சிக்காகோ: உள்ளூர் உரையங்கமா?உலகத்தமிழ் மாநாடா?

10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும்  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும் வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் அமெரிக்கா(சிக்காகோ)வில் நடக்க இருக்கிறது.  கருத்தரங்க அமைப்பாளர்கள் இது குறித்த அறிவிப்பைப் பரவலாக விளம்பரப்படுத்தி யுள்ளனர்.

பெதுவாக, ‘அகரமுதல’ இதழில் எக்கருத்தரங்கம் அல்லது மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டாலும் நானும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவன் எனத் தவறாகக் கருதி விளக்கங்கள், விவரங்கள் கேட்பவர் பலர் உள்ளனர். இவ்வுலகத் தமிழ் மாநாடு குறித்து அகரமுதல இதழில் வெளியிட்டுப்பிற தளங்களில் பகிர்ந்ததும் பலரும் வினவினர்.  எனினும் அனைவரும் “இம்மாநாட்டிற்குக் கட்டுரைகள் அளிக்கலாமா, பங்கேற்கலாமா” என்றுதான் கேட்டனர். “இதனை நடத்தும் அமைப்பு விளம்பரப்புகழ் உள்ளவர்களைத்தானே பங்கேற்க அழைப்பர். நாம் கலந்து கொள்ள இயலுமா” என்றும் கேட்டனர். “இதற்கு முன்னர் விழாக்கள்நடத்தினர். நன்கொடை நோக்கில் அவ்வாறு செய்திருக்கலாம். இம்முறை மாநாடு என்பதால் கட்டுரைகள் அடிப்படையில் தெரிவு செய்வர். எனவே, கட்டுரைகள் அனுப்பலாம்” என்றேன். அதற்கிணங்கப் பலரும் கட்டுரைகள் அளித்தனர்.

இருவர் மட்டும் “பார்வையாளராகக் கலந்து கொள்ளலாமா” எனக் கேட்டனர். கட்டுரையாளர்களுக்குப் பதிவுக் கட்டணம் இல்லை எனவும் பார்வையாளர்களுக்குக் கட்டணம் என்றும் சில கருத்தரங்கங்களில் தெரிவிப்பர். இதில் பார்வையாளர்களுக்குரிய பதிவு முறை குறித்துத் தளத்திலேயே காணுமாறும் அமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தேன்.

மாநாட்டினர், உள்ளூர் விருந்தோம்பலை ஏற்றுக் கொண்டது அறிந்து  கட்டுரையாளர்கள் மகிழ்ந்தனர். ஆதலின் பரவலாகக் கட்டுரையாளர்கள் பங்கேற்றனர்.

 500 கட்டுரைகள் வந்த பின்னரும் கூட ஆய்வாளர்கள் கட்டுரைகளை அனுப்புமாறு அறிவிப்புகள் வந்துள்ளன.   அடுத்து மிகுதியான கட்டுரைகள் வந்துள்ளமையால் முடிவு தெரிவிக்க நாளாகும் என்றனர். ஆனால், இப்பொழுது கட்டுரையாளர்களுக்குப் பின்வருமாறு மடல்கள் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும், உங்கள் ஆய்வுச்சுருக்கம் சிறந்த ஆய்வின் அடிப்படையைக் கொண்டதாகத் தெரிவதால், உங்கள் ஆய்வினைத் தொடர்ந்து  செய்து கட்டுரையாக எழுதும்படி உங்களை ஊக்குவிக்கின்றோம்.  முடிந்த ஆய்வுக் கட்டுரையினை, ஏப்பிரல் 30, 2019 ஆம் தேதிக்குள் எங்களுக்கு கிடைக்கும்படி  அனுப்ப வேண்டுகிறோம். உங்கள் ஆய்வுக்கட்டுரை மாநாட்டின்  மையக் கருத்திற்கு ஏற்புடையதாக இருக்குமானால் அதைத்  தேர்ந்தெடுத்து மாநாட்டின் கட்டுரைத்  தொகுதியில் வெளியிட விரும்புகிறோம். இத்தொகுதி, எதிர்காலத் தமிழ் ஆய்விற்கும், இனி வரும் மாநாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.

அல்லது

இருப்பினும், உங்கள் ஆய்வுச்சுருக்கம் மாநாட்டின் மையக்கருத்துக்கு ஒத்திருக்குமானால் அதை நாங்கள் மாநாட்டின் ஆய்வுச்சுருக்கத் தொகுதியில் வெளியிடலாம்; அது வருங்கால ஆய்வுக்குப் பயன்படக்கூடும்.

1200 கட்டுரைகள் வந்ததாகவும் அவற்றில் 200 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில் வடிகட்டி 100 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. சிலர், கட்டுரை தெரிவு  பொறுப்பாளர்களுக்குப் பேசி, “எங்கள் சொந்தப் பணத்தில் வரும் பொழுது ஏன் இந்தக் கட்டுப்பாடு” என வினவியுள்ளனர். “நாங்களும் இதைத்தான் கேட்டோம். ஆனால், 100 கட்டுரையாளர்களுக்கு மட்டும்தான் வசதி ஏற்படுத்தித்தர இயலும் என்பதால் அதற்குமேல் தெரிவு செய்ய இயலவில்லை” என்றனர். சிலர், தத்தம் கட்டுரை தெரிவின்மை குறித்துக் கேட்டதற்கு வெவ்வேறு நாடுகளுக்குக் கட்டுரைகள் அனுப்பித் தெரிவு செய்துள்ளனர் என்றும் தங்களுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

“பல்கலைக்கழகத் துறைத்தலைவர் ஒருவரிடம் உங்கள் பொறுப்பிற்காகவாவது உங்கள் கட்டுரைகளைத் தெரிவு செய்வர்” என்று கூறியிருந்தேன். அவர் பேசி, “என் கட்டுரையையும் தேர்ந்தெடுக்கவில்லை” என்றும்  இருவர் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களிடம் கொடுத்துத் திருத்தியதாகக் கூறப்படுவதாகவும் தெரிவித்தார். “தேர்வுத் தாள்களை அவ்வாறு திருத்துவது உண்டு. இவ்வாறு இப்பொழுது நடந்திருக்காது” என்றே தெரிவிததேன். கட்டுரைகள் தெரிவு செய்யப்பெறவில்லை என்றதும் இப்படிப்பட்ட செய்திகள் இறக்கை கட்டி உலா வருகின்றன.   

