தலைப்பு-இலக்குவனாரின் பன்முக ஆளுமை, இ,திருவள்ளுவன் ; thalaippu_ilakkuvanarin_panmuka_aalumai_ilakkuvanar-thiruvalluvan

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை

 திருக்குறள் ஆராய்ச்சி  1/6

தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள்.

தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை  ஆய்ந்தாய்ந்து அகன்ற அறிவுசான்ற சான்றோராக ஒருபுறமும் அவற்றைப் பாரெங்கும் பரப்பும் அருந்தமிழ்த் தொண்டராக மறுபுறமும் பேராசிரியர் சி.இலக்குவனார் திகழ்ந்தார். கடமையில் இருந்து வழுவாக் கல்வி ஆசானாகவும் தமிழ்நெறியைப் போற்றும் புலமையாளராகவும் உயர்தமிழுக்கு வரும் கேட்டினை உடைத்தெறியும் உரையாளராகவும் மக்களிடையே நல்ல தமிழைக் கொண்டு செல்லும் இதழாளராகவும் எங்கும் தமிழை ஏற்றம் பெறச்  செய்யும் போராளியாகவும் பன்முகப்பாங்குடன் திகழ்ந்த பேராசிரியர் அவர்களின் திருக்குறள் ஆராய்ச்சியைப்பற்றி மட்டும் ஈண்டுப் பார்ப்போம்.

ஆராய்ச்சிப்பாதைக்குக் கால்கோளிட்ட பள்ளிப்பருவம்

பள்ளிப்பருவத்திலேயே பேராசிரியர் திருக்குறள் பாக்களை எளிதில் பயன்படுத்தும் சொல்வன்மையைப் பெற்றார். திருக்குறளைப் பலர் அறியாக் காலத்திலேயே அதனை மக்களிடையே பரப்பும் பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அவர் பெற்ற ஊக்கம் திருக்குறளைப் பரப்புவதை வாழ்நாள் கடமையாகக்  கொள்ளுமாறு செய்தது. பரப்புரைக்கான சொற்பொழிவுச் சிந்தனைகளும் கட்டுரை வன்மைகளும் அவரின் திருக்குறள் ஆராய்ச்சிப் பணியைச் செம்மையுறச் செய்தன.

இதழ்கள் வழி ஆராய்ச்சி

இலக்கிய இதழ்களுக்கும் மலர்களுக்கும் திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியனுப்பிய பேராசிரியர் சி.இலக்குவனார், பல்வேறு இதழ்கள் நடத்தியும் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இலக்கியம், சங்க இலக்கியம், திராவிடக் கூட்டரசு, Dravidian Federation, குறள்நெறி(திங்களிதழ்), குறள்நெறி(திங்கள் இருமுறை இதழ்), Kuralnery(Bi-monthly), குறள்நெறி(நாளிதழ்) ஆகிய இதழ்கள் வாயிலாகத் தமிழ் பரப்புப் பணியை மேற்கொண்ட பேராசிரியர்  குறள்நெறி பரப்பும் தளமாகவும் இவற்றை அமைத்துக் கொண்டார். இவற்றுள் திருக்குறள் உரைகள் பற்றியும் கால ஆராய்ச்சி பற்றியும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

புதுக்கோட்டையில் திருவள்ளுவர் கழகத்தின் மூலம் குறள்நெறிஎனத் தனிச் சுற்றுத்திங்களிதழும் நடத்தினார். இவ்விதழ் தனி மனிதப்  படையாகத் திகழும் வண்ணம் திருக்குறள் விளக்கம்திருக்குறள்  விளக்கக் கதை பொதிபாடல், குறள் ஆராய்ச்சிக் கட்டுரைகள், குறள் உரைகளில் திருவள்ளுவருக்கு முரணாக இடம் பெற்றுள்ள மாறுபாடுகளும் அவற்றால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள ஊறுபாடுகளும் பற்றிய கட்டுரைகள் எனப் பலவற்றைத் தாமே படைத்தளித்துக் குறள்  விருந்து வழங்கினார். . . . பேராசிரியர் படைத்த ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி அறிஞர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டுத் தமிழன்னையின் வாட்டத்தைப் போக்கின.[1] திருக்குறள் ஆராய்ச்சியில் இவருக்கெனத் தனியிடத்தை இவை பெற்றுத்தந்தன.

எக்காலத்திற்கும்  ஏற்ற உரை

  தெய்வப்புலவர் திருவள்ளுவர் எக்காலத்திற்கும் ஏற்றவாறு திருக்குறள் நூலை அளித்துள்ளதுபோல் இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரான பேராசிரியர் சி.இலக்குவனாரும் எக்காலத்திற்கும்  ஏற்றவாறு உரை எழுதியுள்ளார்; முடியாட்சியில் வாழ்ந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் தரும் அறவுரைகள் குடியாட்சியிலும் பொருந்தும் வகையில் நன்கு விளக்கம் தருகிறார். சில நேர்வுகளில் திருவள்ளுவர் கால மன்னராட்சிச் சூழலில் அவர் கூறியுள்ளார் எனக் குறிப்பிடினும் இன்றைய மக்களாட்சிக்கு எவ்வாறு மிகச் சரியாகப் பொருந்துகின்றது என்ற முறையிலும் விளக்கம் தருகிறார். பேராசிரியர் திருவள்ளுவர் பார்வையில் இன்றைக்குப் பொருந்தும்முறையை விளக்கி இருப்பார். அல்லது தம் கருத்துகளைத் தம் கருத்துகளாகவே தெரிவித்து அவை திருக்குறள் கருத்துகளுக்கு ஏற்றனவாக அமையும் வகையை விளக்கி உள்ளார்.

இலக்குவனார் திருவள்ளுவன்

நன்றி :  சென்னை வானொலி நிலையம்

         ‘நட்புஇணைய இதழ்

குறிப்பெண் விவரம்:

[1] (இக்கட்டுரையாளரின்)குறள்நெறி  அறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார்