எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை

திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை !

 

 எழுவர் விடுதலையை ஆதரிப்போர் குறித்துக் குறை கூற வேண்டுமா என எண்ணலாம். வரவேற்பவர்களை வாழ்த்த வேண்டாவா எனக் கருதலாம். ஆனால் விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் வந்தபொழுது எதிராக நடந்துவிட்டு இப்பொழுது விடுதலைக்குக் குரல்  கொடுக்கும் நாடகத்தை நாம் எதிர்க்கத்தானே வேண்டும்!

 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கோவையில் 18.04.2014 அன்று மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர், தான் ஓய்வு பெறவுள்ள 25ஆம்  நாளுக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும்  என்று தெரிவித்தார். முதன்மையான தீர்ப்பு என்றதால் இராசீவு கொலைவழக்கில் சிக்கியவர்கள் வழக்கு என்று ஊகித்து அவ்வாறே ஊடகங்கள் வெளியிட்டன. நல்ல தீர்ப்பு வெளிவரும் என்று சொன்னதாகவும் செய்திகள் வந்தன; வந்த தொடர்கள் மாறுபாட்டுடன் இருந்தன. ஆனால், அவற்றின் மையக்கருத்து எழுவர் விடுதலை குறிதத தீர்ப்பு வரும்; அனைவரும் மகிழும் வண்ணம் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பதுதான்.

  திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுவர் விடுதலை குறித்துப் பரிவும் மனித நேயக் கண்ணோட்டமும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? தலைமை நீதிபதி சதாசிவம் பேச்சினைப் பாராட்டியிருப்பார்; எழுவரும் விடுதலை ஆகப்போவதை மகிழ்ந்து வரவேற்றிருப்பார். அன்னை சோனியாவின் அடிமையாக உள்ளவர் எங்ஙனம் வரவேற்க இயலும்? எனவே எதிர்ப்பு தெரிவித்தார்.

  இவ்விடுதலையால் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மாறி அமையும் என்ற அச்சம் வந்து விட்டது.  எழுவர் மீது அன்பு இருந்ததென்றால் என்ன சொல்லி இருப்பார்? “தலைமை நீதிபதி அவர்களே! நீங்கள் 25.04.2014 அன்றுதான் பணிநிறைவு அடைகிறீர்கள். அதற்கு முதல் நாள் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எனவே, 25.04.2014 அன்று தீர்ப்பு வழங்குங்கள்” என்று சொல்லி யிருப்பார். மாறாகக் கடும் கண்டனமாக அவரது எதிர்ப்புக் குரல் வந்தது. இந்த அரசியல் அழுத்தத்திற்கு உச்ச நீதிமன்றம் உள்ளாகியது. எனவே முடிவை மாற்றிச் சில ஐயங்களை எழுப்பி அரசமைப்பு சட்ட ஆயத்திற்கு அனுப்பி விட்டனர். அன்றைக்கே வந்திருக்க வேண்டிய விடுதலைச் செய்தி தள்ளிப்போனதற்குக் காரணமான கட்சி வஞ்சகத்தை மறைத்து ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல நடிக்கலாமா?

  அவர் அத்துடன் நிற்கவில்லை. தமிழரே விசாரித்துத் தீர்ப்பு வழங்கினால் தவறாக எண்ணத் தோன்றும் என்பதால் தமிழரல்லாத நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இவ்வாறு பாகுபாடு காட்டுவது தவறு. எல்லா மாநில வழக்குகளிலும் அவ்வாறுதான் பார்க்கின்றார்களா? உண்மையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் மட்டும் விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் வழக்கல்ல. அவருடன் நீதிபதி இரஞ்சன் கோகோயி(Ranjan Gogoi), நீதிபதி ஏ.விரமணா ஆகியோர் இணைந்த அமர்வே விசாரைணக்கானது. இருந்தும் நடுநிலையில் நின்று சொல்பவர்போல் தவறான காரணம் கற்பித்துள்ளார்.

  இவ்வாறெல்லாம் விடுதலைக்கு வாய்ப்புள்ள போது எதிராகத் திருவாய் மலர்ந்த கட்சி, இப்பொழுது பரிவுள்ளம் உள்ளதுபோல் நாடகம் ஆடுவது தவறுதானே! எனவே, கருத்து கூற அருகதை இல்லை என்பதை உணர்ந்து திமுக அமைதி காக்க வேண்டும்.

 பெருந்தன்மைப் போர்வை போர்த்திக் கொண்டு வஞ்சக உள்ளத்துடன் உள்ள காங்கிரசும் எதுவும் சொல்ல அருகதை யற்ற கட்சியே!

