(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 28/ 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

29/ 69

 ‘திறனாய்வாளராக உரையாசிரியர்கள்’(2020):

இலக்கிய இலக்கணப் புலவர்கள் மட்டுமல்லர். இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், சேனாவரையர் முதலானவர்களும் தமிழ்மொழி, இலக்கண, இலக்கிய, பண்பாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கவர்கள் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார்.

            “அன்னார் இலக்கியக் கல்வி மட்டுமின்றிப் பிற பலதுறையறிவும் பெற்று, உலகச்செவ்விலக்கிய அரங்கில் இடம்பெறும் தகுதி உடைய பழந்தமிழ் நூல்களையெல்லாம் ஆழ்ந்து பயின்று, அவற்றை அகவயமுறையில் (intrinsic approach) அணுகி, மாணாக்கர்க்கும் ஆய்வறிஞர்களுக்கும் பயன்படும் முறையில் நுட்பமும் செறிவும் கொண்ட விளக்கம் அளித்த அரிய திறனாய்வாளர் ஆவார். … … … மேலைத்திறனாய்வுத் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்ப்போமானால், நம்முடைய உரையாசிரியர்கள் செய்துள்ள திறனாய்வுப் பங்களிப்பின் உயர்வை உணரமுடியும். இதனையே இந்நூல் செய்ய முயல்கிறது.”  என பேரா.மருதநாயகமே குறிப்பிடுகிறார்.

இந்நூலில் பின் வரும் தலைப்புகளில் ஆய்வுரைகள் அளித்துள்ளார்.

  1. இடைக்கால உரையாசிரியர்கள், 2.) உரையியல் : மேலைமரபு(Hermeneutics), 3.) திறனாய்வின் வளர்புள்ளிகள், 4.) உரையியல் : தமிழ் மரபு, 5.) அகவய அணுகுமுறை, 6.) இளம்பூரணர் : தொல்காப்பியம், 7.) பெருந்தேவனார் : வீர சோழியம்,8.) அடியார்க்கு நல்லார் : சிலப்பதிகாரம், 9.) பரிமேலழகர் : வள்ளுவர் நெறி, 10.) பரிமேலழகர் : திருக்குறள், 11.) பேராசிரியர் : பொருளதிகாரம், 12.) பேராசிரியர் : சங்கப்பாடல்கள், 13.) நச்சினார்க்கினியர்: தொல்காப்பியம், 14.) நச்சினார்க்கினியர் : குறிஞ்சிப்பாட்டு, 15.) நச்சினார்க்கினியர் : முல்லைப்பாட்டு, 16.) நச்சினார்க்கினியர் :சீவகசிந்தாமணி, 17.) சேனாவரையர் : சொல்லதிகாரம்.

முதல் ஆய்வுரையில் தமிழிலுள்ள உரைகளை ஒரு தனி இலக்கிய வகையாகவே கருதலாம் எனப்பிரான்சுவா குரோ கூறியுள்ளதைத் தெரிவிக்கிறார். தமிழில் இலக்கிய இலக்கண நூல்களுக்குஉரையெழுதும் மரபு தொன்மையானது:  கி.பி.எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும் நீடித்த வரலாற்றுச் சிறப்புடையது எனக்கூறும் பேரா.ப.ம.நா., இக்காலத்தில் எழுந்த உரைநூல்கள், உரையாசிரியர்கள் பட்டியலை அறிஞர் மு.அருணாசலம் தமிழ் இலக்கிய வரலாற்று நூலில் தந்துள்ளவாறு அளிக்கிறார்.

வில் எலம் தில்தி(Wilhelm Dilthey), ஐடெக்கர்(Heidegger), காடமர்(Gadamer). எமிலியோ பெட்டி (Emilio Betti), செனோபென்(Xenophane), ஃபிரீடெரிக்கு (Friedrich) முதலிய மேலை அறிஞர்களின் உரையியல் குறித்த கருத்துகைள இரண்டாம் ஆய்வுரையில் தெரிவிக்கிறார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது பகுத்தறிவு ஏற்காத தொன்மக் கதைப் பாத்திரங்களுக்குக் குறியீட்டுப் பொருள் தருவதாகும்.

