(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி)

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 2/3

[அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.

 திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.]

            “ தமிழ்மொழி இருநிலைத் தன்மை கொண்ட மொழி. அதாவது எழுத்து மொழி, பேச்சுமொழி என இருவகைத் தன்மை உடையது என்பதை விளக்க வந்த பேராசிரியர், பேச்சு மொழிதான் மக்களை  ஒன்றி வாழச்செய்கின்றது என்றும்  ஆசிரியரை அணுகும் மாணவரும், மருத்துவரை நாடும் நோயாளியும்,  காதலியைத் தேடும் காதலனும், மக்களைக் கொஞ்சும் தாயும், மெய்ப்பொருளை அறிவிக்க விரும்பும் குருவும்,  காட்சியை வலுப்படுத்தும் தலைவரும், பேச்சுமொழி யின்றேல் ஒன்றும் செய்தற்கிலர்.  ஆயினும்  மேற்கூறிய அனைத்தையும் நேரில் இல்லாதார்க்குத் தெரிவிக்கவும் உதவியாயிருக்கக் கண்டுபிடித்த முறையே எழுத்து மொழியாகும்” எனப் பேச்சு மொழி, எழுத்து மொழியின் முதன்மையைச் சான்றுகாட்டி விளக்குகிறார்.

         உலகில் பேசப்படும்  மொழிகளைப் பல்வேறு மொழிக் குடும்பங்களாகப் பிரித்திருப்பதைச் சுட்டிக்காட்டித்  திராவிட மொழிக் குடும்பத்தைத் தமிழ்க்குடும்பம் என்று பெயரிட்டு தனிக்குடும்பமாகக் கருத வேண்டும்  என வேண்டுகோள் விடுக்கின்றார்.  இந்தோ-ஐரோப்பிய  மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஆரிய மொழிக்கும், தமிழுக்கும்  உள்ள வேறுபாடுகளை விரிவாகவும்,  எளிய முறையிலும் அனைவருக்கும் எளிதில்  புரியும் வண்ணமும் பதிவு செய்கின்றார்.

         தமிழில்  வேற்றுமையை ஓர் உருபாலும், பால் எண்களை விகுதிகளாலும் அறிவிக்கும்  முறை பின்பற்றப் படுகிறது.  ஆரிய மொழியில் வேற்றுமையும்  எண்ணும் ஓர் உருபாலும் பால் பிறிதொன்றாலும் பின்பற்றப்படுகின்றன,

            தமிழ்க் குடும்ப மொழிகளில் எதிர்மறை விகுதிகள் உள.  ஆனால் ஆரிய மொழியில்  அவை இல.  தமிழில் முதல் வேற்றுமைக்கு உருபு இல்லை.  ஆரிய மொழியில் முதல் வேற்றுமைக்கு உருபு உண்டு.  தமிழில்  உடம்படு மெய் தோன்றும்.  ஆரிய மொழியில் அவ்வாறு இல்லை என விளக்கி  இருப்பது  பேராசிரியரின் பன்மொழித் திறனுக்குச் சான்று பகர்கின்றது.

            உலக மொழிகளை எல்லாம் கற்று  ஆராயவல்ல வாய்ப்பு ஏற்படுமேல்  தமிழ் ஒன்றே  உலக முதல் மொழியாகும் பெருமைக்கும் தகுதிக்கும்  உரியது என்று நிலைநாட்ட இயலும் என்ற போராசிரியரின் கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

  தமிழ்மொழி வரலாற்றுக் காலத்தை,

    1.ஆரியர் வருகைக்கு முன்னர்த் தமிழின் நிலைமை

    2.தொல்காப்பியர் காலத்தில்  தமிழின் நிலைமை

  1. திருவள்ளுவர் காலத்தில் தமிழின் நிலைமை
  2. இளங்கோ அடிகள் காலத்தில் தமிழின் நிலைமை
  3. பவணந்தி காலத்தில் தமிழின் நிலைமை
  4. பவணந்திக்கும் பிறகு – இன்றுவரை தமிழின் நிலைமை

எனப்  பாகுபடுத்தி  ஒவ்வொரு தலைப்பையும் விரிவாக ஆராய்ந்து சான்றுகளுடன் விளக்கியிருப்பது    இன்றைய     கல்வியாளர்களுக்கு   மட்டுமல்லாது எதிர்காலச் சந்ததியினர்களுக்கும் ஒரு கருவூலமாகவே கருதப்படுகின்றது.         

       திருக்குறளின் பெருமையைப் பறைசாற்ற  முனைந்த பேராசிரியர், திருக்குறளின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதன்று.  திருக்குறள்  பொது மக்களுக்காகவே இயற்றப்பட்டது.  ஆதலின்  அக்கால  மக்கள் உரையாடிய  உயிர்த் தமிழ்தான் திருக்குறளாசிரியர் பயன்படுத்திய தமிழாகும்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்  நாவில்  நடனமாடிய  தமிழ்  இன்றும் நம் நாவில் நடமாடும் தமிழாகத்தான் இருக்கின்றது என விளக்குகின்றார்.

         ஒரு மொழியின்  சொற்களில்  ஏற்படும் மாற்றம் சூழ்நிலைக்கு ஏற்ப உருவாகும்.  சொற்களே  கருத்துகளை அறிவிக்கும் கருவிகள்.  கருத்துகள்  மாற்றம் அடையும் போது சொற்களும்  மாற்றம் அடைகின்றன.  புதிய சொற் களும் தோன்றும்.  பழைய சொற்களே புதுப் பொருளையும் தரும்   எனக் காலம் காலமாகச் சொற்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விளக்கம் தருகிறார்.  அவரது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில்  சங்கக் காலத்தில்  நாற்றம்  என்பது நறுமணத்தைக் குறித்தது.  ஆனால் இன்றோ அதற்கு எதிர்மறையான பொருளில்  பயன்பட்டு வருகிறது.  அதே போன்று  வாக்கு  என்பது சொல்லுதல் என்ற பொருளில் பயன்பட்டு வந்த  காலம் மாறி இன்று வாக்குச்சீட்டு  என்ற அளவில்  ‘ஓட்டு’  என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது.  இவ்வாறாகப் பழைய சொற்கள் புதுப் பொருளைத் தருவது என்பது மொழியில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களே!

  தொல்காப்பியர் காலத்தில் அஃறிணைப்  பன்மையினை உணர்த்த      ‘கள்’  விகுதி பயன் பட்டது. சான்று:  குதிரை – குதிரைகள்,  மரம் – மரங்கள்.  காலப் போக்கில்  இந்நிலை  மாறி உயர்திணைப் பன்மையினைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.   இதுபோன்ற   மாற்றங்களைச்சான்றுகளுடன்  எளிமையாக  விளக்கியிருக்கும்   பாங்கு ஏற்றிப் போற்றத்தக்கது.

 (தொடரும்)

 முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்