(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை :  திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனாரின் பன்முக ஆளுமை, இ,திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_panmuka_aalumai_ilakkuvanar-thiruvalluvan

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6

பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே!

பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் அறிதற்குரியர்தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம் செல்வமாகக் கருதற்குரியர். மக்கள் ஆண் பெண் இருபாலார்க்கும் உரியசொல். பெண் ஒழித்து நிற்பதற்குக் காரணம் பெண்கள் அறிய மாட்டாதவர்கள் என்னும் தவறான கருத்தேயாகும்  பெண்களும் ஆண்களைப் போன்று அறியும் ஆற்றல் உடையவர்களே என்பது வரலாறு உணர்த்தும் உண்மையாகும்.’’[4]

ஒருபாலரைக் குறிப்பது மறுபாலருக்கும் பொருந்தும்

‘கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள் 54)’ என்பதை விளக்கும் பொழுது, ‘இருபாலாரிடத்தினும் கற்பு நிலை பெறுகின்ற போதுதான் பெண்ணின் பெருமை நன்கு வெளிப்படும்[5] எனக் கற்புநெறி இருவருக்கும் பொதுவே என்னும் தமிழர் நெறியை விளக்குகிறார். பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள் 55) என்பதை விளக்கும் பொழுது, ‘‘நஞ்சுண்டவன் சாவான்என்றால், ‘நஞ்சுண்டவளும் சாவாள்என்பது வெள்ளிடைமாலை.திருடிவயவன் ஒறுக்கப்படுவான்என்றால், ‘திருடியவளும் ஒறுக்கப்படுவாள்என்பது தானே போதரும். அவ்வாறே இவ்விடத்தும் கருதுதல் வேண்டும். தெய்வம் தொழாஅன் மனைவிதனைத் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழைஎன்பதும் கொள்ளப்படல் வேண்டும்’’ என இரு சாரார்க்கும் பொதுவான விளக்கம் நல்குகிறார்[6].

விளையுளுக்கு விளக்கம்:

 
எவையெல்லாம் சேர்ந்திருப்பன நாடு எனத் திருவள்ளுவர் வரையறுத்து,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.  (திருக்குறள் 731) என்கிறார்.

இத்திருக்குறளுக்குத் திருக்குறள்நெறி அறிஞர் இலக்குவனார் தரும் விளக்கம் ஒன்றே அவரின் உரைவளத்தையும் பொதுமை போற்றும் குறள்நெறி உணர்வையும் உணரப் போதுமானது எனலாம். இக் குறளுக்கு விளக்கம் தருகையில், ‘‘குறையாத விளைவிக்கப்படும் பொருள்களும் விளைவுக்குக் காரணமாம் அறிஞரும் குறைவு இலாத செல்வமுடையவரும் சேர்ந்திருப்பது நாடு ஆகும்’’[7] என்கிறார் பேராசிரியர் சி.இலக்குவனார். பிறர் விளக்கங்களின்றும் பேராசிரியர் சிறப்பாகவும் ஏற்கும்படியுமானதுமான விளக்கத்தைத் தருகிறார். அன்றும் இன்றும் அனைவரும் ‘விளையுள்’ என்றால், வேளாண்மை விளைவு, அல்லது வேளாண் பொருள் விளைவிப்போர், அல்லது விளையும் நிலம் என்ற பொருளில்தான் விளக்கம் அளிக்கின்றனர். வாழ்விற்கு உணவுதான் அடிப்படை. என்றாலும் அதுமட்டும் போதுமா? எனவே, பேராசிரியர், திருவள்ளுவர் கருத்தை உணர்ந்து உரிய பொருளைப்  பின்வருமாறு விளக்குகிறார்.

‘‘விளையுள் என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக் கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க வேண்டும்’’ [8] என்கிறார்.

இவ்வாறு, ‘ஒரு நாடு உணவில் மட்டும் தன்னிறைவு பெற்றால் போதாது. வாழ்விற்கு வேண்டிய அனைத்தையும் ஆக்கும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் பெற்றுத் திகழ வேண்டும்’ என எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்ற உரை விளக்கம் அளித்துள்ளார்.

