(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 31/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

32/ 69

 

பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம்(2014) (தொடர்ச்சி)

 சமற்கிருதத்தில் பயின்று வந்த சில குறிப்பிடத்தக்க இலக்கியக் கூறுகள் அம் மொழி மரபிற்குரியன அல்ல; சமற்கிருத இலக்கியங்களில் காணப்பெறும் பல ‘கவி சமயங்கள்’ சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை என ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் தெளிவுபடுத்தியவர் மேலை அறிஞரான சீக்குஃபிரிட்டு இலியான்ஆருடு ஆவார். சமற்கிருத நூலான பாகவதத்தில் நமது முல்லைத் திணைப்பாடல்கள் அழுத்தமான தடம் பதித்துள்ளன என மேலைநாட்டறிஞர்கள் விளக்கியுள்ளதையும் நமக்கு இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறார்.  பல கவிதை உத்திகளும் உவமைகளும் காட்சி உருக்களும் தமிழ் அகப்புறப்பாடல்களிலிருந்து காளிதாசனின் காவியங்களுக்கும் நாடகங்களுக்கும் சென்றிருக்கின்றன என்பனவற்றைச் சமற்கிருதப் பேராசிரியர் கே.கிருட்டிணமூர்த்தி முதலான அறிஞர்கள் பலரின் ஆய்வுரைகள் மூலம் நான்காம் கட்டுரையில் விளக்கியுள்ளார். திருமுருகாற்றுப்படை, நற்றிணை, கலித்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு முதலான பல இலக்கிய அடிகளைக் குறிப்பிட்டுக் காளிதாசனின் படைப்புகளில் அவற்றின் செல்வாக்கு உள்ளதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறைச்சி, உள்ளுறை ஆகிய தமிழ்க்கவிதை உத்திகளே பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொனி, வக்குரோத்திபோன்ற சமற்கிருத மொழிக் கோட்பாடுகளாக உருப்பெற்றன என்றும் காளிதாசனுடைய காப்பியங்களிலும் நாடகங்களிலும் சங்க இலக்கியம் தொட்ட இடமெல்லாம் தட்டுப்படுகிறது என்றும் அமெரிக்க நாட்டுச் சமற்கிருதப் பேராசிரியர் சியார்சு ஆருடு(George Hart) தம்முடைய ஆய்வேடுகளில் ஐயத்திற்கிடமின்றிச் சான்றுகளுடன் நிறுவியுள்ளார்.பேரா.ப.ம.நா. அவர் கருத்துகளை எடுத்துச் சொல்வதுடன் மேற்சான்றுகளையும் அளிக்கிறார்.காளிதாசனின் குமாரசம்பவம் போன்ற காப்பியங்களிலும் சாகுந்தலம் போன்ற நாடகங்களிலும் சங்க இலக்கியங்களிலிருந்து காளிதாசன் எடுத்தாளும் கருத்துகள், வருணனைகள் உவமைகள் காட்சியுருக்கள் ஆகியவற்றையும் பட்டியலிட்டுத் தருகிறார்.

 “சங்க இலக்கியங்களை வங்கக் கடலில் தூக்கி எறிய வேண்டும்” என அறியாமையால் குரல் எழுந்த பொழுது கிளர்ந்து எழுந்து மக்கள் இலக்கியங்களாக அவற்றை உணர்த்திப் பரப்பியவர் தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார். அவர் மேற்கொண்ட நன்முயற்சிகள் பயனாக உலக அரங்கில் சங்க இலக்கியம் பரவலாயிற்று.

உலக இலக்கிய அரங்கில் சங்கப்புலவர்களின் செய்யுட்களுக்கு உரிய இடம் கிடைத்துள்ளது. இவற்றின் தனிச்சிறப்பை அறிந்த மேனாட்டுக் கல்வியாளர்கள்,  சமற்கிருத இலக்கியங்களுக்கு அடிப்படையாக உள்ள சங்க இலக்கியங்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர். காளிதாசனின் காவியங்களிலும் நாடகங்களிலும் உள்ள சங்க அகப்பாடல்களின் தாக்கம் பற்றித்தெரிவித்து வருகின்றனர். ஆனால், காளிதாசன் உத்திகளுக்கும் உவமைகளுக்கும் வருணனைகளுக்கும் மட்டுமல்லாமல், சங்கப்பாடல்களை ஆழ்ந்து படித்துத் துய்த்து அவற்றிலிருந்து இலக்கிய வகைகளையும் உருவாக்கியிருக்கிறான் என்பதைப் பேரா.ப.மருதநாயகம் பல சான்றுகளுடன் ஐந்தாவது கட்டுரையில் விளக்கியுள்ளார்.

