(அகல் விளக்கு – மு.வரதராசனார். 41. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 18

மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும் எனக்கும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்ததாகக் கூறமுடியாது. தொடர்பும் பழக்கமும் இடைவிடாமல் இருந்ததனால்தான் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று கூறவேண்டும்.

சந்திரனுக்கும் எனக்கும், ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தது. வாலாசாவில் படித்தபோது, அந்த உள்ளத்துணர்வோடு, தொடர்பும் பழக்கமும் இடையறாமல் இருந்தபடியால்தான், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவன் சென்னைக்கு வந்து படிக்கத் தொடங்கியபோது நான் ஓராண்டு வாலாசாவிலேயே படிக்க நேர்ந்தது. தொடர்பும் பழக்கமும் இல்லாமற் போகவே எங்கள் நட்புக் குன்றிவிட்டது.

மாலனும் நானும் கல்லூரியை விட்ட பிறகு, எங்கள் நட்பும் அப்படித்தான் ஆகுமோ என்று எண்ணினேன்.

ஆனால், சந்திரன் வாலாசாவில் இருந்தபோது என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். கல்லூரிக்கு வந்ததும் அவனுடைய மனம் மாறிவிட்டது. அவனுக்கு ஒருவகையான உயர்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த மனப்பான்மைதான் வேண்டும். உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ உள்ள இடத்தில் உண்மையான நட்பு ஏது? நான் அவனிடம் கணக்குக் கற்றேன்; உதவி பெற்றேன்; ஒரு முறை அவன் தேறிவிட நான் தவறிவிட்டேன்; அதனால் வகுப்பில் உயர்வு தாழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக மனநிலையிலும் வேறுபாடு ஏற்பட வேண்டுமா? அந்த வேறுபாடு ஏற்படாதிருந்தால் எங்கள் நட்புச் சிறிதும் மாறியிருக்காதே.

கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்த பிறகு இவ்வாறு அவனைப்பற்றி அடிக்கடி எண்ணங்கள் வந்தன. ஆனால் முன்போல் கவலையோ ஏக்கமோ இல்லை. சில நாட்களில் மறந்தாற்போலவும் இருந்தேன்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய அறையின் சன்னல் பக்கமாகப் பழைய மாணவர் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் முந்திய ஆண்டுக்கு முந்திய ஆண்டில் விடுதியில் சின்ன அமர்க்களம் நடத்திய கதர் மாணவர் என்று தெரிந்துகொண்டேன்.

“நினைவு இருக்கிறதா? சாந்தலிங்கம்” என்றார்.

“ஆமாம்” என்று உள்ளே வருமாறு அழைத்தேன். உள்ளே வந்து உட்கார்ந்தார்.

“சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும் என்று உங்கள் சந்திரனுக்கும் எனக்கும் போராட்டம் நடந்ததே நினைவு இருக்கிறதா?”

“நன்றாக நினைவு இருக்கிறது. எங்கே இருக்கிறீர்கள்?”

“ஊரில்தான் இருக்கிறேன் நிலபுலங்களைப் பார்த்துக் கொண்டு.”

“தொழில்?”

“நிலபுலம் பார்ப்பது தொழில் அல்லவா? உங்களுக்கு அது ஒரு தொழிலாகத் தெரியவில்லையா?”

“மெய்தான். வேறு வேலை-?”

“வேண்டா என்று இருக்கிறேன். இதுவே போதும்.”

“காந்தீயம்.”

“ஆமாம். விருப்பமில்லையானால் மனிதம் என்று சொல்லுங்கள்.”

அவர் பழையபடியே இருந்தார். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது. சென்னையில் இருந்தபோது வெயில் படாமல் இருந்தவர், இப்போது காட்டிலும் மேட்டிலும் வெயிலில் திரிவதால் இப்படி நிறம் மாறியிருக்க வேண்டும் என்று எண்ணினேன். “எங்கே வந்தீர்கள்? யாரையாவது கல்லூரியில் சேர்த்திருக்கிறீர்களா?” என்றேன்.

“உங்களிடம்தான் வந்தேன்.”

“என்ன? சொல்லுங்கள்.”

