தமிழின அழிப்பைத் தமிழீழத் தேசம் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை! – உருத்திரகுமாரன்

 இலங்கை அரசின் தமிழின அழிப்பைத்  தமிழீழத்  தேசம் வரலாற்றில் மறக்கவோ மன்னிக்கவோ போவதில்லை. சிங்களத்தின் இனஅழிப்பே தமிழீழத் தாயகம் உருவாகக் காரணமாக இருந்தது என்பதனை வரலாறு பதிவு செய்யும் போது இனஅழிப்பில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் அமைதியாக உறங்குவார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

 கடந்த பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஒரு பொதுக்கூட்டமொன்றில், அங்குக் கூடியிருந்த தமிழ் மக்களை நோக்கித் தலைமையர் இரணில் விக்கிரமசிங்க கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வகையில் நல்லிணக்கம் காணவேண்டும் எனக் கோரியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினத்  துவேசத்தால் நிகழ்ந்திருந்த இனப்படுகொலைக்குத் தீர்வாக அங்கு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமிக்கப்பட்டு வழக்கு, தண்டனை எதுவும் இல்லாமல் நிகழ்ந்த சிக்கல்கள், மன்னிக்கப்பட்டு நல்லிணக்கம் உருவானது போல, இலங்கைத் தீவிலும், அப்படியானதொரு உண்மை – நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation Commission) நியமித்து, கடந்த காலப் போர்ச் சிக்கல்களுக்கு ‘மறப்போம் மன்னிபோம்’ என்ற வகையில், நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டுமென்று  இலங்கையின் தலைமையர் கோரியுள்ளார். இதற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்-

 இனப்படுகொலைக்கு உள்ளான தென்னாப்பிரிக்க கறுப்பர்கள்,அரசியல் விடுதலை பெற்று ஆட்சியில் இருந்தவாறு, வெள்ளையர்களை மன்னித்த தென்னாப்பிரிக்க எடுத்துக்காட்டு, இனப்படுகொலைக்கு உள்ளாகி உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளாக இருக்கும் ஈழத் தமிழருக்குப் பொருந்தாது. தென்னாப்பிரிக்காவின் சிக்கல் வேறு. ஈழத் தமிழர்களின் சிக்கல் வேறு. இரண்டையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடமுடியாது.

 தென்னாப்பிரிக்காவின் மொத்த குடித்தொகையில் 8.9 விழுக்காட்டைக் கொண்ட வெள்ளையர்கள் பெரும்பான்மைக் கறுப்பின மக்களை இனவெறி/இன ஒதுக்கல் (Apartheid) என்று சொல்லப்படுகின்ற இன வெறுப்புக்  கொள்கையின் கீழ், பெருந்தொகையான கறுப்பினத்தவர்கள் இனப்படுகொலைகளுடன் கூடிய பாரிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர்.

 ஆனால் நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆப்பிரிக்க தேசியக் காங்கிரசு, தீரத்துடன் போராடி 1995ஆம் ஆண்டு வெள்ளையின வெறுப்பு ஆட்சியாளர்களைத் தோற்கடித்துக், கறுப்பர்களின் கையில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டது. இதன் ஊடாக இனத்துவேச வெள்ளையர்கள் தோற்கடிக்கப்பட்டு ‘Apartheid’ என்ற இனவெறி வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டது. அத்துடன் ஒடுக்கப்பட்ட கறுப்பர்களின் கைக்கு ஆட்சி அதிகாரம் மாறியது. வெற்றிபெற்ற கறுப்பர்கள் எட்மண்டு தூட்டூ (Desmond Tutu) என்ற கறுப்பினத் தலைவரின் கீழ் மேற்படி விசாரணைக் ஆணையத்தை அமைத்து, வெள்ளையர்களுக்கு மன்னிப்பு அளித்தமை வரலாற்றில் நீதிமான்கள் அளித்த மன்னிப்பாக அமைந்தது.

 ஆனால் இலங்கையின் நிலைமை அப்படியல்ல. ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இனஅழிப்பு புரிந்த ஆட்சியாளர்களும், அந்த இனமும் தொடர்ந்தும் அதிகாரத்தில் உள்ளார்கள். இனஅழிப்பு புரிந்த இனத்தின் கையில் அரசியல் அதிகாரம் அப்படியே உள்ளது.

 இங்கு அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்கள் ஆக்கிமிரமிக்கப்பட்டவர்களாய்;, படுகொலை செய்யப்பட்டவர்களாய் அவமானத்துடன் வாழ்கின்றனர். அத்துடன் இனஅழிப்பு புரிந்த சிங்கள இராணுவம் தொடர்ந்தும் தமிழ் மண்ணை தம் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கிறது.

 இங்கு யார் யாரை மன்னிப்பது?

 இனஅழிப்பின் ஊடான ஆக்கிரமிப்பை மன்னித்துத் தம்மை அதிபர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கையின் தலைமையர் இரணில் கோருகிறார். இத்தகைய அதிபர் அங்கீகாரத்தைத்தான் அவர் நல்லிணக்கம் என்று சொல்கிறார்.

