(இராவண காவியம் கதைச் சுருக்கம் தொடர்ச்சி)

இராவண காவியம் தொடர்ச்சி

 

சித்திரக் கூடத்தைவிட்டு இராமன் தமிழகத்தை அடைய ஆரியர் வரவேற்கச் சில நாளங்கிருந்து சரபங்கன் நிலையை யடைந் திருந்தனர். ஒரு நாள் முனிவர்கள் ஒன்று கூடி வந்து தமிழகத்தில் தாங்கள் தவவேள்வி செய்ய முடியாமல் கரன் தடுப்பதைக் கூறி அவனைக் கொன்று தங்களை வாழ்விக்கும்படி வேண்டினர். ராமன் அதற்கிசைந்து விடை பெற்றுச் சென்று முனிவர் இருக்கையில் தங்கித் தமிழ் கற்றும், வேள்வி செய்ய முனிவர்க்குதவியும், இரண்டகத் தமிழரை நட்பாக்கியும் பத்தாண்டினை அங்கே கழித்தனன், பின் அகத்தியன் நிலையை படைந்து அவனால் ஒரு வில்லும், இரு அம்புக்கூடும் தரப்பெற்றுச் சென்று பஞ்சவடி என்னும் இடத்தில் தங்கி யிருந்தனர்.

⁠இராமன் ஒரு நாள் தனித்துலாவிய காம வல்லியைக் சுண்டு காமுற்று, அவள் அறிவுரையைக் கொள்ளாது கையைப் பிடித்திழுத்து வற்புறுத்தினான். அவள் திமிறிக்கொண்டு விரைந்து சென்றனள், இராமன் தன் தம்பியால் அத்தமிழரசியை மூக்கையும் காதையும் முலைக்கண்களையும் அறுத்துக் கொன்று, முன்னேற்பாடில்லாத கரனையும் பொருதழித்தான். 

⁠தூதரால் செய்தி யுணர்ந்த இராவணன் கொதித்தெழுந்து தேரேறி விந்தஞ் சென்று, காமவல்லி வளர்த்த மானை விட்டு இராம இலக்குவரைப் பிரித்து அவரை வளைத்துக் கொள்ளும்படி வீரரை வைத்துச் சீதையை எடுத்து வந்தனன். சீதை புலம்ப ‘உன் கணவன் வரின் நல்லறிவு புகட்டி அவனுடன் அனுப்புகிறேன் அஞ்சேல்’ எனத் தேற்றித் தன் தங்கையின் நிலையில் வைத்துப் போற்றி வந்தனன்.

⁠மறவரால் வளைக்கப்பட்ட இராமலக்குவர் அவரை யோட்டிச் சென்று இலைக் குடிலில் சீதையைக் காணாது வருந்தித் தேரடிப் பாதையைப் பின்பற்றிச் சென்று ஒரு முனிவன் குடிலை யடைந்தனர். அவன், சீதையை இராவணன் இலங்கை கொண்டு செல்வதையும், வாலியால் துரத்தப்பட்டு மதங்கரிடமுள்ள சுக்கிரீவன் வரலாறுங் கூறியனுப்பச் சென்று மதங்கரைக் கண்டு நிகழ்ந்தது கூறினர். அங்கே அனுமன் வர மதங்கர் அவர்களை அறிமுகப் படுத்தி அனுமனுடன் அனுப்பச் சென்று சுக்ரீவனைக் கண்டு வரவுகூறி உதவி நாடினர். அவன் என் அண்ணனைக் கொன்று அரசீந்தால் உனது மனைவியை மீட்டுத் தருவேன் என்றான், இராமன் அதற்கிசைந்து வாலியுடன் பொரச் சொல்லி ஒரு மரத்தின் மறைவிலிருந்து அம்பெய்து வாலியைக் கொன்று சுக்ரீவனைக் கிட்கிந்தைக் கரசனாக்கி மதங்கர் நிலையை யடைந்திருந்தான்,    

சீதையைப் பார்த்து வரத் தேவியோடு சென்ற இராவணன் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவன் படையொடு இலங்கையை முற்ற வரப்போவதாகக் கூறிச் சென்றனன், சீதை, தன்னால் இலங்கை போர்க்கள மாவதை எண்ணிப் புலம்பிக் கொண்டிருக்கையில் பீடணன் மகள் திரிசடை அங்கு வரவே, உன் தந்தையிடம் சொல்லி என்னை எப்படியாவது என் கண்வனிடம் சேர்த்துப் போரில்லாமல் செய்வாயெனச் சீதைவேண்டினாள். திரிசடை அவ்வாறே தந்தையிடம் சென்று கூறி அவன் சரியெனக்கூறி யனுப்பிவிட்டுத் தானும் இராமனை யடைந்து சுக்கிரீவன் போல் அரசனாக எண்ணி அதைத் தன் நண்பன் நீலனிடம் கூறி ஆவன செய்யுமாறு ஏற்பாடு செய்திருந்தனன். 

