எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் நேரிடையாகவும் இணைய வழியாகவும் பங்கேற்றுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராளர்களே! தமிழன்பர்களே, தொல்காப்பியப் பற்றாளர்களே, அனைவருக்கும் வணக்கம்.

 மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியும் பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டியும் வரும் தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் செல்வநாயகி சிரீதாசு அவர்களே! துணைத் தலைவர் திரு சுகந்தன் வல்லிபுரம் அவர்களே! நன்றி நவில உள்ள  செயலாளர் திரு சண்முகராசா சின்னத்தம்பி அவர்களே! துணைச் செயலாளர் திருவாட்டி வாசுகி நகுலராசா அவர்களே! பொருளாளர் திருவாட்டி கலாதேவி அரியராசா அவர்களே! சிறப்பாக இயங்கி வரும் அனைத்துப் பொறுப்பாளர்களே! அனைவருக்கும் மனங்கனிந்த பாராட்டுகளுடன் கூடிய வணக்கங்கள்.

வரவேற்புரை யாற்றிய செயற்குழு உறுப்பினர் திரு குமரகுரு கணபதிப் பிள்ளை அவர்களே! அறிமுக வுரை ஆற்ற உள்ள முனைவர் இல.சுந்தரம் அவர்களே! முதன்மை விருந்தினர் மருத்துவர் இராமநாதன் இலம்போதரன் அவர்களே! வாழ்த்துரை வழங்க உள்ள மருத்துவர் விசய் சானகிராமன் அவர்களே! சிறப்புரை ஆற்ற உள்ள முனைவர் இளங்கோவன் அவர்களே! வருங்காலச் சிறப்பிற்கு அடையாளமாகத் தமிழ்த்திறன் பேச்சினை வழங்க உள்ள செல்வர்களே! நடனமணி வனிதா குலேந்திரன் நெறியாள்கையில் நாட்டியம் வழங்க உள்ள கலைக்கோயில் நுண்கலைக்கல்லூரிக் குழுவினரே!

நிகழ்வுகளைச் சீராக இணைக்கும் தொகுப்புரையாளரே!

சிறியோருக்கும் பெரியோருக்குமான தொல்காப்பிய விநாடி வினா பங்கேற்பாளர்களே!

தொல்காப்பிய வில்லுப்பாட்டு, அன்பின் ஐந்திணை, கவியரங்கம், திருக்குற்றாலக் குறவஞ்சி, பறையிசை, காத்தவராயன் கூத்து,  சதிராட்டம், நடனம், முதலியவற்றில் பங்கேற்கும் கலைக்குழுவினரே, தமிழ்த்திறன் போட்டிகளின் வாகையரே, பங்கேற்பாளர்களே,  அனைவருக்கும் பாராட்டுகள்.

தொல்காப்பிய ஆய்வுகளை முன்னிலைப்படுத்தும் மாதக் கருத்தரங்குகள், சிறாரை ஊக்குவிக்கும் தமிழ்த் திறன் போட்டிகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று  பல்வேறு வகைகளில் கடந்த 9 ஆண்டுகளாகக் கனடா தொல்காப்பிய மன்றம் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. தமிழின் தொன்மைச் சிறப்பையும் மொழிச் சிறப்பையும் அறிய உதவும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியத்தை வகுப்புகள் வாயிலாக இன்றைய தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கும் முனைவர் செல்வநாயகி அவர்களுக்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது. அதுபோல் ஆர்வமுடன் தொல்காப்பியத்தைப் பயில்வோருக்கும் பாராட்டுகள்.

தொல்காப்பிய மன்றத்தினர் நமக்கு அழைப்பிதழை அனுப்பவில்லை. மாறாக அழைப்பு நூலை – 60 பக்க அழைப்புப் புத்தகத்தை அனுப்பியுள்ளனர். அழைப்பிதழ் உருவாக்கவே அரிதில் முயன்றிருப்பர். இதுவே இவர்களின் உழைப்பை நமக்குத் தெள்ளிதின் விளக்குகின்றது.

