(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம்

4/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம் 5/ 69

பேரா.ப.ம.நா.வின் இரு நூல்கள் குறித்து இங்கே காண்கிறோம்.

(பின்னைக் குடியேற்றச் சூழலில் இந்திய, கனடா நாட்டு இலக்கியங்கள்) – Decolonisation and After : Studies in Indian and Canadian Writings(Creative Books, New Delhi,1999)

இந்நூலில் பதினாறு கட்டுரைகளை அளித்துள்ளார். இரவீந்திரநாத்து தாகூரின் படைப்பிலக்கியங்கள், கனடா நாட்டின் இயூதக் கவிஞரான இருவிங்குலேட்டன்(Irving Layton) இயற்றியுள்ள கவிதைகள், கனடப் பெண்ணிய எழுத்தாளர்களின் படைப்புகள், ஆலிசு மன்றோ(Alice Munro) எழுதிய “ நீங்கள் யார் என்று நினைக்கிறீர்கள்?” (Who do you think you are?)என்னும் புதினம்,நார்த்துராப்பு ஃபிரை (Northrop Frye), இலெசுலி ஃ பீடுலர்(Leslie Fiedler) ஆகிய தொன்மத் திறனாய்வாளர்கள் இருவரின் நூல்கள், புதுவை அரவிந்தர் தவமனையில்(ஆசிரமத்தில்) வாழ்ந்த ஆர்.டி.சேத்துனா(R.D.Sethna) என்பாரின் ஆய்வுக் கட்டுரைகள், இந்திய எழுத்தாளர்கள் எழுதிய ஆங்கில உரைநடை, உமா பரமேசுவரன் என்னும் கனடா வாழ் இந்தியரின் திறனாய்வு நூல்கள், இன்றைய இந்திய ஆங்கிலப் புதினங்கள்,டி.எசு.எலியட்டும் அரவிந்தரும் இறைவனின் மானுடப்பிறவி குறித்துச் சொல்லிய கருத்துகள், இசெக்கீல்(Ezekiel), இலேட்டன் ஆகியோர் மானுடம்பற்றி எழுதியுள்ள பாடல்கள்,

 மார்கரெட்டு இலாரன்சின்(Margaret Laurence) ஆப்பிரிக்கரின் வாழ்வுபற்றிய சிறுகதை ஆகியனவற்றை மீள்பார்வைக்கு உட்படுத்தியுள்ளார்.

 ‘திறனாய்வாளர் தெ.பொ.மீ.’ (1999):

பேரா.ப.மருதநாயகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் விரிவே திறனாய்வாளர் தெ.பொ.மீ. என்னும் இந்நூல். ஐந்து இயல்களாகப் பிரிக்கப்பட்டது. தெ.பொ.மீ.யின் திறனாய்வுப் பங்களிப்பை நிறைகுறைகளுடன் விரிவாக ஆராய்வது.

செவ்வியலும் புனைவியலும், கலையும் வாழ்வும், கலையும் அறிவியலும், கலையும் தொன்மமும், கலையும் அழகுணர்வும், கவிதையும் நம்பிக்கையும், கவிதையும் சமயமும், கவிதையும் நீதி கூறலும் போன்றவைகுறித்த அவரின் சிந்தனைகளைத் தொகுத்துத் தருகிறது(இரண்டாம் இயல்).

திருவள்ளுவர் தத்துவம்பற்றியும் முல்லைப்பாட்டுபற்றியும் தமிழ் இலக்கிய வரலாறுபற்றியும் ஆங்கிலத்தில் எழுதி வெளிநாட்டார்க்கு அவற்றின் சிறப்பை வெளிப்படுத்தினார் என இவரைப் போற்றுகிறார்.

திராவிடப் பண்பாடென்றும் ஆரியப் பண்பாடென்றும் பிரிக்க இயலா இந்தியப்பண்பாடே தமிழ் நூல்களிலும் சமற்கிருத நூல்களிலும் காணக்கிடப்பதாக இவர் கூற்றுக்கு உள்ள எதிர்ப்பையும் இந்நூலில் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.

  எதையும் ஒப்பிட்டு ஆய்வு செய்யும் அவரது அணுகுமுறையையும், ஆற்றலையும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் நடுவுநிலையுடன் தொ.பொ.மீ. இலக்கியங்களில் இன்பச்சுவை கண்டாரே தவிர வேறுபாடுகளைக் காணவில்லை என்பதையும் விளக்கியுள்ளார்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் . மருதநாயகம் 6/ 69)