“சந்திரனைப்பற்றி-“

“ஒன்றும் தெரியவில்லையே.”

“முயற்சி எல்லாம் கைவிட்டு விட்டார்களா?”

“அவ்வளவுதான். நானும் அவனுடைய ஊர்க்குப் போய் பல நாள் ஆயின.”

“பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்?”

“கவலைபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் நான் பார்க்கவில்லை.”

“மறந்துவிட்டீர்கள்; கல்லூரி உறவு அவ்வளவுதான்.”

“மறக்கவில்லை.”

“அந்தக் குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள்”

“அவன் ஒருவன். பெண் ஒருத்தி”

“சரி” என்று மேல்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.

அவருக்கு ஏதோ தெரியும் போல் இருக்கிறது என்று உணர்ந்தேன். “நீங்கள் எங்காவது சந்திரனைப் பார்த்தீர்களா?” என்றேன்.

“ஆமாம். அதைப்பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சந்திரனுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு போய் நான் சொல்லும் இடத்தில் தேடிப்பாருங்கள்.”

“சரி”

என் உள்ளத்தில் சந்திரனைப் பற்றி இருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வரவேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அக்கறையுடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.

“நீலகிரி மலைக்கு ஒரு வேலையாகப் போகவேண்டியிருந்தது. உருளைக்கிழங்கு எப்படிப் பயிரிடுகிறார்கள் என்று பார்த்து வரப் போனேன். நண்பர் ஒருவரும் உடன் வந்திருந்தார். உபதளையில் அவர் ஒருவரைப் பார்ப்பதற்காக அழைத்துப் போனார். அங்கே ஒரு சின்ன தேநீர்க் கடை இருந்தது. பசியால் தேநீர் குடிப்பதற்காக அதனுள் நுழைந்தபோது சந்திரனைப் பார்த்தேன். தேநீர் குடித்துக் கொண்டிருந்த அவன் என்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டான். எனக்கு ஐயம் ஏற்பட்டது. சந்திரனோ வேறு யாரோ, எப்படிக் கேட்பது என்று தயங்கினேன், அவனுடைய உடையும் மாறியிருந்தது. காக்கிச் சட்டையும் காக்கிக் காலுறையும் உடுத்திருந்தான். தலைமயிர் கலைந்திருந்தது.

மீசை தடிப்பாக இருந்தது. இங்கே இருந்த போது அவன் ஒருநாளும் அப்படி இல்லை. அவன் எதிரிலேயே போய் உற்றுப் பார்த்தேன். அவன் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு, விரைவாகத் தேநீர் குடித்து எழுந்தான். துணிந்து, “சந்திரா!” என்றேன். தன்னை மறந்து அவன் ‘ஆ’ என்றான். பிறகு ஏதோ தவறு செய்துவிட்டவன் போல், ‘ஓ! நீங்களா? எங்கே வந்தீர்கள்? இதோ இருங்கள். வெளியே ஒருவர் காத்திருக்கிறார். அவருக்குச் சொல்லி விட்டு வருவேன்’ என்று நடந்தான். போனவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. உடனே அங்கே தேநீர் தருவோனைப் பார்த்து, ‘அந்த ஆள் சந்திரன் உனக்குத் தெரியுமா?’ என்றேன். ‘எனக்குத் தெரியாது. அதோ அவனுக்குத் தெரியும்’ என்று சொல்லி அவன் இன்னொருவனைச் சுட்டிக் காட்டினான். அவனை மெல்ல அழைத்துக் கேட்டேன். சந்திரன் என்ன தொழில் செய்கிறான், எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டேன். அவன் எல்லாவற்றையும் சொன்னான். அதற்குப் பிறகு அவனுடைய பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன். அவர்களுடைய முகவரி தெரியாது. உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன். உங்களுடைய பெயர் தெரியாது. கல்லூரியில் இருக்கிறார்களோ இல்லையோ என்று ஐயம் எழுந்தது. பணம் செலவானாலும் சரி, நேரில் போய்விட்டு வருவோம் என்று வந்தேன்” என்றார்.