திறனாய்வின் வளர்புள்ளிகள் என்னும் மூன்றாவது ஆய்வுரையில் காலந்தோறும் திறனாய்வு முறைகள் மாறியும் வளர்ந்தும் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். திறனாய்வாளன் மிகுந்த உழைப்பை மேற்கொள்ளக் கூடியவனாகவும் உண்மையைக் கடைப் பிடிப்பவனாகவும் காய்தல் உவத்தல் அகற்றி நீதி வழிப்படும் செந்நெறியாளனாகவும் அறிவு மேம்பட்டவனாகவும் விளக்கம் கூறல், மதிப்பிடல் ஆகிய இரண்டு பணிகைளச் செய்பவனாகவும் இருக்க வேண்டும் என்னும் அறிஞர் இயான்சன்(Johnson)  கருத்தையும் பிற அறிஞர் கருத்துகளையும் அளிக்கிறார். இதுபோல் அறிஞர்கள் தரும் உரையாசிரியர்களுக்கான இலக்கணங்களுக்குத் தமிழ் உரையாசிரியர்கள் முற்றிலும் பொருந்தி வருவது கண்கூடு. சூசன் சோண்தாகு(Susan Sontag) முதலான அறிஞர்கள் சிலர், திறனாய்வு தேவையில்லை எனக் குரல் எழுப்பியுள்ளனர். இவற்றைக் குறிப்பிடும் பேரா.ப.ம.நா., இத்தகைய வாதங்கள் தேவையற்றன என விளக்கியுள்ளார்.

உரையியல் குறித்த தமிழ் மரபை நான்காம் ஆய்வுரை சிறப்பாக விளக்குகிறது. பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரையும் மரபு தமிழகத்தில் மிகத் தொன்மையானதாகும். உரைக்கும் பழந்தமிழ் இலக்கியங்களுக்குத் தரும் மதிப்பை அளித்து அஃது எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பதைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே சிந்தித்துள்ளனர் என்பது வியப்புக்குரியதாகும் எனத் தொடக்கத்திலேயே பேரா.ப.ம.நா. குறித்துவிடுகிறார். தொல்காப்பிய மரபியலில் உரை பற்றிய நூற்பாக்களை அவற்றின் பொருள்விளக்கத்துடன் இவ்வாய்வுரை விளக்குகிறது. தொல்காப்பியர், பாடலனார்,நன்னூலார் குறிப்பிடும் உத்திகளையும் வேறுசில உத்திகளையும் தமிழ்உரைகளில் காண்பதையும் எடுத்துரைக்கிறார்.

மேலைத்திறனாய்வுமுறையைப் பின்பற்றித் தமிழ் இலக்கியம் குறித்து மதிப்பிட்டவர்கள்,பழந்தமிழ் இலக்கியங்களிலும் உரைகளிலும் ஆழ்ந்த பயிற்சி பெறாதவர்கள். எனவே, மேலைத் திறனாய்வைப்போன்ற முயற்சி தமிழில் இல்லை என்ற தவறான கருத்திற்கு வந்து அதனையே பரப்பியும் விட்டனர். இதைத் தமிழறிஞர்களும் உண்மையாக இருக்கும் என நம்பி விட்டனர். இதற்கு அடுத்த நிலையில் கைலாசபதி, சிவத்தம்பி, தொ.மு.சி.இரகுநாதன் போன்றவர்களின் தாக்கத்தால் மன்பதை அணுகுமுறை அல்லது மார்க்குசிய அணுகுமுறை மட்டுமே திறனாய்வு என்ற தவறான வாதமும் இடம் பெற்றுவிட்டது என்கிறார்.

தொல்காப்பிய சங்க இலக்கியக் கோட்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு, சான்றோர் செய்த செய்யுட்களுக்கும் திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற அறநூலகளுக்கும் காப்பியங்களுக்கும் உரை எழுதிய நம் உரையாசிரியர்கள் இன்றைய மேலை அணுகுமுறைகள் குறிப்பிடும் உத்திகள் சிலவற்றை அன்றே பயன்படுத்தி யுள்ளனர் என்னும் விந்தைச் செய்தியை நமக்கு எடுத்துரைக்கிறார்.

சுவெலபில், சுல்மன், துபையான்சுகி போன்ற மேலைத் திறனாய்வாளர்கள், தமிழ்ச்சான்றோர் படைப்புகளை முருகியல் அணுகுமுறையில் பார்க்காமல் புறவய அணுகுமுறையில் பார்ப்பதாகப் பேரா.ப.ம.நா. கூறுகிறார். அவர்கள், சங்க இலக்கியங்களைப் பழம் உரைகள்வழியே அகவய அணுகுமுறையில் நோக்கினால் சங்க இலக்கியங்களின் புதிய படிநிலைகளை அடையாளம் காண்பதோடு உரையாசிரியர்களின் திறனாய்வுத் திறன்களையும் அறிந்து கொள்ள இயலும் என்கிறார்.

