கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார்! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 32/ 69 இன் தொடர்ச்சி)
தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் ப. மருதநாயகம்
33/ 69
பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)
அருத்தசாத்திரம் எனப்படும் கெளடலியத்தின் ஆசிரியருக்குத் திருவள்ளுவர் கடன்பட்டிருப்பதாகச் சிலர் தப்பும் தவறுமாக எழுதி வருகின்றனர். கெளடிலியர்தான் திருவள்ளுவருக்குக் கடன்பட்டிருக்கிறார் என்பதை மேலை அறிஞர்களின் கருத்துகளைக் கொண்டு சிறப்பாக நிறுவியுள்ளார் பேரா.ப.மருதநாயகம்.
விண்டர் விட்டுசன், சாலி, கீத்து முதலான மேலைக்கல்வியாளர்கள், சந்திரகுப்புதனது காலத்தில் சாணக்கியர் என்ற பொருள் நூலாசிரியர் ஒருவரும் இருந்ததில்லை எனவும் அந்நூல் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதே என்றும் நிறுவியுள்ளதை எடுத்துரைக்கிறார். ‘அருத்த சாத்திரம் மெளரியர் காலத்து ஆவணமா?’(Is the Arthasastra a Mauryan Document?) என்னும் கட்டுரையில் மார்க்கு மக்கிளீசு (Mark Mcclish), அருத்த சாத்திரம் மெளரியர் காலத்தில் எழுதப்பெற்ற நூலன்று; அதனை எழுதியவர் சாணக்கியர் என்ற பெயரில் சந்திரகுப்புத மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர்; அது, சந்திரகுப்புத மெளரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பெற்ற நூல் என நிறுவியுள்ளார். இதனை நமக்குத் தெரிவிக்கும் பேரா.ப.மருதநாயகம், கி.பி.நான்காம் நூற்றாண்டினைச் சேர்ந்த அருத்த சாத்திரமே திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டுள்ளது என்பதைச் சிறப்பாக ஆறாம் கட்டுரையில் விளக்கியுள்ளார்.
மனுசுமிருதி அருத்தசாத்திரத்திற்குப் பின் தோன்றியதென்பதையும் அதற்குக் கடன்பட்டிருக்கிறது என்பதையும் சமற்கிருத அறிஞர்களின் கருத்துகள் அடிப்படையில் நமக்கு இக்கட்டுரையில் உணரத்தியுள்ளார். அரசாட்சி, தூது, வினைசெயல்வகை முதலானவை குறித்த நல்ல கருத்துகள் யாவும் திருக்குறட் பாக்களை அப்படியே எதிரொலிப்பதை விளக்கியுள்ளார். அதே நேரம், அரசன் நிலத்தைக் கொள்ளுதல், நிலையாக வைத்துக் கொள்ளல் போன்ற அறமற்ற செயல்களையே அருத்தசாத்திரம் கூறுகிறது. நீதி முறையில் பிராமணருக்கு முதன்மை அளித்து வருண வேறுபாட்டு அடிப்படையிலான நீதி முறையையே அது கூறுகிறது.
எட்டாம் கட்டுரை அறவியலில் திருக்குறளின் சிறப்பையும் திருக்குறளைக் கையாண்டுள்ள சுக்கிர நீதியின் பகுதிகளையும் திருக்குறளுக்கு மாறாகச் சாதிவழிபட்ட சுக்கிரநீதியின் கருத்துகளையும் எடுத்துரைக்கிறது.
“மனுநீதி, சுக்கிர நீதி, கெளடலியம் ஆகிய மூன்று சமற்கிருத நூல்களில் அறவிலக்கியம் என்ற முறையில் சுக்கிரநீதி உயர்ந்தது என்று சமற்கிருத அறிஞர்கள் கருதுவர். அதுவே திருக்குறளுக்கு மிகையாகக் கடன்பட்டிருப்பது உண்மை. ஏனைய இரண்டும் வருணப் பாகுபாட்டைப் போற்றும் அளவிற்குச் சுக்கிர நீதி போற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் இம்மூன்றும் திருக்குறளைப்போல் மனித வாழ்க்கையைக் கால, இட,நிற, இன, மொழி வேறுபாடின்றி நோக்கும் முயற்சியை மேற்கொள்ளவில்லை யென்பதோடு மிகக் குறுகிய மனப்பான்மையைக் கொண்டாரால் தொகுக்கப்பட்டவை யென்பதும் நம்மவர் அறியற்பாலது” என ஆய்வு முடிவாகப் பேரா.ப.மருதநாயகம் தெரிவிக்கிறார்.
பிராகிருதத்தில் காணப்பெறும் தமிழ் அகமரபை எடுத்தியம்பி அகநானூறு, காதாசப்தசதி ஆகியவற்றை ஒப்பிட்டு அடுத்த கட்டுரையை எட்டாவதாக அளித்துள்ளார். தமிழுக்கு மூலங்கள் சமற்கிருத நூல்களே என்னும் ஆரியப்பொய்யைத் தழுவி, கே.எசு.சீனிவாசன் என்பாரும் நா.செயராமன் என்பாரும் இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டுத் தவறான கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டும் பேரா.ப.மருதநாயகம், “வடமொழியாளர்கள் சிலர் சங்க அகப்பாடல்களின் தனித்தன்மையை அறியாது அல்லது அறிந்தும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு காதாசப்தசதியே மூல இலக்கியம் எனப் பிதற்றுவதில் பொருள் இல்லை என்பதை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு” எனப் பேரா.வ.செயதேவன் அறிவித்த ஆய்வு முடிவையும் நமக்கு உணர்த்துகிறார்.
சில கவிதைக் கூறுகள் தமிழ்ச்சங்க இலக்கியங்களிலிருந்து மகாராட்டிரி பிராகிருதம் வழியாகச் சமற்கிருத இலக்கியங்களுக்குச் சென்றிருக்கின்றன எனச் சமற்கிருத அறிஞர்கள் கூறியதைச் சான்றுகளுடன் விளக்குகிறார். சீகுபிரைடு இலியன் ஆருடு (Siegfried Lienhard)பலதரமான கவிதை உத்திகள் தமிழிலிருந்து சமற்கிருதம் பெற்றுள்ளதை நிறுவியுள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 34/ 69 )
Leave a Reply