கட்டுரையாளர் சிலர் தமிழ்நாட்டரசு 5 கோடி உரூபாய் நன்கொடை தந்துள்ளதாகவும் அவ்வாறிருக்க அயல் நாட்டினர்களுக்கும் குழு உறுப்பினர்களுக்கும் முதன்மை அளித்துத்  தமிழக ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என்றும் வினவினர். “அரசிடம் நன்கொடை கேட்டுள்ளனர். எவ்வளவு கேட்டுள்ளனர் எனத் தெரியாது. தமிழக அரசு நன்கொடை தருவதாக இருந்தாலும் கருத்தரங்க நேரத்தில்தான் தருவர். கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றிற்குத் தமிழ்வளர்ச்சி அதிகாரிகள்கூடச் சொந்தச் செலவில்தான் போக வேண்டும் எனக் கூறி நன்கொடை தரவில்லை. எனவே, வீண் புரளிகள் குறித்து எதுவும் பொருட்படுத்தாதீர்கள்” என்றேன்.

ஆய்வாளர்களும் அறிஞர்களும் தொடுக்கும் வினாக்கள் இவைதாம்:
  1. உலகெங்கிருந்தும் வரும் பேராளர்களின் எண்ணிக்கைய அறியாமல் ஏன் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்க வேண்டும்?
  2. சிலர் தத்தம் பகுதி அளவில் கருத்தரங்கங்கள் நடத்தி உரிய தகவலை மட்டும் அறிவிப்பார்கள் அல்லது அதைக்கூடப் பிற பகுதியினருக்குத் தெரிவிக்க மாட்டார்கள். அல்லது பிற பகுதிகளில் கட்டுரைகள் மட்டும் கேட்டு மலரில் வெளியிடுவர். அவ்வாறு சுருக்கமாகக் கருத்தரங்கததை நடத்தியிருக்கலாமே!
  3. குறைவான வசதியே இருக்குமெனில் அதற்கேற்ப உள்ளூர் அல்லது உள்நாட்டு அளவில் கருத்தரங்கத்தை நடத்தியிருக்கலாமே !
  4. 100 பேர் பங்கேற்கு வகையில் சிறிய உரையங்கம் என்றால் எதற்கு உலகளாவிய விளம்பரம்? நன்கொடை திரட்டவா?
  5. 100 பேர்தான் பங்கேற்க இயலும் என்றால் எதற்கு இடையில் 500 கட்டுரைகள் வந்ததாகத் தெரிவித்து மேலும் கட்டுரைகளை வரவேற்க வேண்டும்?

6. “உங்கள் ஆய்வுச்சுருக்கம் சிறந்த ஆய்வின் அடிப்படையைக் கொண்டதாகத் தெரிவதால்” எனக் குறிப்பிடுவோர், ஏன் கட்டுரையை மறுக்க வேண்டும்? இந்தப் பூச்சு வேலை எதற்கு?

  1. உலக மாநாடுகள் என்ற பெயரில் நன்கொடை திரட்டவும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் சில மாநாடுகள் நடைபெறுகின்றன. இவற்றால் அயல்நாட்டு மாநாடுகள் என்றாலே தமிழக ஆய்வாளர்களுக்கு எரிச்சல் வந்து பங்கேற்பதில்லை. அவ்வாறு இருக்காது என்ற நம்பிக்கையை அளித்து ஆனால், இம்மாநாடும் கருத்தரங்கம் தொடர்பான குழுவினர் பங்கேற்கும் நிகழ்வுதான் என ஆர்வலர்களை ஏமாற்றியிருப்பது ஏன்?

கருத்தரங்கம் தொடர்பான குழுக்களின் உறுப்பினர்கள், தோழமை அமைப்புப்பொறுப்பாளர்கள் எண்ணிக்கையே 100 ஐத் தாண்டும் எனத் தெரிகிறது. இவர்களுக்காகத்தான் மாநாடு என்றால் உலக மாநாடாக அறிவித்து விருந்தோம்பலுக்காக நன்கொடைகள் ஏன் திரட்ட வேண்டும்?

இது போன்ற வினாக்களுக்கு விடையிறுக்கத் தகுதியானவர்கள் மாநாட்டுப்பொறுப்பாளர்கள்தாம். எனவே, ஆராய்ச்சியாளர்கள் தொடுக்கும் வினாக்களை அவர்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

மாநாடு அல்லது கருத்தரங்கம் நடத்துவோர் இனியேனும் வசதி வாய்ப்புகளைத் திட்டமிட்டு அதற்கேற்ப நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்ளட்டும்.

நிகழ்ச்சி அமைப்பு முறையும் பரவலான விளம்பரமுமே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இனியேனும் மாநாட்டு விவரங்களைப் பொதுவில் வைக்க வேண்டா. உங்களுக்குள் தெரிவித்துக் கொண்டு சிறப்பாக மாநாட்டை நடத்த வாழ்த்துகள்

தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்

ஏதப்பாடு அஞ்சு பவர் (திருவள்ளுவர், திருக்குறள் 464)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை – அகரமுதல