளித்தவர்களில் பெரும்பாலோர் தாள் என்றால் முயற்சி என்று பொருள் தந்து விளக்கி உள்ளனர்.

  மடியுளாள் என்னும் திருவள்ளுவர் தாளுளாள் என்று மட்டும் சொல்லியிருந்தால் அவ்வாறு கருதலாம். ஆனால் அவர் மடியிலான் என்று சொன்ன பின்னர் மீண்டும் முயற்சி – தாள் குறித்துச் சொல்லத் தேவையில்லை. உண்மையில் திருவள்ளுவர் தாள் என்றால் காலடி – பாதம் – என்னும் பொருளைத்தான் குறிப்பிடுகிறார்.

எனவே இங்கே அவர் மடியில்லாதவனின் – சோம்பலில்லாது உழைப்பவனின் தாளில் திருமகள் உள்ளதாகக் கூறுகிறார் என்பதுதான் உண்மை. ஆனால்,  தெய்வப்புலவர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்திலேயே மறைமுகமாக உட்பொருள் தொனிக்கத் தெரிவித்ததுபோல் இங்கேயும் அவ்வாறு கூறியுள்ளார். ஆகவே செல்வக்கடவுள் தங்கியுள்ள இடம் உழைப்பவனின் பாதம் என்பதால் திருமகளை வணங்க விரும்புபவர்கள் உழைப்பவரின் காலை வணங்க வேண்டும்.

  “உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்” என ஆரியம் உழைப்பவர்களை இழிவுபடுத்துகிறது. எனவே, ஓயாமல் உழைப்பவரின், தளராமல் பாடுபடுவரின், அயராது பணியாற்றுபவரின் காலில்தான் திருமகள் உறைகிறாள் என்கிறார்.  செல்வத்தின் கடவுளான திருமகள் அல்லது இலக்குமி திருமாலின் மார்பில் தங்கியிருப்பதாகக் கூறுவது ஆரியப்புராணம். அதை மறுத்து உழைப்பவரின் காலில் இருப்பதாகக் கூறுகிறார். இங்கும் உழைப்பவரின் நெஞ்சில்  அல்லது தலையில் இருப்பதாகக் கூறாமல் காலில் இருப்பதாகக் கூறிக் காலை உயர்த்துகிறார். எனவே, கடவுள் வாழ்த்து மூலம் திருவள்ளுவர் கால்களை உயர்வாகச் சொல்வதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார்.

  சிலர் மக்களை ஏமாற்றுவதற்காகச், “சாதி அமைப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் கூறப்படவில்லை. பிராமண தருமத்தைப் பின்பற்றும் யாவரும் பிராமணன்தான்” எனத் தவறாகத் திரித்துக் கூறுகின்றனர். ஆனால், மனு “பிராமணன் தொழிலைச் சூத்திரன் செய்தாலும் சூத்திரன் பிராமணச் சாதியாகமாட்டான். ஏனென்றால், அவனுக்குப் பிராமணச் சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை” என்கிறது. அது மட்டுமல்ல! “சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும் (மனு. அத் 9. சு.96)” என்று கூறும் பொழுது எங்ஙனம் தன் தொழில் முறையால் ஒருவன் பிராமணன் ஆக முடியும்? “சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திரச் சாதியாக மாட்டான். ஏனென்றால் அவன் ஈனத் தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா?”  என்கிறது மனு. எனவே வாழும் முறையிலோ வளர்ப்பு முறையிலோ அல்லாமல் பிறப்பு முறையில் சாதியைக் கற்பிப்பதுதான் ஆரியம்.

  எனவே, திருவள்ளுவர் வருணாசிரமத்திற்கு உடன்பட்டதாகக் கூறுவதாகக் கருதாமல் அதனை அடியோடு ஒழிக்க விரும்பியுள்ளார் எனப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதலின் திருவள்ளுவரின் திருக்குறள் ஆரிய எதிர்ப்பை மையமாகக் கொண்டது. முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அதிகாரம்  மூலமே திருவள்ளுவர் ஆரிய எதிர்ப்பைத்  தொடங்கியுள்ளார் என்பது  தெளிவாகிறது.

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

  •           மனோன்மணியம் சுந்தரனார்

    மறைக ஆரிய நெறி ! பரவுக தமிழ் நெறி!  

இலக்குவனார் திருவள்ளுவன்

  ஆசிரியர், அகர முதல – பன்னாட்டு மின்னிதழ்

  www.akaramuthala.in

  thiru2050@gmail.com

   + 91 – 9884481652