முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்!
- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன
யாழ்ப்பாணம் – செப்.03, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார்.
“மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன. எஞ்சிய 29 வீதமான நிலங்களே அரச மற்றும் தனியார் நிலங்களாகக் காணப்படுகின்றன. முல்லைத்தீவில் அரச காணியில் 3984.2 காணி படையினரிடம் 309 காணி கடற்படையினர் வசமும் உள்ளதோடு 1.5 காணி நிலம் விமானப்படை வசம் உள்ளது. அதேபோன்று தனியார் நிலத்தில் 155 காணி நிலம் படையினரிடமும் 408 காணி கடற்படையினர் வசமுள்ளதாகவும் மாவட்டச் செயலகம் தரவு சொல்கின்றது.
“ஆனால் வட்டுவாகல் கடற்படைத் தளம் , அம்பகாம் விமாணப்படைத் தளம் , புலுமச்சிநாதகுளம் படை முகாம் முருகண்டிபடைமுகாம் ஒட்டுசுட்டான் படைமுகாம். புதுக்குடியிருப்பு படைமுகாம் நிலங்கள் தொடர்பில் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் மிக மோசமாக மக்களின் வாழ்வாதாரத்திற்கான நீர்ப்பாசணக் குளங்களில் 8 குளங்களும் , ஓர் சுடலையும் படையினரால் கையப்படுத்தப்பட்டுள்ளன.
“இதிலே அம்பகாமத்தில் எமது மக்களின் வயல் நிலங்கள் 3 ஆயிரம் காணி உள்ளது. அதேபோல் புலுமச்சிநாதகுளம் பகுதியில் 2 ஆயிரத்து 500 காணி வயல் நிலம் படைவசம் உள்ளதோடு இதில் சில வாழ்விடமும் உள்ளது. அதேபோன்று முருகண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்விடங்கள் வீடுகளுடன் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதோடு வாழ்வாதாரக் குளம் இரண்டையும் படையினர் அபகரித்துள்ளனர்.
“இவ்வாறு மக்களின் வாழ்வாதார நிலத்தைப் படையினர் வகைதொகையின்றிக் கையப்படுத்தியுள்ள நிலையில் வனவளத் திணைக்களம் வனஉயிரிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றோடு மகாவலி அதிகார அவை இன்னுமோர் புறமாக உள்ளது. நாயாறு, வட்டுவாகல் போன்ற கடல் வளம் உள்ள பகுதியில் 6 ஆயிரம் காணிக்கும் சொந்தமான நிலத்தை வனஉயிரிகள் திணைக்களம் ஓர் அரச இதழ் மூலம் கவர(அபகரிக்க) 1990முதல் இடம்பெயர்ந்த மக்கள் 2010க்கும் பின்பும் தற்போது இந்தியாவில் இருந்தும் திரும்பும்போதும் அவர்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ள நிலத்தில் காடு வளர்ந்து விட்டதாம் என வனவளத் திணைக்களம் பிடித்து விட்டது.
“கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு எனப் பட்டியல் நீள்கின்றது. இதனைவிடக் கொடுமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் உள்ள பகுதிகூடத் தங்களுக்குச் சொந்தமானவை என அரச இதழ் வெளியிட்டுள்ளனர். ஆனால் இவை இந்த மாவட்டத்தின் மக்கள் சார்பாளர்களுக்கோ மாவட்ட நிருவாக அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்தப்படவில்லை. அவ்வாறு எமது ஒப்புதல் இன்றி அரச இதழ் வெளியிட்டமைக்கு என்ன நடவடிக்கை. இவற்றினை நாம் நீண்டகாலமாக கோரிவருகின்றபோதும் எந்தப் பயனும் இல்லை.
“இவற்றினைவிடத் தேராவில் பண்ணை, விசுவமடுப் பண்ணை இரண்டும் குடிமக்கள் பாதுகாப்புப் படைகள் வசம் உள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலம் இன்று இவர்களின் பிடியிலேயே உள்ள நிலையில் இந்த மாவட்டம் எவ்வாறு முன்னேறுவது.. உழவர்களின் வேளாண்க் குளங்கள் இன்றும் வனவளத் திணைக்களத்தின் பிடியிலேயே உள்ளது. இவற்றினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Leave a Reply