இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும்

வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே இருப்பதும், அத்துடன் மனிதக் குறைபாடுகளை எள்ளி நகைப்பதும் அங்கதத்திற்குரிய வரையறை.

அங்கதம் என்பதற்கு நிகரான சில சொற்கள் இகழா இகழ்ச்சி, பகடி, எள்ளல், கேலி, பழிப்பு, நையாண்டி, உள்குத்து, பரிகாசம், (ஆங்கிலத்தில் sarcasm, satire) போன்றவை. இன்றைய எழுத்தாளர்களில், நாஞ்சில் நாடனின் சிறுகதைகளிலும், ஈரோடு தமிழன்பனின் கவிதைகளிலும் அங்கதச் சுவையைக் காணமுடிகிறது என்று சுட்டுகிறார்கள் இலக்கிய ஆய்வாளர்கள்.

செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என அங்கதம் இருவகைப்படும். வெளிப்படையாய்ப் பழிப்பது, இகழ்ந்து வசை பாடுவது செம்பொருளங்கதம். மாறாக அதையே மறைவாய்க் குறிப்பாகக் கூறிப் பழிப்பது பழிகரப்பங்கதம். (இவ்வாறு இகழ்வதை ஒத்தது போலவே புகழ்வதிலும் இருவகை உண்டு, அவை முறையே, செம்பொருட் புகழ்ச்சி, வஞ்சகப் புகழ்ச்சி என இருவகைப்படும். வெளிப்படையாய்ப் புகழ்வது செம்பொருட் புகழ்ச்சி, மறைவாய் புகழ்வது போல இகழ்வது வஞ்சகப் புகழ்ச்சி).

‘வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின் அங்கதச் செய்யுள்’ என்பதற்கேற்ப வசை நசையும் கொண்டதாக அங்கதம் அமைய வேண்டும் என்று கூறும் தொல்காப்பியர், அங்கதத்தை (1) செம்பொருள் அங்கதம், (2) பழி கரப்பு அங்கதம் இருவகையாக வகுத்துக் கூறியுள்ளார்.

     அங்கதம்தானே அரில் தபத் தெரியின்

     செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே.

     செம்பொருள் ஆயின வசை எனப்படுமே.

     மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். (120-122)

     செய்யுள்தாமே இரண்டு என மொழிப.

     புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்

     செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்.

     வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்

     அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். (123-125)

         [தொல்காப்பியம், பொருளதிகாரம், செய்யுளியல்]

இதில் நேர்முகமாகக் கூறப்படும் ‘செம்பொருள் அங்கதம்’ நேரடியான குத்தல் உணர்வு கொடுப்பதாக இருக்கும், ஆனால் மறைமுகமாகக் கூறப்படும் ‘பழிகரப்பு அங்கதம்’ புகழ்வதுபோல் இகழ்வதும், இகழ்வதுபோல் புகழ்வதுமாக எள்ளி நகையாடும் முறையில் அமையும். அதாவது இன்றைய நடைமுறையில் ‘உள்குத்து’ என்ற வழக்கத்தில் உள்ள ஒரு முறைதான் பழிகரப்பு அங்கதம்.

திருக்குறளில் அங்கதம்:

     செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

     அவியினும் வாழினும் என்

     (அதிகாரம்: கேள்வி, குறள் எண்:420)

இக்குறள் செம்பொருள் அங்கதம் வகைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கேள்வியறிவு பெற நினையாதவர்கள் உலகில் வாழ்ந்தும் வாழாதவர்களே என்ற கருத்தை உணர்த்த, செவியால் கேட்டறியும் சுவைகளை உணராது, வாயால் நுகரும் இன்பத்தை மட்டுமறியும் மாக்கள் இறந்தால் என்ன? அல்லது இருந்தால்தான் என்ன? எல்லாம் ஒன்றே என்பது இக்குறளின் பொருள்.

     தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

     மேவன செய்துஒழுக லான்

     (அதிகாரம்: கயமை, குறள் எண்:1073)

இக்குறள் பழிகரப்பு அங்கதம் வகைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கயவர்கள் தான்தோன்றித்தனமாய் நடப்பவர்கள். வானுலகில் இருக்கும் தேவர்களும் அத்தகைய கயவர் போன்று கட்டுப்பாடற்ற பண்பொழுக்கம் கொண்டவர் என்பது இக்குறளின் பொருள்.

ஒளவையாரின் தனிப்பாடல்களில் அங்கதம்:

சங்கப் பாடல்களிலும் காவியங்களிலும் தனிப்பாடல்களிலும் அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. வசை பாடுவதில் நையாண்டி செய்வதில் காளமேகப் புலவர் வல்லவர், அதனால் ‘வசைபாடக் காளமேகம்’ என்ற அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கப் பட்டவர். அவர் பாடல்கள் போன்றே, பிற்காலத்தில் வாழ்ந்தவராகக் கூறப்படும் மற்றொரு ஒளவையார் ஒருவரும் அங்கதம் பாடியதாகக் குறிப்பிடப்படும் தனிப்பாடல்கள் உள்ளன.