தக்கார் பற்றிய தகைசால் கருத்து:

பேராசிரியர் சி.இலக்குவனார், தக்கார்  என்பார் நாட்டின் நலனைப் பெருக்கத்தக்கார் என்கிறார். ‘கற்றறிஞர், புதியன கண்டு பிடிப்போர், புதியன ஆக்குவோர் (Scholar, Discoverer, Inventor) இவரையே பொறுத்துள்ளது நாட்டின் விளையுள் பெருகுதல் [9]என விளக்குகிறார். பழந்தமிழ்ப் புலமையும் மேனாட்டு அறிவியல் புதுமையறிவும் கைவரப் பெற்ற பேராசிரியர், தக்கார் என்றால் நல்லோர், அறிவோர் என்று விளக்காமல், அறிவியல் வளர்ச்சிக்கு முதன்மை கொடுக்கும் வகையில் தக்கார் என்பதற்கு நாட்டின் நலனைப்பெருக்கத்தக்க கற்றறிஞரையும் அறிவியல் அறிஞரையும் குறிப்பிடுவது ஏற்கவும் போற்றவும் கூடிய கருத்தன்றோ !

செல்வம்உணர்த்தும் உரைச் செல்வம்:

‘தாழ்விலாச் செல்வர்’  என்பது குறைவிலாச் செல்வமுடையவர் என்னும் பொருளைத் தரும் என்னும் பேராசிரியர், செல்வம் என்பது பொருள் சேர்க்கையன்று என இதற்குத் தரும் விளக்கம் எந்நாட்டவர்க்கும் எக்காலத்தவர்க்கும் ஏற்றதன்றோ !  அவரது விளக்கம் வருமாறு: ‘‘செல்வர் சேர்வது நாடு என்பதனால் வறியரும்  அங்கிருப்பர் என்று பொருள் படலாம். செல்வர்  என்று சிலரைப் பிரிப்பின் எஞ்சியோர் செல்வரல்லாதவர் என்றுதானே கருதுதல் வேண்டும் என்று நினைத்து எப்பொழுதும் செல்வர்களும் வறிஞர்களும் நிலைத்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் கூறுவது பொருத்தமுடைத்தன்று என்று புகல்வோருமுளர். செல்வர் என்றால் தமக்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடம் முதலிய வாழ்க்கை வசதிகளைப் பெற்றிருப்பாரேயன்றி, அளவு கடந்த பொருளைத் திரட்டி யார்க்கும் பயன்படாது முடக்கி வைத்து மகிழ்வோரல்லர். நுகரப் பெறுவன யாவும் உடையோரே செல்வர் ஆவார்நுகரப் பெறுவன இல்லாதார் வறிஞர் ஆவார்என்பதே தமிழ்நூலார் கருத்தாகும். ஆதலின் அங்குத் தாழ்விலாச் செல்வர் சேர்வது என்பது எல்லா மக்களும் யாவும் பெற்றிருப்போராய் இருத்தல் வேண்டும் என்பதற்கேயாம் என்று அறிதல் வேண்டும்.’’[10] இவ்வாறு செல்வம் என்பதற்குத் தமிழ்நெறிக்கேற்ற விளக்கத்தைப் பேராசிரியர் அளித்துள்ளார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி :  சென்னை வானொலி நிலையம்

        ‘நட்புஇணைய இதழ்

எண் குறிப்பு:

[4] வள்ளுவர் கண்ட இல்லறம்

[5] வள்ளுவர் கண்ட இல்லறம்

[6] வள்ளுவர் கண்ட இல்லறம்

[7] வள்ளுவர் வகுத்த அரசியல்

[8] வள்ளுவர் வகுத்த அரசியல்

[9] வள்ளுவர் வகுத்த அரசியல்

[10] வள்ளுவர் வகுத்த அரசியல்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum