(முன்னிதழ்த் தொடர்ச்சி)

இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 12

 

அத்தியாயம்  5. சிறுகதை (தொடர்ச்சி)


2


ஈழத்துச் சிறுகதையின் இரண்டாவது தலைமுறை 1940ஆம் ஆண்டுகளில் உருவாகியது. இக்காலத்தில் இலக்கிய ஆர்வம் உடைய ஓர் இளைஞர் குழு யாழ்ப்பாணப் பகுதியில் தோன்றியது. ஈழகேசாி இவர்களின் முதன்மை வௌியீட்டுக் களமாகவும் அமைந்தது. இவர்களுள் சிலர் ஒன்றிணைந்து, ‘மறுமலர்ச்சி’ என்ற ஒரு சஞ்சிகையையும் வௌியிட்டனர். அதைச் சுற்றி ஓர் இலக்கியக் குழுவாகவும் உருவாகினர், ஈழத்து முன்னோடி எழுத்தாளர்கள் இவர்களுக்கு ஆதர்சமாக அமைந்தனர். தமிழகச் சஞ்சிகைகளும் அவற்றில் வௌிவந்த படைப்புக்களும் இவர்களின் எழுத்தார்வத்துக்கு தூண்டு கோலாக அமைந்தன.

இக்காலப்பகுதியில் சிறுகதை உலகில் புகுந்த எழுத்தாளர்களுள், அ.செ.முருகானந்தம், தி.ச. வரதராசன், அ.ந. கந்தசாமி, கனக செந்திநாதன், தாழையடி சபாரத்தினம், சொக்கன், சு.வேலுப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுள் பலர் 50, 60 களிலும் தொடர்ந்து எழுதினர். சிலர் இன்னும் எழுதுகின்றனர். சிலர் 50, 60 களில்தான் குறிப்பிடத்தக்க கதைகளையும் எழுதினர். ஆயினும் இவர்கள் இலக்கிய உலகில் புகுந்த காலத்தில் இவர்களிடம் உருவாகி அமைந்த பண்புகள் தொடர்ந்தும் நீடித்து வந்திருப்பதை நாம் காணலாம். இதே காலப்பகுதியில் இலங்கையர்கோன் வைத்தியலிங்கம் சம்பந்தன் முதலியோரும் தொடர்ந்து எழுதி வந்தனர் என்பதையும் நாம் மனம் கொள்ள வேண்டும்.

இக்காலப்பகுதியில் தோன்றிய எழுத்தாளர்களுள் அ.செ. முருகானந்தம் படைப்புகளின் எண்ணிக்கையாலும் தரத்தினாலும் முதல் இடம் பெறுகின்றார். ஏறத்தாழ நூறு கதைகள் இவரால் எழுதப்பட்டன என்று தொியவருகின்றது. இவரது வண்டிச் சவாாி. மனிதமாடு, எச்சில் இலை வாழ்க்கை முதலிய கதைகள் ஈழத்து விமர்சகர்களால் சிலாகித்துப் பேசப்படுகின்றன. இவ்வளவு கதைகளை எழுதிய இவரது தொகுப்பு நூல் ஒன்று கூட வௌிவராதிருப்பது வருந்தத்தக்கதாகும்.

1940இல் ஈழகேசாியில் வௌியான கல்யாணியின் காதல் என்ற கதையுடன் சிறுகதை உலகில் நுழைந்தவர் தி.ச. வரதராசன். வரதர் என்ற புனைபெயாில் தொடர்ந்து கதைகள் எழுதி வந்துள்ளார். அவரது பன்னிரெண்டு கதைகள் கொண்ட கயமை மயக்கம் என்ற தொகுப்புநூல் ஒன்றும் வௌிவந்துள்ளது.

