இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி

இணையவழித் தன் தமிழ்ப்படைப்புகள் மூலம் சுவையான அருமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர் முனைவர் தேமொழி.

திருச்சி மரு.முனைவர் சிவக்கண்ணு, சானகி ஆகியோர் திருமகள்.  விலங்கியலில் இளம் அறிவியல் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப்பட்டத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஆய்வியல் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.

 திருமணமானதும் கணவருடன் 1987 இல் அமெரிக்கா குடி புகுந்தார். இங்கே  சியார்சு வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master of Engineering Management) பெற்றார். நகரகக் கல்வி- பொது மேலாண்மையில் முதுநிலைப்பட்டத்தை (Master of Urban Studies and Public Administration) முது தொமினியன் பல்கலைக்கழகத்தில்(Old Dominion University) பெற்றார். பொதுக்கோட்பாடு-பொது மேலாண்மையில் முனைவர் பட்டத்தை (Ph.D. in Public Policy and Public Administration) – Old Dominion University) இதே பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

ஒக்கலஃகோமா(Oklahoma) அரசு முகமையில்  திட்ட ஆய்வாளராகப்  (Program Analyst) பணியாற்றியவர். கடந்த 33 ஆண்டுகளாக அமெரிக்காவில் பல இடங்களில், வசித்து இப்பொழுது சான் பிரான்சிசுகோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

‘வல்லமை’ மின்னிதழ் இதழாளர் முனைவர் அண்ணாகண்ணனால் நிறுவப்பட்டு எழுத்தாளர் பவளசங்கரியைச் செயல் ஆசிரியராகக் கொண்டு இயங்குவது. இவ்விதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது வாரந்தோறும் அருவினைபுரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து ‘வல்லமையாளர் விருது’ வழங்கியவர் இணையத் தமிழ்ச்சுடர்தேமொழி. இலக்கிய உலகம், படைப்புலகம், மன்பதை நிலை எனப் பல்வேறு சூழல்களில் உள்ளவர்களைத் தெரிவு செய்து இவர் வல்லமையாளர் விருதுகளை வழங்கியுள்ளார். இந்நூற்றுவரைப்பற்றியும் ‘எனது வல்லமையாளர்கள்’ என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளார்(2017). இந்நூல்கள் மூலம் புதிய செய்திகளையும் புதியவர்களையும் அறியும் வாய்ப்பு படிப்பவர்களுக்குக் கிடைக்கிறது.

வல்லமை மின்னிதழ் மடல் இலக்கியப்பரிசுப் போட்டியை நடத்தியது. அதில் வெற்றி பெற்றவர்களின் மடல்களைத் தொகுத்து ‘அன்புள்ள மணிமொழிக்கு…’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார்(2017).

தேமொழியின் தங்கை மருத்துவராகச் சிறப்பாகப் பணியாற்றி மறைந்த மணிமொழியின் பெயரில் தலைப்பு அமைந்துள்ளது. எனினும் மணிமொழி என்னும் பாத்திரத்தைத் தாயாக, உடன்பிறந்தவளாக, மகளாக, மருமகளாக, பேத்தியாக, தோழியாக, காதலியாக உருவகப்படுத்தி மடல்கள் எழுதியுள்ளனர். மொத்தம் 12 மடல்கள் உள்ளன. இவை கட்டுரையாக அமையாமல் கதைக்கூறுகளுடன்  ஆர்வத்துடன் படிக்கும் வகையில் அமைந்துள்ளன.

‘சுதந்திர தேவியின் மண்ணில்…’ என்பது இவரின் மற்றொரு கட்டுரைத் தொகுப்பாகும்(2017). இதில் உள்ள 25 கட்டுரைகளும் அழகு தமிழில் ஆற்றொழுக்கான நடையில் கருத்துச் செறிவோடும் சிந்தனை வளத்தோடும்  எழுதப்பெற்றவை என மேகலா இராமமூர்த்தி முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள், மகளிர் சமத்துவ நாள் முதலான சிறப்பு நாள்கள் எனப் பலவற்றையும் உள்ளத்தில் பதிய வைக்கிறார். ‘அமெரிக்க வாழ் சீனர்களின் தாய்மொழிப்பற்று’ என்னும் கட்டுரை மூலம், தமிழர்கள் எங்கிருந்தாலும் தமிழ்ப்பற்றைப் புறக்கணிக்கக்கூடாது என வலியுறுத்துகிறார். இக்கட்டுரை இறுதியில், “தமிழரைத் தவிரப் பிறர் தங்கள் மொழியினைப் புறக்கணிக்கத் தயாரில்லை என்பதைக் கண்டறிந்த பிறகாவது தமிழர்கள் தாய்மொழியைப் புறக்கணிக்காது பிற மொழி மயக்கத்திலிருந்து விடுபடுவது தமிழுக்குச் செய்யும் உதவியாக இருக்கும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!” என முடித்திருப்பார். இவ்வரிகள் இவரின் உள்ளக்கி்டக்கையை உணர்த்தி நம்மைத் தமிழ்ப்பற்றுடன் இருக்கத் தூண்டுகின்றன.