ஒளவையார் பாடலில் செம்பொருள் அங்கதம்: ஏழிற்குன்றப் பகுதியினை ஆண்டுவந்த சிற்றரசன் ஒருவன் தமிழ்ப் புலவர்களின் மதிப்பையும், அவர்களின் புலமைத் திறத்தையும் அறியாது அவர்களைப் பரசில் பெற வரும் இரவலர்கள் போல நடத்தி வந்தான். அவனைப் பாடச் சென்ற ஔவைக்கும் அந்த நிலை ஏற்பட்டது. இதனால் வெகுண்ட ஔவை அவனை நோக்கி நேரடியாக வசை பாடினார், அதில் நையாண்டியும் தொனித்தது.

     இருள்தீர் மணிவிளக்கத் தேழிலார் கோவே

     குருடேயும் அன்றுநின் குற்றம் – மருள்தீர்ந்த

     பாட்டும் உரையும் பயிலா தனவிரண்டு

     ஓட்டைச் செவியும் உள. (பாடல் – 86)

“இருளினும் சிறந்த நீலமணியின் ஒளிச்சிறப்பினைக் கொண்டு விளங்கும் ஏழிற்குன்றத்துக்கு உரிய மன்னவனே! எம்மை மதியாத உன் குற்றமானது உன் கண்கள் குருடாயினதனால் ஏற்பட்டது மட்டுமன்று. குற்றமற்ற பாட்டினையும் உரையினையும் கேட்டுப் பழகாதனவான இரண்டு ஓட்டைச் செவிகள் உனக்கு இருப்பதனாலும் ஏற்பட்டதாகும்” என்பது செய்யுளின் பொருள்.

ஒளவையார் பாடலில் பழிகரப்பு அங்கதம்: கம்பருக்கும் ஔவைக்கும் இடையே போட்டி மனப்பான்மையும், தங்கள் புலமையின் மீது பெருமிதமும் இருந்தது. ஒளவையாரை இழிவுபடுத்த எண்ணிய கம்பர் சான்றோர் பலர் குழுமியிருந்த அவையில் தன் விளையாட்டைத் துவக்கினார். ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும் ஆரைக்கீரை குறித்துப் பாடுவது போல பாடலைத் தொடங்கி, ஒளவையாரை நோக்கி இருபொருள் பட, சிலேடையாக, ‘ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ’ என்ற தொடரை முன்வைத்து எஞ்சிய பாடலை பாடி முடிக்குமாறு ஒளவையாரைக் கேட்டுக் கொண்டார். கம்பரின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு பதிலுக்குத் தானும் அதே பாணியில் பாடலில் பதில் அளித்தார் ஒளவையார்.

     எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

     மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்

     கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

     ஆரையடா சொன்னா யடா? (பாடல் – 18)

“அவலட்சணமே! எமனின் வாகனமான எருமையே! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே! முழுவதும் மேற்கூரை இல்லாது போன வீடாகிய குட்டிச்சுவரே! குலதிலகனான இராமனின் தூதனாகிய அனுமனின் இனமே! அடே! ஆரைக் கீரையைச் சொன்னாயாடா!” என்பது பாடலின் பொருள். மரியாதைக் குறைவான அடி என்பதைக் கவனித்த ஒளவையார் அடா போட்டு ‘யாரையடா சொன்னாய்?’ என்பது போல பதில் தாக்குதல் செய்தார். அத்துடன் அவலட்சணமே, எருமையே, கழுதையே, குட்டிச்சுவரே, குரங்கே என்றெல்லாம் கூட குறிப்பாக அறியக் கூடிய வசைகள் நிறைந்துள்ளது இப்பாடலில்.

     வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

     சொல்லேர் உழவர் பகை

     (அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், குறள் எண்:872)

என்ற குறளில் வீரமுடையவனிடம் பகை கொண்டாலும் கொள்ளலாம்; ஆனால், சொல்லாற்றல் பெற்றவருடன் பகை கொள்ளக் கூடாது என்று வள்ளுவர் கூறியதை நினைவில் கொண்டால் சொல்லாற்றல் கொண்டவர்களின் அங்கத சொல்லம்புகளில் இருந்து தப்பலாம்.

சான்றாதாரங்கள்:

தொல்காப்பியம்-பொருளதிகாரம், செய்யுளியல்

https://ta.wikisource.org/s/1nd

அங்கதச் செய்யுள், மது, ச. விமலானந்தம், பக்கம் 193, செந்தமிழ், (56 -7,8), 1960

https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0007231_செந்தமிழ்_அக்டோபர்_1960.pdf
https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0006677_செந்தமிழ்_November_1960.pdf

ஒளவையார் தனிப்பாடல்கள், புலியூர்க் கேசிகன், மங்கை வெளியீடு, முதற் பதிப்பு : டிசம்பர் 2010

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0745.html

இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி

சிறகு