மேலும், “சிலப்பதிகாரத்திலிருந்து பெற்றதைக் கொண்டு (இ)ருதுசம்காரம் எனும் ஆறு பருவ வருணனையைப்பற்றிய சிற்றிலக்கிய வகையையும் அகப்புறத் தூதுப்பாடல்களால் கவரப்பட்டு ‘மேகதூதம்’ எனும் முதல் தூது இலக்கியத்தையும் சிறுபாணாற்றுப்படை பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் உள்ள விறலி, பாடினி, சூரர மகளிர் ஆகியோர்பற்றிய அடி முதல் முடி வரையிலான தாக்கத்தால் பார்வதியின் ‘நக சிகாந்தக’ வருணனையைும் திருமுருகாற்றுப் படையும் பரிபாடல்களும் அளித்த உந்துதலால் முருகனின் பெருமை கூறும் ‘குமார சம்பவம்’ எனும் முதல் சமற்கிருதக் காப்பியத்தையும் காளிதாசன் தந்துள்ளான்” என்கிறார் பேரா.ப.மருதநாயகம்.

மேலும் இக்கட்டுரையில் அழுத்தமாக அவர், காளிதாசனின் காவியங்களில் சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு எந்த அளவிற்கு இடம் பெற்றிருக்கிறது என்பதைத் திறம்பட விளக்கியுள்ளார்.

ஆறுபருவ வருணனைக்கான பாடலின் கருவையும் உருவையும் இளங்கோவடிகளின் ஊர்காண்காதையில் இருந்து எடுத்துக்கொண்ட காளிதாசன் அதனைத் தனி இலக்கியவகையாகவும் மாற்றியுள்ளதைப் பேரா.ப.மருதநாயகம் விளக்குகிறார்.

சிலப்பதிகார வேனிற்காதையிலிருந்து சில அடிகளைக் காளிதாசன் முற்றிலுமாக எடுத்தாண்டிருப்பதையும் விளக்குகிறார். தமிழ் அகப்பாடல் மரபில் வந்த இளவேனில், குயில்,காதலர் உறவு முதலியவற்றால் கவரப்பட்ட காளிதாசன் அவற்றை (இ)ருது சம்காரத்திலும் குமார சம்பவத்திலும் இரகுவம்சத்திலும் மீண்டும் மீண்டும் சொல்லி மகிழ்வதை நமக்கு விளக்குகிறார்.சிலப்பதிகார அடிகளின் பொழிவு பலவும் காளிதாசனால் எடுத்தாளப்படுவதற்குப் பல சான்றுகள் தருகின்றார்.

மேகதூத வருணனைகள் சில, சங்கப்பாடல்களை மட்டுமல்லாமல், சிலப்பதிகாரத்தையும் நினைவூட்டுவதையும் காணலாம். சிலப்பதிகார கானல் வரிகளைக் காளிதாசன் வரிகள் நினைவூட்டுவதைச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். ஆற்றை அழகிய பெண்ணாக உருவகப்படுத்தி, பூக்களை ஆடையாகவும் மாலையாகவும் காட்டுகிறார் இளங்கோ அடிகள். இதைப்போல் நிருவிந்தியா என்னும் ஆற்றைக் காளிதாசன் உருவகப்படுத்துவதையும் பார்க்கிறோம்.  

வேனிற்காதையில் இடம் பெறும் மாதவி மடல் போன்று துசுயந்தனுக்குச் சகுந்தலை எழுதும் மடலும் அமைந்துள்ளது. இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடிகளில் காணப்பெறும் பொருட்சுவை, சொல்லழகு, காட்சி யமைப்பு, உவமைப்பாங்கு முதலியவற்றைக் காளிதாசன் கையாண்டுள்ளதைச் சிறப்பாக விளக்கியுள்ளார். எனவே, சிலம்பின் ஒலி காளிதாசன் பாடல்களில் ஒலிப்பதை நாம் உணரலாம்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 33/ 69 )