11.10.1984 இல் தலைமையமைச்சர் இந்திரா காந்தி  சீக்கியச் சமயத்தைச் சேர்ந்த இரு மெய்க்காவலர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று முதல் 4 நாள் சீக்கியர்களை அடையாளம் கண்டறிந்து காங்கிரசார் கொன்றனர். தில்லியில் மட்டுமே 3000 சீக்கியர்களைக் கொன்றனர்.

ஆனால், இதற்கு இராகுல் காந்தி ஒரு பெரிய மரம் விழும்பொழுது கீழ்நிலம் அதிரத்தான் செய்யும் (“When a giant tree falls, the earth below shakes.”) என்றார். இதனை ஒட்டிக் காங்கிரசு அமைச்சர் ஒருவர் “ஆலமரம் விழும் பொழுது அதனடியில் உள்ள புழு பூச்சி உயிரினங்களும் அழியத்தான் செய்யும்” என்றார். ஆளாளுக்கு ஆலமரம் விழுந்தால் அடியில் உள்ள சிறு செடிகளும் அழிவது இயற்கை என்பதுபோல் பேசினர்.

இவர்கள் தீவிரவாதம் குறித்துப் பேச என்ன தகுதி உள்ளது?

  அது மட்டுமல்ல.  தில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை, பாலியல் வல்லுறவுகள், கலவரம், தீவைப்பு குறித்து 740 வழக்குகள் தொடரப்பட்டன. ஒன்றில்கூட யாருக்கும் தண்டனை கிடைக்காவண்ணம் பார்த்துக் கொண்டனர்.

  நாடாளுமன்றத்தில் முதிர்ச்சியுடன் பேசிய இராகுல்கந்தி, சிறுபையனைப்போல் சீக்கியருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்துப்படவில்லை என்கிறார்.   கொலை முதலான வன்கொடுமைகளுக்கு வருத்தம்கூடத் தெரிவிக்காத காங்கிரசு இன்று எழுவரை விடுதலை செய்தால் தீவிரவாதம் என்னாகும் என்கிறது.

  காங்கிரசுக் கட்சியின் செய்தித்  தொடர்பாளர் இரந்தீப் சிங்கு சுர்சீவாலா செய்தியாளர்கள் சந்திப்பில் “ இந்த அரசு செய்வது என்ன?. அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா?. இது தான் இந்த அரசின் கொள்கையா?. தீவிரவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டவர்களைத் தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?” என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தன் இனம் காங்கிரசின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதும் கற்பழிக்கப்பட்டதும் உடைமைகள் அழிக்கப்பட்டதும் நினைவில் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பாரா?

  2014 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தமிழ்நலக் கட்சிகள் பாசகவை ஆதரித்தன.  பாசக தலைவர்களும்  தமிழக மீனவர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பதுபோல் பேசினர். காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதே பாசகவின் கொள்கையாக உள்ளது. அவ்வாறிருக்க காங்கிரசு போல்  தமிழர்களுக்கு எதிரான முடிவுகளைப் பாசக எடுக்கலாமா?

  இந்த நேரத்தில் அதிமுகவைப் பாராட்டவேண்டும்.  பாசகவின் பொம்மை அரசு, அடிமை அரசு என்றெல்லாம் அதிமுக ஆட்சியைக் கேலி செய்கின்றனர்.  மேனாள் முதல்வர் செயலலிதா, எழுவர் விடுதலையில் உறுதியான நடவடிக்கை எடுத்ததுபோல் எடப்பாடி பழனிச்சாமி அரசும் உறுதியாக இருந்து எழுவர் விடுதலையைப் பரிந்துரைத்துள்ளது.

“பாசகவும், பாசகவின் கூட்டாளியான அதிமுகவும், பாசகவால் நியமிக்கப்பட்ட ஆளுநரும், இந்தக் கொலைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கில் செயல்பட்டுவருவது உண்மைதானே?” எனக் காங்கிரசு செய்தியாளர் கூறியுள்ளார். இதன் மூலம் எதிரான நிலைப்பாட்டிற்கு அக் கட்சி தூண்டுகிறது. ஆனால் தமிழின் பெருமையைப் பேசும் பாசக,  தமிழில் வாழ்த்து, சுட்டுரை போன்றவற்றைத் தெரிவிக்கும் பாசக, எழுவர் விடுதலைக்குத் தடையில்லை என வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.  இதன் மூலம் ஆளுநர் உடனடியாக விடுதலைக்கான பரிந்துரையை ஏற்க வேண்டும். கருத்து கூற அருகதையற்றவர்கள் வாய்மூடிக்கிடக்க வேண்டும்.

– குவியாடி

https://dhinasari.com/general-articles/55105-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-