   ஆறாவதாக, இளம்பூரணரின் தொல்காப்பிய உரை குறித்து ஆய்வுரை வழங்கியுள்ளார். தொல்காப்பியத்திற்கு முழுமையான முதல் உரை வழங்கியவர் என்ற வகையில் இளம்பூரணரைப் பெரிதும் போற்றுகிறார். சிவஞான முனிவர். இளம்பூரணர் வடநூற் பயிற்சியற்றவர் என்னும் தவறான எண்ணத்தை விதைக்கிறார் என்கிறார். இளம்பூரணர் கையாளும் மேற்கோள்கள் அடிப்படையில் அவர் வடநூற்பயிற்சி மிக்கவர் என்றும் தமது வடநூல் அறிவைத் தேவையின்றிக் காட்டிக் கொள்ளவில்லை என்றும் தமிழ் மரபையே பெரிதும் போற்றினார் என்றும் பேரா.ப.ம.நா. விளக்கியுள்ளார்.

பிற உரையாசிரியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நடை எளியது, இனியது, சுருங்கச்சொல்லி விளங்க வைப்பது, பிறர் உரைகளையும் ஏற்கத்தக்கதாகக் கூறுதல், முன்னையோர் உரைகளை வன்மையாகக் கண்டிக்காமை முதலியவற்றை இளம்பூரணரின் அரும்பண்புகளாகக் குறிப்பிட்டுள்ளார்.

“நும் நாடு எது என்றால் தமிழ்நாடு என்றல்” என்பதுபோன்ற எடுத்துக்காட்டுகளாலும், தமிழ் மரபிற்கேற்பவே உரை எழுதியமையாலும் இளம்பூரண அடிகளார் தமிழ் மொழி, இனம், இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தனிப்பற்றுடையவர்; பண்டைய இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை நன்கு ஆழ்ந்து கற்றவர் என நாம் அவர் உரை மூலம் உணரலாம்; இளம்பூரணர் உரையானது பின்வந்த உரையாசிரியர்களுக் கெல்லாம் முன்மாதிரியாக அமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; மூலநூலை ஐயந்திரிபற விளக்கம் செய்தலே திறனாய்வாளனின் தலையாய கடமை என்ற எலியட்டின்(T.S.Eliot) கூற்றினை நிறைவு செய்வதன் மூலம் தொல்காப்பியத்தின் முதல் திறனாய்வு நூலாகவும் போற்றற்குரியது.

ஏழாவதாக, வீரசோழியம், அதற்கான பெருந்தேவனார் உரைபற்றியது. வீரசோழியப் பாயிரத்தின் மூன்றாவது பாடல் நூல் நோக்கத்தைக் கூறுகிறது. அதில் பின்பற்றப்போவதாகக் கூறுவது தொல்காப்பிய மரபேயன்றி வடமொழிப் பாணினீய மரபன்று; ‘வடநூல் மரபும் புகன்று கொண்டே’ என்று சொல்லும்போது, தமிழிலக்கணத்தை விளக்கும்போது ஆங்காங்கே வடமொழி இலக்கண மரபையும் சுட்டிக்காட்டுவதாகக்குறிப்பிடுகிறாரே தவிர, தமிழ் இலக்கணம் வடமொழி இலக்கணத்தைத் தழுவியது என்றோ தமிழ் இலக்கணக் கலைச்சொற்களைவிட வடமொழி இலக்கணக் கலைச்சொற்கள் சிறந்தன வென்றோ சொல்லவில்லை. நூலெங்கிலும் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை; என வீரசோழியத்தின் அடிப்படைநோக்கம்தொல்காப்பிய மரபுதான் என்பதைப் பேரா.ப.ம.நா. விளக்குகிறார்.