ஊழையும் உப்பக்கம் காணும் வகையில் தளரா முயற்சியுடன் இம் மாநாட்டைச் சிறப்பாக நடத்தி வரும் தொல்காப்பிய மன்றத்தினருக்கும் அவர்களுக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழன்பர்கள், விளம்பரதாரர்கள், நன்கொடையாளர்கள், பிற தொண்டர்கள் அமைப்பினருக்கும் மீண்டும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது.  தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில.  ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது.  தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும்.  எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே  இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று.  தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன.  தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமன்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது.  ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் காலத்தால் முற்பட்டதேயன்றி, அதுதான் தமிழின் முதல் நூல் என்று கருதிவிடுதல் கூடாது.”

இவ்வாறு தொல்காப்பியப் பேரறிஞர் முனைவர் சி.இலக்குவனார் கூறுகிறார். தொல்காப்பியர் 287 இடங்களில் முந்துநூல் கண்ட நூலாசிரியர்களைக் குறிப்பிடுகின்றார் என்கிறார் இலக்குவனார். இதன் மூலம் தமிழ்நூல்களின் தொன்மைக்காலத்தை நன்கு புரிந்து கொள்ளலாம். பேராசிரியர் இலக்குவனார் புலவர் வகுப்பு பயிலும்பொழுதே கல்லூரி நூலகத்தில் உள்ள நூல்களையெல்லாம் படித்துள்ளார். எனவே, மாணாக்க நிலையிலேயே தொல்காப்பியம் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். அப்பொழுதே தொல்காப்பியக் கால ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். தம் கல்லூரி முதல்வர் தொல்காப்பியத்தை ஆரியத் தழுவலாகத் தவறாகக் காட்டியமையால் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதன் பெருமையை உலகறியச் செய்ய முடிவெடுத்தார். அவ்வாறே தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து முனைவர் பட்டமும் பெற்றார். தொல்காப்பியத்தை எல்லா நிலைகளிலும் மக்களிடையே பரப்பவும் செய்தார்; கல்விநிலையங்களில் எல்லாம் தொல்காப்பியர் நாள் கொண்டாடினார். தொல்காப்பியம் பாடமாக இடம் பெறவும் வகை செய்தார். இலக்குவனார் குறிப்பிட்டுள்ள தொல்காப்பிய இடைச்செருகல்களை நற்றமிழ் உலகம் ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர் காலம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டு என இலக்குவனார் ஆய்ந்த முடிவைத் திருக்கோவிலூர் ஆதினமும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் நடத்திய கால ஆராய்ச்சி மாநாடு ஏற்றுக் கொண்டது. எனவே, இன்றைய தலைமுறையினரிடையே தொல்காப்பியச் சிறப்பைப் பரப்பும் கனடா தொல்காப்பிய மன்றமும் தொல்காப்பியப் பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் பெயரில் அமைந்த இலக்குவனார் இலக்கிய மன்றமும் இணைந்து இப்போது முதலாவது உலகத் தொல்காப்பிய  மாநாட்டை நடத்துகின்றன.

உரையாசிரியர்கள் தம் காலத்திற்கேற்ற தவறான சில விளக்கங்களை அளித்திருந்தாலும் அவர்களின் பங்களிப்பு பெரிதும் போற்றற்குரியது. அதுபோல்,

ஆறுமுக நாவலர்(18.12.1822 – 5.12.1879)

சி.வை. தாமோதரம் பிள்ளை (12.09.1832 – 1.01.1901)

மழவை மகாலிங்க ஐயர்

தி. த. கனகசுந்தரம் பிள்ளை (24.08.1863 – சூன் 1922)

அரசன் சண்முகனார் (1868-1915)

அறிஞர் வ.உ. சிதம்பரனார் ,(5.09.1872 – 18.11.1936)

புன்னாலைக்கட்டுவான் சி. கணேச ஐயர்(1.04.1878 – 8.11.1958)