 அரசியல் இறைமைக்காகப் போராடிய தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் எட்டப்படாமலே உள்ளன. அரசியல் தீர்வு என்பது; பொய்க்கதையாகவே ஆகிவிட்டது. போருக்குக் காரணம் தமிழ் மக்கள் அல்லர். அவர்களின் அடிப்படை பிறப்புரிமைகளை மறுத்து, அவர்கள் மீது இனப்படுகொலைக்கான படுகொலைகளை இலங்கையின்  படைத்துறை- காவல் தரப்பினர் கட்டவிழ்த்து விட்ட நிலையிற்தான் போர் வெடித்தது. அந்தப் போரைச் சிங்களத் தேசமே உருவாக்கியது. இந்தப் போரைத் தமிழ் மக்கள் எதிர் கொள்ளத் தள்ளப்பட்டார்கள்.

 இப்போது இனஅழிப்புக்கு உள்ளான தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதற்கு மாற்றாக இனப்படுகொலையாளிகளை மன்னிக்குமாறு தமிழ் மக்களை, இலங்கையின் தலைமையர் இரணில் கிளிநொச்சியில் நின்று கோரியுள்ளார். இங்கு இனஅழிப்புக்குப் பொறுப்பான அரசியல் தலைவர்களும், படைத் தளபதிகளும் தண்டிக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட முடியாதது.

 சிறுபிள்ளைக்குக் கூறுவதுபோல முற்றிலும் வேறுபட்ட, அரசியல் தீர்வு காணப்பட்ட, கறுப்பின மக்களின் கைக்கு அரசியல் அதிகாரம் மாற்றப்பட்ட, கறுப்பின மக்களால் வெள்ளையர்களுக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை இலங்கைத்தீவின்  சிக்கலுக்கு இரணில் பொருத்தப் பார்க்கிறார். இது அறிவியல் குறைபாட்டின் காரணமாய் நடைபெற்றதொன்றல்ல. சிங்களத்தின் மீது விழுந்துள்ள தமிழின அழிப்புக் குற்றச்சாட்டில் இருந்து சிங்களத் தேசத்தைக் காப்பாற்றத் திட்டமிட்ட வகையில் இரணில் இதனைச் செய்கிறார். இதற்குத் தமிழர் தலைவர் எனக் கூறிக் கொள்வோர் சிலரும் சாமரம் வீசுகின்றனர்.

 இலங்கைத்தீவில் தமிழின அழிப்பைப் புரிந்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற சிங்கள இனத்தலைவர்களுக்கும், படையினருக்கும், நீதி மறுக்கப்பட்டிருக்கும், நீதிக்காகப் போராடும் தமிழ் மக்கள் எவ்வாறு மன்னிப்பு அளிக்க முடியும்? எவ்வாறு இனவழிப்பை மறந்து விட முடியும்?

 இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகளாகியும் சிங்களத் தலைவர்கள் யாரும் தமிழ் மக்களுக்கான நீதி பற்றி இன்னும் சிந்திக்கும் நிலையில் இல்லை. மாறாகத் தமிழின அழிப்பை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் சிங்களத் தேசத்துடன் இணைந்து வாழ்வது என்பது ஒத்துவராது – சாத்தியப்படாது. உரிமைகள் மறுக்கப்படும் ஒரு தேசம் ஒடுக்கும் தேசத்தோடு நல்லிணக்கம் பேசுவது என்பது அதிபர்-அடிமை உறவு நிலையாகும். எனவே முதலாவதாகத் தமிழர் தேசத்துக்கு நீதி கிடைத்தாக வேண்டும்.

 “இனப் படுகொலையைப் பிரிவினை மூலம் மட்டுமே ஈடு செய்ய முடியும்.” (“Genocide can be compensated only by secession”) என்ற கூற்று இங்கு கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஐநா மனிதஉரிமைகள் ஆணையத்தில் பன்னாட்டுப் போர்க்குற்றக் கூட்டு விசாரணைக்காகச் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் முடியும் நிலையில், இனஅழிப்புக் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத் தமிழர்களிடம் இருந்து இரணில் மன்னிப்புப் பத்திரம் கோருகிறார். தமிழ் மக்களுக்கு நீதியையும், அரசியல் உரிமையையும் வழங்குவதற்கு மாற்றாக, இனப்படுகொலை புரிந்த சிங்களத் தலைவர்களையும், கொல்லும் இயந்திரம்(Killing Machine) எனச் சொல்லப்படுகின்ற சிங்களப் படையினரையும் காப்பாற்றுவதற்கு இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் வாயிலாக மன்னிப்புப் பத்திரம் பெற்றுப் படுகொலையாளிகளைப் பாதுகாக்க முற்படுகிறார். இது நல்லிணக்கம், மன்னிப்பு என்ற சொற்களின் பேராலான இன்னொரு மோசமான இனஅழிப்புச் சிந்தனை கொண்ட அரசியலாகும். இது குறித்துத் தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். 

 இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையர் விசுவநாதன் உருத்திரகுமாரன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.