 அவருடைய இரு கைகளையும் பற்றிக் கொண்டு, “மிக்க நன்றி, இது அந்தக் குடும்பத்துக்கு மிகப் பெரிய உதவி. அவனுடைய அப்பா அம்மா கேள்விப்பட்டால் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இப்போதே தந்தி கொடுப்பேன்” என்றேன்.

“அவசரமே கூடாது. அவனோ ஒளிந்து வாழ்கிறான் என்று தெரிகிறது. இதனால் ஆர அமர முயற்சி செய்து தேடிப் பிடிக்க வேண்டும். இனிமேல் எங்கும் போக மாட்டான். அந்தக் கவலையே வேண்டா. ஒரு குடும்பமாகவே இருக்கிறான். ஒரு பிணைப்பு இருக்கிறது. உடனே விட்டுப் போக அவனால் முடியாது. கடிதம் எழுதுங்கள் போதும்” என்றார்.

குடும்பம், பிணைப்பு என்பவற்றைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஒருவகை அருவருப்புத் தோன்றியது. பழுத்த மாம்பழம் கிடக்கிறதே என்று மகிழ்ந்து கை நீட்டியபோது கொஞ்சம் அழுகல் என்று சொல்லக் கேட்டது போல் இருந்தது என் மனம். இருந்தாலும், பெற்றோருக்குப் பிள்ளை கிடைப்பான் அல்லவா, அதுவே பெரிய மகிழ்ச்சியாகும் என்று எண்ணினேன். “அங்கே யாரோடு வாழ்கிறான்? விட்டு வருவானா?” என்றேன்.

“எனக்கு நேரே தெரியாது. சொல்லக் கேட்டதுதான். அந்தத் தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்னான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவள் ஒருத்தியாம், முப்பது வயது இருக்குமாம். குழந்தை ஒன்றும் இல்லையாம். அவளோடு அன்பாக வாழ்க்கை நடத்துகிறானாம்” இவ்வாறு அவர் சொல்லிச் சிறிது நிறுத்தினார். பிறகு, “அன்பான வாழ்க்கையாக இருந்தால், அவளிடமிருந்து பிரிப்பது பாவம் அல்லவா என்று எண்ணினேன். அதனால் உங்களுக்குச் சொல்லாமலே இருக்கலாம் என்றும் கருதினேன். மறுபடியும் வேறு ஒருவகையில் இரக்கம் ஏற்பட்டது. அவளுடைய கணவன் ஒரு கொலைக்குற்றத்தில் அகப்பட்டுப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறானாம். அவன் சிறையிலிருந்து எப்படியோ வெளியே வந்து பார்ப்பானானால் முன்பின் எண்ணிப் பார்க்காமல் சந்திரனைக் கொன்றுவிட்டு மறுவேலை பார்ப்பான். அதை எண்ணியவுடனே எனக்கு எப்படியாவது சந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி ஏற்பட்டது” என்றார்.

“அய்யோ! அப்படிப்பட்ட குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?” என்று வருந்தினேன். என்னுள் சிறு நடுக்கம் உணர்ந்தேன்.

“என்ன செய்வது? போனான், போன இடத்தில் ஒரு பெண்ணின் அன்பு கிடைத்தது. பிறகு என்ன விளையும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த அன்பை ஏற்றுக் கொண்டான். நேர் வழியில் போகாமல் கொஞ்சம் திரும்பினால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காலைப் பொத்தும்” என்றார்.

“என்ன தொழில் செய்கிறான்?”

“அதையும் கேட்டேன். தேயிலைத் தோட்டத்தில் முதலில் கூலி வேலைக்குத்தான் போனானாம். பிறகு அவனுக்கு ஆங்கிலப் படிப்பு இருப்பதாகத் தெரிந்து கொண்டு கணக்குப் பிள்ளை வேலை கொடுத்திருக்கிறார்களாம். அங்கேயே இருந்தாலும் முன்னுக்கு வரலாம். ஆனால்-“

“அய்யோ! அந்த ஆபத்தான வாழ்வில் இருக்கக்கூடாது. சிறையிலிருந்து கணவன் வெளியே வந்தால், தன் மனைவி மாறிவிட்டாள் என்பது தெரியாமல், சந்திரன் மேல் ஆத்திரம் கொண்டு ஏதாவது செய்துவிடுவான்.”