மு. இராகவையங்கார் (26.07.1878 – 02.02.1960)

 நாவலர் சோமசுந்தர பாரதியார் (27.07.1879 – 14.12.1959)

பா.வே. மாணிக்க நாயகர் (2.02.1871 – 25.12.1931)

முனைவர் பி.சா.சுப்பிரமணிய சாத்திரி (26.07.1890-20.05.1978)

தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (15.08.1892-02.01.1960)

மே. வீ. வேணுகோபாலன் (31.08.1896 – 4.02.1985)

தேவநேயப் பாவாணர் (7.02.1902 – 15.01.1981)

முனைவர் சி.இலக்குவனார் (17,11.1909- 03,09.1973)

அடிகளாசிரியர் (எ) குருசாமி (17.04.1910 – 08.01.2012)

பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் (14.01.1917- 13.06.1988)

கந்தசாமியார் (சனவரி 14.01.1917- 13.06.1988)

முனைவர் வ. சுப. மாணிக்கம் (17.04.1917 –25.04.1989)

முதுபெரும்புலவர் ஆ.சிவலிங்கனார்(30.11.1922 – 09.11.2014)

அறிஞர் புலியூர் கேசிகன் (16.10.1923-17.04.1992)

பேராசிரியர் ச. பாலசுந்தரம் (18.01.1924 – 1.08. 2007)

கலைஞர் மு. கருணாநிதி(3.06. 1924 – 7.08.2018)

அறிஞர் தி.வே. கோபாலையர் (22.01.1926 – 1.04.2007)

அறிஞர் கமில்சுவலபில் (Kamil Zvelebil: 17-11-1927 -17.01.2009)

புலவர்மணி இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021)

 முனைவர் தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் (12.08.1928 – 29.12.2015)

முனைவர் ச. அகத்தியலிங்கம் (19.08.1929 – 4.08.2008) முனைவர் ச.வே. சுப்பிரமணியம் (31.12.1929 – 12.01.2017)

பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி(14.04.1930 – 24.02.2014)

முனைவர் க. ப. அறவாணன் (9.08.1941 – 23.12.2018)

சீனி. நைனா முகமது(மலேசியா) (11.09.1947-7.08.2014)

எனப் பல அறிஞர்கள் பதிப்பிப்பு, ஆராய்ச்சி, உரையாக்கம், வகுப்புரை எனப் பல வகைகளில் தொல்காப்பியப் பரவலுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

அறிஞர்கள் சாமுவேல் பிள்ளை , இராசகோபால பிள்ளை, சுப்பராய செட்டியார், கா. நமச்சிவாய முதலியார் ,இரா.வேங்கடாசலம் பிள்ளை, ம.ஆ.நாகமணி, தி.சு. பாலசுந்தரம் பிள்ளை, ஆ. பூவராகம் பிள்ளை, இராம. கோவிந்தசாமி,,, தண்டபாணி தேசிகர் ,ஆபிரகாம் அருளப்பன், வடலூரனார், கு.மா.திருநாவுக்கரசு, வையாபரி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், இரா. சீனிவாசன், மு. அருணாசலம் பிள்ளை, தாயம்மாள் அறவாணன், கு. பகவதி வ.வேணுகோபாலன் ச. திருஞானசம்பந்தம் ,பேராசிரியர் கு. வெ. பாலசுப்பிரமணியன், பேராசிரியர் ப. மருதநாயகம் எனப் பல அறிஞர்கள் தொல்காப்பிய உரைகள் பதிப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளிவலி ஈபட்டனர்,ாழும்அறிஞர்கள் ஈடுபட்டும் வருகின்றனர்.

அண்மைக்காலங்களில் முனைவர் செவிலியருடு (Dr Jean-Luc Chevillard)(1956), முனைவர் ஆல்பருட்டு,முனைவர் நிருமல் செல்வமணி முனைவர் வ. முருகன் முதலான சிலர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.  அறிஞர் இளையபெருமாள்,  எசு.வி.சுப்பிரமணிய பிள்ளை இணைந்து தொல்காப்பியத்தை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளனர்.

அறிஞர்கள் பாலசுப்பிரமணியமும் நாச்சிமுத்துவும் தொல்காப்பியத்தை இந்தியில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

செம்மொழி காத்த செம்மல் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் ஆவணி 25, 1942 / செப்.10, 1911 அன்று குன்னூரில் ஒரு நூலகம் அமைத்தவர். மூவாத் தமிழின் தொல்லிலக்கண நூலான தொல்காப்பியத்தை இயற்றிய பேராசான் தொல்காப்பியருக்கு அங்குச் சிலை எழுப்பியுள்ளார். தொல்காப்பியரை என்றென்றும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக முதன்முதலில் அவருக்குச் சிலை எழுப்பிய பெருமை செம்மொழிப்புரவலர் மா.கோபாலசாமி இரகுநாதரையே சாரும்.

தொல்காப்பியரைப் போற்றும் நாம் இத்தகைய அறிஞர்களையும் என்றும் நினைவில் கொள்ள உரிய பணி ஆற்ற வேண்டும்.

சென்னை கடற்கரைச்சாலையில்  சென்னைப் பல்கலைக்கழக வளாகத்திலும்  மதுரையில் நீதி மன்றம்  அருகிலும் குமரி மாவட்டம் காப்பி(ய)க்காட்டிலும் தொல்காப்பியர் சிலைகள் உள்ளன.

தமிழ் நலனுக்காகப் பணியாற்றும் தமிழ்நாடு அரசு ஆற்ற வேண்டிய பணி ஒன்று உள்ளது. தொல்காப்பியரைப் போற்றுவதற்கு அரசிடம் திட்டம் ஏற்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தொல்காப்பியர் புகழரங்கம் முதலான ஐந்து புகழரங்கங்கள் நிறுவுவதாகச் சட்ட மன்றத்தில் அப்போதைய கல்வி அமைச்சர் தம்பிதுரை கலைபண்பாட்டுத் துறை,  கொள்கை விளக்கக்குறிப்பு 2001-2002 கோரிக்கை எண் 51இல்  அறிவித்தார்.  அதற்கான இடம் தேடுதல் தொடர்பான தொடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் எதுவும் அமைக்கப்படவில்லை. எனவே, வள்ளுவர் கோட்டம் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் திருமகனான முதல்வர் தாலின் தொல்காப்பியப் புகழரங்கம் அமைக்க வேண்டும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இந்திய மொழிகள் பத்திலும் உலக மொழிகள் பதினைந்திலும் தொல்காப்பியத்தை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்து வருவது பாராட்டிற்குரியது. அதன் இயக்குநர் முனைவர் சந்திரசேகரனுக்கும் ஒன்றிய அரசிற்கும் பாராட்டுகள்.

கட்டுரைகளைக் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கூர்ந்து பார்த்த நடுவர்களைப் பாராட்டுகிறேன். தொல்காப்பியம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருவதற்கான காரணங்கள், தொல்காப்பியமும் தமிழ் நூற் காவலர்களும்இ இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி, தொடரும் தொல்காப்பிய மரபு, தொல்காப்பியமும் பிராகிருதமும் ஒரு பார்வை, தொல்காப்பிய உரையாசிரியர்கள், மெய்ப்பாட்டியல், கணிப் பொறியியலில் தமிழ் மொழிச் சொற்களின் சிதைவைத் தடுப்பதற்குத் தொல்காப்பியத்தின் பங்களிப்பு, தொல்காப்பியக் கோட்பாடுகள், தொல்காப்பியமும் பாணினியமும், தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள், மரபு வழி மாண்புகள், புலியூர்க்கேசிகர் உரைவளம் என வெவ்வேறு கோணங்களில் ஆங்கிலக் கட்டுயாளர்கள் மூவர் உட்பட 54 கட்டுரையாளர்கள் தொல்காப்பியம் இன்றைக்கு மட்டுமல்லாமல் இனி என்றைக்கும் நிலைத்து நிற்கும் சிறப்பினை எடுத்துரைத்துள்ளார்கள். தொல்காப்பிய மன்றத்தலைவர் முனைவர் செல்வநாயகி அவர்கள், தொல்காப்பியப் ‘பொருளதிகாரமும் சங்க இலக்கியங்களும்  காட்டும் பெண்களின் சமூக நிலை’ என்று விரிவாக 635 பக்க அளவில் ஒரு நூலை வெளியி்டுள்ளார். அவரின் கட்டுரையும் மாநாட்டில் இடம் பெறுகிறது.

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் படிக்காமல் சாகக் கூடாது என்பார் தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார். அந்த வகையில் ஒவ்வொருவரும் தொல்காப்பியத்தைக் கற்கக் கனடா தொல்காப்பிய மன்றம் அதன் தலைவர் முனைவர் செல்வநாயகி மூலம் கடந்த 9 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறது.

இம்மாநாட்டினை ஒட்டித் தொல்காப்பியச் சுடரொளி விருதுகளும்  இலக்குவனார் விருதுகளும் வழங்குவதாக அறிவித்திருந்தோம். இவற்றை மதுரையில் 12.10.24 அன்று நடைபெறும் மாநாட்டின் தொடர் நிகழ்வில் வழங்குவோம் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். தொல்காப்பியத்தைப் பிற  மொழிகளில் மொழி பெயர்ப்பின் மூலமோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமோ எடுத்தியம்பியவர்களுக்கும் தொல்காப்பியத்தை முனைவர் செல்வநாயகிபோல் வகுப்புகள் மூலமோ ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலமோ வேறு வழியிலோ படைத்துத் தொல்காப்பியத் புகழ் பரப்புவோருக்கும் விருதுகள் வழங்கப்பெறுவதால், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இனியும் மூன்று நாள்களில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொல்காப்பிய அன்பர்கள் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

யெழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே

என்றார் தொல்காப்பியர்.

வடசொல் என்பது பாலி, பிராகிருதம், பின் வந்த சமற்கிருதம் ஆகிய மொழிச்சொற்களே. உரையாசிரியர்கள் விளக்கியவாறு தொல்காப்பியர் குறிப்பது பெயர்ச்சொற்களையே. பிற சொற்கள் தமிழாகத்தான் இருக்க வேண்டும்.

பேராசிரியர் இலக்குவனார் இக்கால மொழிப்பயன்பாடுகளுக்கேற்ப

அயற்சொற் கிளவி அயலெழுத் தொரீஇ

எழுத்தொடுபுணர்ந்த சொல்லாகும்மே

என அயலெழுத்துகளை நீக்கி எழுத அறிவுறுத்துகிறார். எனவே, தொல்காப்பிய அன்பர்கள் பிற மொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளையும் நீக்கித் தமிழிலேயே பேசவும் எழுதவும் வேண்டும் என நாம் உறுதியேற்போம்!

தமிழ் மொழி, கலை, பண்பாட்டு விழுமியங்களைப் புலம் பெயர் நாடுகளில் பல்லின, பல்பண்பாட்டு மக்களும் அறியும் வகையில் செயலாற்றியும் வரும் தொல்காப்பிய மன்றம் அதன் ஒரு பகுதியாகக் கருத்தரங்கங்கள் மாத நிகழ்ச்சிகள் போட்டிகள் பயிற்சிகள் எனப் பல வகையில் செயற்பட்டு வருகிறது. அவ்வழியில் இன்றைக்குத் தொடங்கும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடும் நடைபெறுகிறது. இன்று தொடங்கும் உலகத் தொல்காப்பிய மாநாடு உலகமெங்கும் மாநாட்டு நிகழ்வுகளை நடத்தவும் பணிகளைப் பரப்பவும் வாழ்த்தி விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம். தமிழே விழி! தமிழா விழி!