உரையாசிரியரும் நூற்பாக்கள் கூறும் இலக்கணதிற்குச் சான்றாகப் பழந்தமிழ்ப்பாடல்களைத்தான் தருகிறார். அவற்றையும் உதாரணக் கவிதைகள் என்றோ உதாரணம் என்றோ சொல்லாது வரலாறு என்றே சொல்கிறார்.எனினும் உரையாசிரியர் தமிழ்மொழியில் எவ்வாறு தாதுவைப்படைத்துக்கொள்வது என விளக்கும்’மன்னிய சீர் வடநூலின்’ எனத் தொடங்கும் நூற்பா விளக்கத்தில், ‘தமிழ்ச்சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின்’ அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும் என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவ்வாறு மூலநூலில் இல்லை என்பதைப் பேரா.ப.ம.நா. குறிப்பிடுகிறார்.மேலும் சொல் என்பது சொல்லிலக்கணத்தைக் குறிப்பதாக அறிஞர் சி.வை.தாமோதரம்(பிள்ளை) கூறுவதையும் தெரிவிக்கிறார்.

உரையாசிரியர் தாதுப்படலத்தை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறு எழுதியிருக்கலாம் ஆனால், இதைத் தவறாகப் புரிந்து கொண்ட மேலைக்கல்வியாளரான ஆன் மோனியசு(Anne E. Monius), எல்லாத் தமிழ்ச்சொற்களுக்கும் தாய் சமற்கிருதம் (Sanskrit is the mother of all Tamil words) என்னும் தலைப்பிலேயே கட்டுரை அளித்துள்ளார். பாணினீயம் தவறாகப் பெரிதும் கொண்டாடப்பட்ட காலத்தில் இவ்வெண்ணம் எழுந்திருக்கலாம். ஆனால், பேச்சுவழக்கொழிந்த வடமொழிக்கு இலக்கணம் செய்த பாணினி  வேர்ச்சொல்லாய்வு என்ற பெயரில் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களுக்கு முற்றும் கற்பனையான, முற்றிலும் முழுப்பொய்யான வேர்களைக் கூறியுள்ளார் என்றும் அவ்வாறான சொற்கள் வடமொழி இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை யென்றும் வடமொழி விற்பன்னர்களே கூறியுள்ளதையும் எடுத்துரைக்கிறார். ஆதலின் உரையாசிரியர் தவறான கருத்தையே சொல்லியுள்ளார் எனலாம்.

இருப்பினும் ஆன்மோனியசு ‘வீர சோழியம்’ என்னும் மற்றொரு கட்டுரையில் வீரசோழியம் தொல்காப்பியம் காட்டும் இலக்கிய மரபிற்குக் கடன்பட்டது என்பதைத் தெளிவுபட விளக்குகிறார்.”எல்லா உலகும் மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன் தன் நாவுஇயல் செந்தமிழ்” என்பதன் மூலம் இலக்கணத்திலும் கவிதையியலிலும் வடநூல்மரபைத் தழுவியிருப்பினும் வீரசோழியம் தமிழையே தலைசிறந்த மொழியாகக் கருதுகிறது என அம்மேலை அறிஞர் குறிப்பிடுகிறார்.

வீரசோழியம் வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ்மொழி இலக்கணம் கற்பிப்பதற்காக எழுதப்பெற்ற நூல் என்று சிலரால் சொல்லப்படுகிறது. இதனைப் பேரா.ப.ம.நா.பின்வரும் வகையில் மறுக்கிறார்.வடமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட யாரும் எக்காலத்தும் எவ்விடத்தும் இருந்ததில்லை என்பது மேலை மொழியியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள வரலாற்று உண்மையாகும். ஓங்கு அடிகளார்(Rev. Walter J. Ong) என்பார் தமது ‘உலகின் இடைமுகங்கள்’(Interfaces of the World) என்னும் ஆய்வு நூலில் பழம் கிரேக்கம், இலத்தீன், பழம் சீனம், சமற்கிருதம் போன்ற செம்மொழிகளெல்லாம் எங்கும் என்றும் யாருக்கும் தாய்மொழிகளாக இருந்தவை அல்லவென்றும் பள்ளிகளில் ஆண்களுக்கு ஆண் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட மொழிகளாகவே இருந்தவை யென்றும் அவை என்றும் பேச்சுவழக்கில் இருந்தவை அல்லவென்றும் சில துறைகளில் நூல்கள் எழுதப்பயன்பட்டவை என்றும் கூறியுள்ளதை எடுத்தாள்கிறார்.

இவ்வாய்வு மூலம், பொதுவாக வீரசோழியம் குறித்துத் தமிழன்பர்களிடையே இருந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் இதன் அடிப்படை முகத்தை நமக்குப் பேரா.ப.ம.நா. படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 30/ 69  )