⁠இராமன் சீதையைப் பார்த்து வரும்படி சுக்கிரீவனது அமைச்சனான அனுமனை அனுப்பினன். அனுமன் இலங்கை சென்று ஓர் ஆரியனால் பீட்ணன் நிலைமை யறிந்து சென்று பீடணன் மனையை யடைந்தான். பீடணன் அனுமனை வரவேற்றுத் தனது எண்ணத்தைக் கூறவே, அனுமன் அவ்வாறே செய்வதாக உறுதி கூறித் திரிசடையுடன் சென்று சீதையைத் தனியாக அழைத்து வந்து இராமன் படையொடு வந்து இலங்கையையழித்து உன்னை மீட்டுச் செல்வா னெனவே சீதை திடுக்கிட்டு இராவணன் பெருமை கூறித் தனியாக வரும்படி கூறுமெனக் கூறித் திரிசடையுடன் சென்றனள். 

⁠அனுமன் வெளிச் செல்லும்போது வாயிற் காவலர் பிடித்துக் கொண்டுபோய் இராவணனிடம் விட்டனர். இராவணன், அவன் வந்த வரலாற்றைக் கேட்டு, அயலானோடு கூடி அரசைக் கொன்ற இரண்டகச் செயலைக் கண்டித்துக் கூறி, இராமனைத்தனியாக வந்து மன்னிப்புக் கேட்டு மனைவியை யழைத்தேகும்படி கூறெனக் கூறியனுப்பினான்.

⁠அனுமன் சென்று கூறவே, இராமன் பணிவை மறுத்துப் படையுடன் சென்று இலங்கைப்புறத்துத் தங்கினான். ஒற்றரால் அறிந்த இராவணன், இராமனிடம் அதிகாயனைத் தூதுவிட்டான், இராமன் பணிவை மறுத்துப் போருக்குத் தயாரெனக் கூறிவிட்டனன். இராவணன் பேரவை கூட்டிப் போரில் முறியடிப்பதே ஏற்றதென முடிவு கண்டனன். அப்போது பீட்ணனெழுந்து இராமன் திறமை கூறிச் சீதையை விட்டு உறவு கொள்வோம, மீளானாயின் விந்த நாட்டை விட்டேனும் பகையின்றி வாழ்வோமென்றனன். இராவணன் வெகுண்டு அவையை விட்டோட்டினன்.  

⁠அவையை விட்டுச் சென்ற பிடணன் நீலன், வேலன், குயிலன், சேரி என்னும் படைத் தலைவருடன் சென்று அடைக்கலமென இராமன் காலில் விழுந்தான். அவன் புகல் தந்து அப்போதே இலங்கை யரசனாக அவனுக்கு முடி சூட்டினான். பீடணன் இலங்கையை எளிதில் வெல்வதற்கான உளவையெல்லாம் உரைத்தனன்.

⁠இதையறிந்த இராவணன் கடுஞ்சினங்கொண்டு போர்க்குத் தயாராகும்படி படைத்தலைவருக்குக் கட்டளையிட்டான். தானே தலைவர் முரசறைவித்தனர், தமிழ் மறவர் போர்க்கோலம் பூண்டு திரண்டனர்

⁠பொழுது புலர்ந்ததும் பகைப்படை நகர்ப்புறத்து வந்து தங்கிற்று. இராவணன் கோட்டையைக் காப்பமைக்கும்படி கட்டளை யிட்டுப் பகைப்படை நிலைமையை அறிந்துவர ஒற்றரை ஏவினான். பீடணன் அவரைக் காட்டிக் கொடுத்தனன். இராமன் அவரைச் சிறையிட்டனர். இவ்வாறு பல முறை காட்டிக் கொடுத்தனன் அக்கடை மகன்,.

⁠ஆரியப்படை ஊரை முற்றியது, மதில் போரில் வடவர் படை தோற்றது. களங்கண்டு பொருந்தனர், இரண்டு நாள் இரவும் பகலும் ஓயாது போர் நடந்தது. இருபடையிலும் பலர் மாண்டனர்.

⁠கும்பகன்னனுக்கும் இராமனுக்கும் கடும்போர் நடந்தது. இராமன் சமயம் பார்த்து முறையின்றிக் கைகால்களை யறுத்துக் கொன்றான், செய்தி கேட்ட இராவணன் கதறிப் புலம்பச் சேயோன் தேற்றிச் சென்று போர்க்களம்புக்கான்.   

