இருமை வகைத்தே இயற்கை நெறியே! – தொல்லூர் கிழான்
இருமை வகைத்தே இயற்கை நெறியே!
அல்லது வெளிக்குமால் இல்லது கருக்குமால்
வல்லது மெலிக்குமால் மெல்லது வலிக்குமால்
புறத்தது அகக்குமால் அகத்தது புறக்குமால்
நிறுத்த வியல்நிலை திரீஇ தோன்றலும்
இருத்தலும் ஒடுங்கலும் வினையல் மும்மை
இருமை வகைத்தே இயற்கை நெறியே!
- தொல்லூர் கிழான்.
சொற்பொருள் :
அல்லது > அல் அது = இருள் நிலை என்பது
வெளிக்குமால் = தன்னிலை மாறி வெளிறி வெளிச்சமாகுமாதலால்
இல்லது > இல் அது = இல் எனும் ஒளிமையாகிய வெளிச்சம் மாறி இருண்டு கருக்குமாதலால்
வல்லது > வல் அது = வலிமை என்பது
மெலிக்குமால் > மெலிந்து மென்மையாகுதலால்
மெல்லது > மெல் அது = அது போல மென்மையானது
வலிக்குமால் > வன்மை பெறுமாதலால்
புறத்தது > புறத்து அது = புறமாக இருப்பது
அகக்குமால் = உட்சென்று அகமாகி நுண்பொருளாகுமாதலால்
அகத்தது > அகத்து அது = அகமாக மறைந்திருப்பது,
புறக்குமால் = புறத்து வெளித்தோன்றுமாதலால்
நிறுத்த வியல்நிலை = எங்கும் என்றும் நிலைப்பெற்றிருக்கும் விரிந்த வியன்மை பேரண்டமானது
திரீஇ = திரிந்து , மாறி
தோன்றலும் = தோற்றம் பெற்றும்
இருத்தலும் = அவ்வாறு தோற்றம் பெற்றது தன்னிலையில் இயங்கி இருத்தலாதலும்
ஒடுங்கலும் = இருத்தல் நிலையில் இயங்கி ஒடுங்கிச் சிதைதலும்
வினையல் = இயக்க வினை முறைமையியல்
மும்மை = தோன்றல் இருத்தல் ஒடுங்கல் எனும் மூவகையாகியது
இருமை = எதிரும் புதிருமான , நேர் எதிர் எனும் இருமைத் தன்மை
வகைத்தே = வகைப்பட்டதே
இயற்கை = இயல்பாக இயங்கும்
நெறியே = இயல் நிலைக் கோட்பாடே…
பொழிப்பு :
இயற்கை இயல்பு நிலையை ஓர்ந்து நோக்குங்கால், எதனை இருள் என்கின்றோமோ அஃது ஒளிர்ந்து வெளிச்சம் பெறுவதைக் காணலாம், முன்பு இருண்டது பின்பு வெளிச்சம் பெறும் ; அதே போல் எதனை ஒளி என்கின்றோமோ அஃது இருட்சிப் பெற்று கருப்பதைக் காணலாம்; முன்பு வெளிச்சமானது பின்பு கருத்து இருண்மையாகும்;
இவ்வாறே, எதனை வலிந்தது வன்மையானது என்றோமோ அதுவே பிற்காலத்தில் மெலிந்து மென்மையாவதைக் காணலாம்; அதே போல் எது முன்பு வன்மையாக இருந்ததோ அது பிற்காலத்தில் மென்மையாக மாறுவதைக் காணலாம் ;
புறநிலையில் கண்ணுக்குக் காட்சியாய்த் தோன்றியிருப்பது பின்பு கண்ணுக்கே புலப்படாமல் மாறி மறைந்து உள்ளியைந்து கிடப்பதை உணரலாம்; அவ்வாறு உள்ளியைந்து மறைந்திருப்பது புறநிலையில் வெளிப்பட்டுத் தோன்றுவதும் காணக்கூடியதே…
இவ்வாறான நிலைத்தன்மை எங்கும் புடைபரப்பி பாரியதாய் விரிந்திருக்கும் பேரண்டத்தின் இயல்பு நிலையாகும்.. இவ்வியல்பு, முந்நிலையாகத் திரிந்தியங்குவதாகும். இம்முந்நிலைத் திரிபியக்கமே தோன்றல், இருத்தல், ஒடுங்கல் எனச் சொல்லப் பெறும். இத்திரிபியல் ஓர் இயற்கை ஒழுங்கு முறைமையாகும். தோன்றியது இயங்கும் ; இவ்வியங்கு நிலையையே இருத்தல் நிலை என்கின்றோம். இருப்பது இயங்கும் என்பதே விளக்கம். எஃது இயங்குகின்றதோ படிப்படியாய்த் தேய்ந்து சிதைந்து ஒடுங்கும்.. எஃது ஒடுங்குகின்றதோ மேலும் சிதைந்து இன்னொன்றாய் மாறும்… எப்பொருளும்… இவ்வாறே திரிந்து சிதைந்து பிறிந்தொன்றாய் மாறி தொடர்ந்து சுழல் வட்டத்துள் இயங்கிக் கொண்டிருக்கும்.. இதனை ஒழிவில் ஒடுக்கம் என்பர்.. பொருளியக்கவியலின் அழியாத் தன்மை என இதனை விளக்கலாம். இவ்வாறான மாற்ற நிலை இருவகை தன்மையால் நிகழும். பொருள்களின் நிலைமாற்றத்திற்கு வெம்மை தண்மை எனும் இருமை நிலை அடிப்படையாக அமைவது நாம் அறிந்த ஒன்றே.. இவ்விருவகை எதிரும் புதிருமான நேர் எதிர் தன்மையை இயற்கையின் எல்லாவிடத்திலும் காணலாம். இவ்விரு வகை இயல்பு நிலை இல்லாமல் இயற்கை இல்லை.. இஃது ஒன்றிற்குள் ஒன்று இயைந்தும் மிகுந்தும் குறைந்தும் கிடக்கும். இவ்விருநிலைத் தன்மையே இயற்கை இயங்குநிலை விதியாக , நெறியாக விளங்குவதாகும்.
இயற்கை இருமைத் தன்மையால் மூவினைப்பட்டு ஒழிவில் ஒடுக்கமாய் ஒன்றினின்று ஒன்று தோன்றி மறைந்து சிதைந்து மாறி இயங்கும் விதிக்குட்பட்டதாகும். இஃதே இயற்கை இயங்குநெறி.
தொல்லூர் கிழான்
Leave a Reply