ஈழத்து இலக்கியத்தில் இடதுசாாிச் சிந்தனையை அறிமுகப் படுத்திய அ.ந. கந்தசாமி ஏறத்தாழ அறுபது கதைகள் வரை எழுதி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆயினும் இவரது கதைகளும் தொகுப்புநூலாக வௌிவரவில்லை. இரத்த உறவு, நாயிலும் கடையர் போன்ற இவரது கதைகளை ஈழத்துத் திறனாய்வர்கள் புகழ்ந்து பேசுவர். இக்காலப்பகுதியில் எழுதத் தொடங்கிய கனக செந்திநாதனின் வெண்சங்கு, சொக்கனின் கடல், சு. வேலுப்பிள்ளையின் மண்வாசனை, தாழையடி சபாரத்தினத்தின் புதுவாழ்வு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் 1960, 70 களில் வௌி வந்துள்ளன. கனக செந்திநாதன், சொக்கன், சு.வே. ஆகியோாின் தொகுப்புகளில் உள்ள கதைகள் பெரும்பாலும் 1950, 60 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பண்பு அடிப்படையில் இக்காலப் பகுதியில் தோன்றிய எழுத்தாளர்கள் முந்திய தலைமுறை எழுத்தாளர்களில் இருந்து அதிகம் வேறுபட்டவர்கள் அல்லர். 1930ஆம் 40 ஆம் ஆண்டுகளில் ஈழத்துச் சமுதாய அரசியல் போக்குகளில் அதிக மாற்றங்கள் இன்மையே இவர்களில் காணப்படும் ஒற்றுமைக்கான அடிப்படை எனலாம். அவ்வகையில் 30ஆம் 40 ஆம் ஆண்டுச் சிறுகதைகளை ஒருசேர நோக்குவதும் பொருந்தும். ஆயினும் கிராமியப் பண்பாட்டுப் பிரக்ஞை முந்திய தலைமுறை எழுத்தாளர்களைக் காட்டிலும் இவர்களிடம் முனைப்பாகக் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அ.செ.மு., கனக செந்திநாதன், சொக்கன், சு.வெ. போன்றோாின் பலகதைகளிலே யாழ்ப்பாணக் கலாச்சாரக் கூறுகள் பலவற்றை நாம் காணலாம்.  இவர்கள் மூலமே யாழ்ப்பாணக் கிராமியப் பண்பாடு பரவலாகச் சிறுகதைகளில் இடம்பெறத் தொடங்கியது. எனினும் முந்திய தலை முறையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சமூக நடைமுறைகளை ஆழமாக நோக்கும் பார்வை விசாலம் இவர்களிடமும் காணப்படவில்லை. வழிவழி வந்த பண்பாட்டுணர்வும், மனிதாபிமானமும் இவர்களின் பொதுப்பண்பு எனலாம். அதற்கேற்றவகையில் சீர்திருத்த நாட்டமும் இவர்களின் கதையில் இழையோடக்காணலாம். புதிய மாற்றங்களை அங்கீகாிக்காது, பழமைக் கனவுகளில் ஆழும் மனோபாவமும் இவர்களுட் சிலாின் கதைகளில் காணப்படுகிறது. கனக செந்திநாதன், குறிப்பாக இப்போக்கின் சிறந்த பிரதிநிதி எனலாம். தனது வெண்சங்கு தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையில்,

“அன்பு, முயற்சி, கலை, போலித்தன்மையில் வெறுப்பு, விதியின்பிடி, பணஆசை என்ற நிலைத்துநிற்கும் பொருள்களை வைத்து ஓரளவு பழமையுடனும் சமயச் சூழலுடனும் சித்திாிக்க முயன்றிருக்கின்றேன். பழைய யாழ்ப்பாணக் கலாச்சாரம் இப்புதிய சிறுகதைகளுக்கு வலுவான பகைப்புலமாக அமைந்திருக்கின்றது . . . . . . யாழ்ப்பாணப் பழமை, சமயச் சூழல். பழமையான கதை சொல்லும் உத்தி என்ற என் தனித்துவத்தை நான் இழந்துவிடத் தயாராக இல்லை.” என்று கூறுகின்றார். அவரது தொகுப்பில் உள்ள பல கதைகள் இப்போக்கை நன்கு பிரதிபலிக்கின்றன.

மொழி நடையைப் பொறுத்தவரை முந்திய தலைமுறையினரைப் போல் கவித்துமான அலங்கார நடையை இவர்கள் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பேச்சுவழக்கு மொழியை பிரக்ஞை பூர்வமாகக் கையாண்டதாகத் தொியவில்லை. இவர்களது கதாபத்திரங்கள் பல ‘இலக்கண சுத்தமான’ இலக்கிய நடையிலேயே உரையாடுகின்றன. எடுத்துக்காட்டாக வரதாின் கற்பு என்ற கதையில் வரும் பின்வரும் உரையாடலைக் காட்டலாம்.

“மாசுடர், நீங்கள் கலைச்செல்வியைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா?” என்று கேட்டார் ஐயர்.

“ஓமோம், ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். ஆனால் எல்லா விசயங்களையும் படித்திருக்கிறேன் என்று சொல்லமுடியாது. ஏன் என்ன விசேசம்?”

“கலைச்செல்வி பழைய பிரதி ஒன்றை இன்றுதான் தற்செயலாகப் படித்துப் பார்த்தேன். அதிலே ஒரு சிறுகதை…….”

“யார் எழுதியது?”

“எழுதியவர் பெயரைக் கவனிக்கவில்லை. அந்தச் சம்பவம் தான் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கின்றது.”

“சொல்லுங்கள் நினைவு வருகிறதா பார்க்கலாம்.”

1958 ஆம் ஆண்டின் இனக்கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்திலே வரதர் எழுதிய இக் கதையில் கூட உரையாடலில் இலக்கிய வழக்கு நடையின் செல்வாக்கையே காண முடிகிறது. இது 40 ஆம் ஆண்டுகளில் உருவான எழுத்தாளர்களிடம் பரவலாகக் காணப்படும் ஒரு பொதுப் பண்பாகும். அ.செ.மு., கனக செந்திநாதன், அ.ந. கந்தசாமி முதலியோாின் பல கதைகளில் இத்தகைய மொழி நடையைக் காணலாம். யதார்த்தப் பண்பு இவர்களது கதைகளிலும் பூரண வடிவம் பெறவில்லை என்பதையே இது காட்டுகின்றது.

(தொடரும்)

சிமௌனகுருமௌசித்திரலேகா & எம்நுஃமான்