‘அனிச்ச மலர்கள்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு(2017) இவரது படைப்பாக்கத்தில்  முதன்மையான ஒன்றாகும். கதைப் பாத்திரங்களின் அன்றாடச் செயல்பாடுகள் அங்கும் இங்குமாக நாட்டில் நடப்பதைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் அமைந்துள்ளமை இவரது எழுத்து வன்மைக்குச்சான்றாகும். வாழ்ந்த இடங்களையும் வாழும் இடங்களையும் கதைச்சூழல் ஆக்குவதால் உள்ளத்தில் பதியும் வண்ணம் கதைகளைப் படைத்து விடுகிறார். ஜினா என்றொரு க்ருயெல்லா என்ற தலைப்பில் இவர் எழுதிய கதை மாதத்தின் சிறந்த சிறுகதை என்று திரு. வெங்கட்டு சாமிநாதன் அவர்களால் தேர்வு செய்யப்பட்டது பாராட்டும் பெற்றுள்ளது.  பிறமொழிக் கலப்பின்றி எழுத வேண்டும் என்ற விருப்பத்தைச் சில கதைகளில் நிறைவேற்றியுள்ளார். எல்லாப் படைப்புகளிலும் தமிழ்ச் சொற்களையே இனிப் பயன்படுத்த வேண்டும்.

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்’ நூல் இலக்கியம், கல்வெட்டு, ஊரகக்கலைகள் முதலானவை சார்ந்த 23 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இந் நூல் குறித்து,”நூலாசிரியர் தேமொழிக்கு உண்மை காணும் நாட்டமும் அதற்குத் தேவையான அயராத உழைப்பும் ஒருபாற் கோடாத நடுவுநிலையான நோக்கும் இயல்பாகவே அமைந்துள்ளன என அணிந்துரையில் எழில்முதல்வன் கூறியுள்ளது பிறரின் கருத்துமாகும்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைச் சுருக்கிய பதிப்பாக 2012இல் கொணர்ந்துள்ளார். ஆங்கிலத்தில் இத்தகைய சுருக்கப்பதிப்புகளை நிறைய காணலாம். ஆனால், தமிழில் மிகக் குறைவு. ஆதலின், தமிழ்ப்புதினங்கள், நாடகங்களைச் சுருக்கி எழுதுவோர் வரிசையில் இவரும் இடம் பெற்றுள்ளார்.

இலக்கிய ஆய்வு, நூலாய்வு, அறிஞர்களின் சிறப்பு, அன்றாட நிகழ்வுகளின் வாழ்வியல் நலக் கண்ணோட்டம்  எனப் பலவகையிலும் சிறகு இதழுக்கு அழகும் வளமும் சேர்க்கும் இவரது நூற்றுக்கு மேற்பட்ட படைப்புகளைச் சிறகு இணையத்தளத்தில் (http://siragu.com/author/themozhi/ ) காணலாம்.

இதேபோல் வல்லமைக்கு வலிவும் பொலிவும் சேர்க்கும் நூற்றுக்கணக்கான படைப்புகளை அளித்து வருகிறார். ( https://www.vallamai.com/?author=182)

கடந்த 9 ஆண்டுகளாகத் திண்ணை, கீற்று முதலான பிற இணைய இதழ்களிலும்  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலான இவரது படைப்புகள் வருகின்றன. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் தமிழ்ப்படைப்புலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன.

தன்னார்வலராக முன்னர் வல்லமை இதழின் துணை ஆசிரியராகச் சிறப்பாகச் செயலபட்டார். இப்பொழுது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘மின்தமிழ்மேடை’  காலாண்டு  இதழின் பொறுப்பாசிரியராகத் திகழ்கிறார்.

மேலும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் செயலாளராகவும், தமிழ் மரபு அறக்கட்டளையின் கூகுள் மின்தமிழ் குழுமத்தின் மட்டுறுத்தராகவும் செயல் பட்டு வருகிறார்.

தமிழ்நல நேயர். எனவே, மடலாடல் குழுக்களில் தமிழுக்கு எதிராக யாரும் கருத்து தெரிவித்தால் பொங்கி எழுந்து அவர்களுக்கு உரிய மறுப்பைத் தெரிவிப்பார்.

பெண்படைப்பாளர்கள் முன்பை விடக் கூடுதலாகக் காணப்படுகின்றனர். எனினும் மேலும் பெண் படைப்பாளர்கள் பெருக வேண்டும். பிற்போக்குத்தனம் இல்லாத தமிழ் நலமும் மனித நேயமும் கொண்ட பழந்தமிழ்ச் சிறப்பைப் போற்றி வளர் தமிழுக்கு வளம் சேர்ப்போர் இவர் வழியில் உருவாக வேண்டும்.

“என்றும் தமிழ் எங்கும் தமிழ்” என்பதை இலக்காகக் கொண்டுள்ள இதழாளர், கதையாசிரியர், கட்டுரையாளர், கவிஞர், படைப்பாளர் முதலான பன்முகம் கொண்ட இணையத் தமிழ்ச்சுடர் முனைவர் தேமொழி நூறாண்டு வாழிய வாழியவே!

– இலக்குவனார் திருவள்ளுவன்

இவரது நூல்களுக்கான இணைப்பு:

அனிச்ச மலர்கள்  (2017)

https://books.google.com/books?id=covEAgAAQBAJ

எனது வல்லமையாளர்கள் (2017)

https://books.google.com/books?id=6YoyDwAAQBAJ

சுதந்திர தேவியின் மண்ணில்  (2017)

https://books.google.com/books?id=YTRCDwAAQBAJ

அன்புள்ள மணிமொழிக்கு  (2017)

https://books.google.com/books?id=OaRvDgAAQBAJ

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்   (2018)

https://books.google.com/books?id=uSdNDwAAQBAJ

கல்கியின் பொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு  (2012)

https://books.google.com/books?id=MN_bAgAAQBAJ