⁠ஓரிடத்தில் கும்பலாக இருந்த ஆரியப்படையோடு தனியாகப் பொருது கொண்டிருந்தான்.  பீடணன் இராமனிடம் கூறி இதுவே அவனைக் கொல்ல ஏற்ற கால மென்றான். இராமனேவ இலக்குவன், பீடணன், சுக்கிரீவன், அனுமன் முதலியோர் பெரும் படையுடன் சென்று வளைத்துப் பொருந்தனர். ஒருவன் பின்னாலிருந்து தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான். முடிவில் சேயோன் அம்புக் கூடுவறிது பட்டது. வாள் முதலிய கொண்டு பொருதான. அந்தோ! முடிவில் இலக்குவன் ஓரம்பை யேவித் தமிழர்குலக் கொழுந்தைத் தலையை யறுத்துக் கொன்றனன்.

அது கேட்ட இலங்கை ஓவென்றலறியது. இராவணன் பலவாறு புலம்பிச் சீறியெழுந்து களஞ் சென்றான். இரவணனுக்கும் இராமனுக்கும் கடும் போர் நடந்தது. இலக்குவன் முதலிய அனைவரும் சூழ்ந்து பொருந்தனர். இராமன் தேர்ப்பாகனைக் கொன்றான். பீடணன் குதிரைகளைக் கொன்றான், இராவணன் வெகுண்டு அப்பாவி மேல் எறிய வாளை ஓங்கினான். இலக்குவன் குறுக்கே வந்து அம்பெய்யவே அவ்வாளை அவன் மேல் எறிந்தான், அப்போது, அதாவது இலக்குவன் பக்கம் வாளௌறியத் திரும்பும் போது, மாதலி என்பான் ஒரு கூரிய அம்பை இராமனிடம் கொடுத்து,வாள் எறிந்து திரும்பு முன் கொல்க எனவே, முறை கெட்ட இராமன் அவ்வாறே தமிழகம் புலம்பத் தலையறுத்து வீழ்த்தினான், தமிழர் மாபெரும் தலைவன் உடல் மண்ணில் புரண்டது. அடுகளம் அழகளமாய்து. வண்டார்குழலி உடனுயிர் விட்டனள். யாவரையும் அடக்கம் செய்து காடு வாழ்த்திச் சென்றனர் தமிழர். இராமன் மனைவியை யடைந்து பீடணனுடன் கோயில் புகுந்தான்.   

⁠இராமன் பீடணனோடு, தமிழகத்தில் தமிழரைப் போல எல்லா உரிமையும் எய்தி ஆரியர் நிலையாய் இருந்து வாழ்வதற்கேற்ற ஒப்பந்தஞ் செய்து கொண்டு, பீடணனை இலங்கை யரசனாக்கிப் பெரும்படையைக் காப்பாக வைத்து விட்டு அயோத்தி சென்றனன். சுக்கிரீவன் கிட்கிந்தை சென்றனன். பீடணன் ஆரிய அடிமையாய் அரசிருந்தனன். 

⁠இராமன் அயோத்தி சென்று முடிபுனைந்து அரசனாகி வேத வேள்விகள் பல செய்து ஆரியரைப் போற்றி அரசு புரிந்து வருகையில், ஓர் ஆரியன் தனது மாண்ட பிள்ளையுடன அரண்மனையை யடைந்து, உனது நாட்டில் ஒரு சூத்திரன்-தமிழன் தவஞ் செய்கிறான, -அதனால், எனது பிள்ளை இறந்தது எனக்கேட்ட இராமன ஆரியர் வழி காட்ட அங்குச்சென்று, பீடணனது ஆரிய அடிமையாட்சியை வெறுத்து வாள் வடக்கிருந்த -உயிர்விடற்கு உண்ணா நோன்பிருந்த சம்புகன் என்னும் தமிழ் மகனை வெட்டி வீழ்த்தி நகருற்றான். ஆரியர் செத்த பிள்ளை பிழைத்ததெனக் கூறிவிட்டனர்.   

⁠ஒருநாள் ஓர் ஒற்றன் இராமனிடம் வந்து “அயலான் மனையில் பலமாதம் இருந்தவளை அழைத்து வந்து வைத்துக் கொண்டான்” என ஊரார் பழிக்கின்றனர் எனக் கூறினான். இராமன் அதைச் சீதையிடம் கூறி வருந்தினான். சீதை கணவனைத் தேற்றிச் சென்று ஒருவரு மறியாமல் சரயுவில் வீழ்ந் திறந்தனள். பிரிவாற்றாமல் இராமனும் அவ்வாற்றில் விழுந்திறந்தான்.

தொடரும்

இராவண காவியம்

புலவர் குழந்தை