“ஆமாம்.” சிறிது அமைதியாக இருந்து பெருமூச்சு விட்டார். உடனே, “உயர்ந்த பண்பாடு உள்ள படித்த குடும்பமாக இருந்தால், மனைவி மனம் மாறிவிட்டாள் என்று அறிந்ததும் பேசாமல் அமைதியோடு திரும்பிவிடுவான். தாழ்ந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றால் உயிரைப் போக்குவது தவிர வேறு எதையும் எண்ண மாட்டார்கள். காரணம் அறியாமை, போலிமானம்” என்றார்.

“போய்த்தேடி அழைத்து, வருவதே பெரிய தொல்லைதான்” என்றேன்.

“அப்படி அல்ல. நீங்கள் வந்திருப்பது தெரியாதபடி போய்ப் பிடிக்கவேண்டும். நேரில் போன பிறகு அதற்கு வேண்டிய வழிகள் தோன்றலாம்” என்றார்.

அவர்க்கு மனமார நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று உண்ணுமாறு வேண்டினேன். உணவு முடிந்ததும், அவர் தம்முடைய முகவரியைத் தந்து, “நடந்தவற்றைத் தெரியப்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டு விடை பெற்றார்.

உடனே என் அறைக்கு வந்து கடிதம் எழுதினேன். மூன்றாம் நாள் காலையே பெருங்காஞ்சியிலிருந்து சாமண்ணாவும் அந்த ஆசிரியரும் புறப்பட்டு விடுதிக்கு வந்தார்கள். சந்திரனுடைய புதிய குடும்ப வாழ்வு தவிர, மற்ற எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன். இருவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்று இரவே புறப்படவேண்டும் என்றார்கள். நானும் உடன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இசைந்தேன். பிறகுதான் ஊரில் அத்தையைப் பற்றியும் சந்திரனுடைய தாயைப் பற்றியும் கேட்டேன். தாய் மகனைப் பற்றிய கவலையோடு உணவும் உறக்கமும் இல்லாமல் வருந்தி இறந்துவிட்டதாக ஆசிரியர் சொன்னார். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. சந்திரன் கேள்விப்பட்டால் உண்மையாகவே வருந்துவானே என்றும், ஒருவன் தவறு காரணமாகப் பெரிய குடும்பமே துன்புற நேர்ந்ததே என்றும் கலங்கினேன்.

அவன் ஒரு குடும்பத்தில் பிணைப்புண்டிருப்பதை ஆசிரியர்க்கு மட்டும் தனியே சொல்லவேண்டும் என்று எண்ணினேன். தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். இரயிலில் சென்றபோது சாமண்ணா அயர்ந்து உறங்கினார். அவர் குறட்டைவிட்டு உறங்கிய நேரம் பார்த்து, ஆசிரியரிடம் சொன்னேன். அவர் திடுக்கிட்டவர்போல் என்னைப் பார்த்து, “அய்யோ! கொலைக்காரக் குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொண்டான்?

தக்க சமயத்தில் வந்து சொல்லிய அந்த நல்லவர் உயிர்ப்பிச்சை அளித்த உதவி அல்லவா செய்திருக்கிறார்” என்றார். சிறிது நேரம் கழித்து, “சந்திரன் இவ்வளவு பொல்லாதவனாக – துணிச்சல் உடையவனாக – மாறுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வாலாசாவுக்கு அழைத்துப் போய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது எப்படி இருந்தான்! உனக்குத் தெரியுமே! மருண்டு மருண்டு பார்த்தான். இவனுக்குத் தைரியம் வரவேண்டுமே என்று கவலைப்பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில், ஒரு முறை ஊருக்கு வந்தபோது, என்னிடம் தனியே வந்து என் உடம்பில் வலு இல்லாமற் போகிறது. ஒரு மருத்துவரிடம் சொல்லி நல்ல மருந்து வாங்கிக் கொடுங்கள்” என்று கேட்டான்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு