குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள் – நூலாய்வு: 1. இலக்குவனார் திருவள்ளுவன்

குடந்தை வை.மு.கும்பலிங்கன் எழுதிய சொல்லாய்வுகள்
நூலாய்வு: 1.
சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன், குகன் எனச் சுருக்கப் பெயரையும் இறைவன் என்ற புனைபெயரையும் உடையவர். 13 ஆண்டுகள் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகள் தலைமையாசிரியராகவும் பணியாற்றிக் கல்விப்பணி யாற்றியவர். தமிழ்நெறிக் காவலர், சேவைச் செம்மல், கண்ணியச் செம்மல், சொல்லாய்வுச் செம்மல், கொள்கைவேள், புலவர்மாமணி, கவிமாமணி, எழுத்துச் சிற்பி, பகுத்தறிவுப் பைந்தமிழ்ச் சுடர், செஞ்சொற் செல்வர, இலக்கணக் குரிசில் முதலிய பட்டங்கள் இவரின் பணிச்சிறப்பிற்காக வழங்கப்பட்டவை.
இறையன்பராக இருந்து நூறாயிரம் ‘சிவாயநம’ எழுதியவர் பெரியாரின் பாதையில் திரும்பிச் சென்றார். பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டதுடன் ‘பெரியார் வாழ்க(தமிழ் வாழ்க, இந்தி ஒழிக)’ என்று தம் குறிப்பேட்டில் எழுதினார்.
இவரின் முதல் கவிதையே “பெரியார் வாழ்க” என்பதுதான். இஃது அப்போது தி.மு.க. தீவிர ஏடாக இருந்த நாத்திகம் இதழில் வந்தது. திராவிட இயக்க இதழான விடுதலை, பகுத்தறிவு, தமிழரசு, பெரியாரியம், மாணவமணி, தமிழ் சூரன், வெற்றி முரசு, முதலியவற்றிலும் எழுதி வந்தார். மேலும், தமிழிய-திராவிடப் பொதுநிலை இதழ்களான தமிழ் இலெமூரியா, அன்புப்பாலம், எழுகதிர், மீண்டும் கவிக்கொண்டல், கண்ணியம், கனிமொழி, குயில், ஏழைதாசன், தாழம்பூ, சமுதாயமுரசு, கிறித்துவர் குரல், மாந்தன், வாழ்வியல் முன்னேற்றம், ஆத்திமாலை, கதம்பம், தினமணி முதலியவற்றிலும் தொடர்ந்து எழுதியுள்ளார். இலங்கை இதழ்களான வீரகேசரி, சுதந்திரன், தீப்பொறி ஆகியவற்றிலும் இவரின் எழுத்தோவியங்கள் வந்துள்ளன. இப்போதும் இதழ்களில் எழுதி வருகிறார்.
இந்நூலுக்கான அணிந்துரையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“ஆசிரியர் தோழர் வை.மு.கும்பலிங்கன் அவர்கள், பகுத்தறிவாளர், விடுதலை உட்பட பல ஏடுகளிலும் கட்டுரைகள் எழுதி வரக்கூடியவர். அவரிடம் மொழி ஆய்வும் மொய்த்துள்ளது என்பதை இந்த நூலின் வழி அறிய முடிகிறது. … தோழர் வை.மு.கும்பலிங்கனின் இந்த நூல் முதலாவதாக ஏடுகள் இதழ்கள் நடத்துவதற்குப் பெரும் துணைவன் என்றே சொல்ல வேண்டும்.” என்கிறார்.
மதிப்புரையில் தமிழ்த்தேசியத் தலைவர் பழ.நெடுமாறன்,
“தமிழைப் பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும் என்பதை நன்கு விளக்கும் இந்நூலை மாணவர்கள் மட்டுமல்ல எழுத்தாளர்களும் இதழாசிரியர்களும் படித்துப் புரிந்து கொண்டால், எழுத்தாக்கங்களும் இதழ்களும் பிழையற்ற தமிழில் வெளிவரும்.” என்கிறார்.
உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அணிந்துரையில்,
“சொல்லின் மூலமான வேரின் வழி நின்றல்ல – சொல்லில் மறைந்துள்ள பொருளின் துணை கொண்டு தன் சொல்லாய்வினைக் கும்பலிங்கனார் நிகழ்த்துகிறார்….. இன்றமிழ்ச்சொல் காணல் மட்டுமின்றி – சொற்புணர்ச்சிப் பிழை களைதல், நேரிய சொற்பயன்பாடு கூறல் ஆகியனவும் இடம் பெற்றுள்ளமை இந்நூலின் சிறப்பாகும்.” என்கிறார்.
ச.மெ.மீனாட்சிசுந்தரம், பதிப்புரையில்,
“தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், ஒரு புலவருக்கும் பேராசிரியருக்கும் மேம்பட்ட அளவில் சொல்லாய்வுச் செய்திகளைத் தொடர்ந்து பல இதழ்களில் எழுதி வருகிறார் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்; செயற்பாடும் ஆகும். நாம் நம் அன்றாடவாழ்வில் பல சொற்களைப் பேசியும் எழுதியும் பயன்படுத்தி வருகிறோம். நாம் அவற்றைப் பொருள் புரியாமலும் காரணம் தெரியாமலும் பேசி வருகிறோம் என்பதுதான் பேருண்மை. எனினும் நூலாசிரியர் நாம் அன்றாடம் பேசிப் பயன்படுத்தி வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் காரண காரியத்தோடு தரும் விளக்கம் அருமையாகவும் எளிமையாகவும் இருக்கிறது.இதன் பொருள் அறிய அறிஞர் துணை தேவையில்லை. அவர் விளக்கும் பாங்கும் எழுதிச் சொல்லும்,எழுதிச் செல்லும் பாங்கும் மிக மிக எளிமையாக உள்ளது.” என்கிறார்.
மீண்டும் கவிக்கொண்டல், சமுதாய முரசு, விடுதலை-ஞாயிறு மலர், மூவேந்தர் முரசு, குயில், தாழம்பூ, வண்ணப்பூங்கா, ஆத்திமாலை, மார்த்தாண்டம் மாலை, எழுகதிர், கிறித்தவர் குரல், கனிமொழி, ஏழைதாசன், தமிழ் இலெமூரியா, தெய்வத்தமிழ்த்தேன், மாந்தன், வெற்றி முரசு முதலிய பல இதழ்களில் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்







Leave a Reply