ஏமாற்றுக்கார காவிரி ஆணையத்தைக் கலை!

தன்னாட்சியுள்ள புதிய ஆணையம் அமை!

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!

 

காவிரி மேலாண்மை ஆணையம் என்பது தமிழ்நாட்டை ஏமாற்றும் ஒரு போலி நிறுவனம் என்பதைப் பதினான்காவது தடவையாக 27.09.2021 அன்றும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்திய அரசு நீராற்றல் துறையின் முழுநேரத் தலைவராகவும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் பணித் தலைவராகவும் உள்ள எசு.கே. அலுதார் தலைமையில் 27.09.2021 அன்று புதுதில்லியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டம் வழக்கம்போல், தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டு முடிந்துவிட்டது.

ஆனால், நாளேடுகள் பலவற்றில் கருநாடகம் தமிழ்நாட்டிற்கு 33.7 ஆ.மி.க. (TMC) தண்ணீர் திறந்துவிடக் காவிரி ஆணையம் “உத்தரவு” என்று செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்குசேனா தலைமையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் கடந்த 2021 சூன் மாதத்திலிருந்து செட்டம்பர் 26 வரை கருநாடகம் காவிரியில் திறந்துவிட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. (TMC) பாக்கி உள்ளது. அதை உடனே திறந்துவிடச் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் காவிரி ஆணையக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய எசு.கே. அலுதார் அவ்வாறு ஆணையிடவில்லை. அவர் என்ன கூறினார் என்பது ஆங்கில இந்து நாளேட்டில் (28.09.2021) வந்துள்ளது.

அந்த ஏட்டின் மூத்த செய்தியாளர் டி. இராமகிருட்டிணன் தொலைப்பேசியில் எசு.கே. அலுதாரிடம் கேட்டதற்கு அவர் சொன்ன விடை அப்படியே இதோ :

“குறிப்பாக எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்குத் திறந்துவிடச் சொன்னீர்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டும் அவர் (எசு.கே. அலுதார்) அது பற்றிச் சொல்ல மறுத்துவிட்டார்.

ஆனால், அவர் ஒரு தகவலைச் சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுச் சராசரியை ஒப்பிட்டால், மேட்டூரில் இந்த நாளில் இருக்க வேண்டிய நீர் இருப்பு இல்லை. இக்காலத்தில் சராசரியாக 40 முதல் 45 ஆ.மி.க. (TMC) வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு இருக்கும். இதனோடு ஒப்பிடும்போது கொஞ்சம் பற்றாக்குறை (deficiency) இருக்கிறது. அதையாவது கருநாடகம் திறந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார்” என்று ஆங்கில இந்து ஏடு கூறுகிறது.

காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தண்ணீரின் அளவில், உச்ச நீதிமன்றம் ஓரளவு குறைத்து 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி சூன் மாதத்திலிருந்து செப்டம்பர் 26 வரைக் கருநாடகம் திறந்து விட்டிருக்க வேண்டிய தண்ணீரில் 33.7 ஆ.மி.க. பற்றாக்குறை உள்ளது. ஆனால் காவிரி ஆணையத் தலைவர் கட்டப்பஞ்சாயத்தாகக் கூறியது அதற்கும் குறைவான குத்துமதிப்பான அளவுத் தண்ணீர். ஆணையத்தின் இந்தக் குத்துமதிப்பான “பரிந்துரையையும்” கருநாடக அரசு செயல்படுத்தப் போவதில்லை.

ஏற்கெனவே ஒரு தடவைகூட காவிரி ஆணையத்தின் “பரிந்துரையை”க் கருநாடகம் செயல்படுத்தியதில்லை. அதன்மீது காவிரி ஆணையமும் மோடி அரசும் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை.

தமிழ்நாட்டை ஏமாற்றும் இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுத்ததில்லை; உருப்படியான சனநாயக நடவடிக்கையும் எடுத்ததில்லை!

காவிரியை நம்பி வாழும் பல கோடித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் பொறியமைவாகவே, தன்னாட்சி அதிகாரமோ, தனியான முழுநேரத் தலைவரோ, தனி அலுவலகமோ இல்லாமல் நரேந்திர மோடி அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. இப்போது ஆணையத்தின் முழுநேரத் தலைவராக அதே எசு.கே. அலுதாரை இந்திய அரசு அமர்த்தி இருக்கிறது. அதே அல்தார் வரும் நவம்பர் 30-இல் பணி நிறைவு பெறுகிறார் என்பது கவனிக்கத்தக்கது. அவருக்கு ஓய்வுக்காலப் பரிசாக இப்பதவி வழங்கப்பட்டுள்ளத. இஃது என்ன உள்சூழ்ச்சியோ என்று ஐயப்பட வேண்டியுள்ளது.

இந்த மோசடி ஆணையத்தைக் கலைத்துவிட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள முழுநேர ஆணையத்தை அமைத்திட இந்திய அரசிடம் தமிழ்நாடு அரசு உடனே கோரிக்கை எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை முன்வைத்துத் தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும், அனைத்து உழவர் அமைப்புகளும், அனைத்து மக்களும் காவிரி மீட்பு எழுச்சி நாள் ஒன்றை உடனடியாகக் கடைபிடித்து, அந்நாளில் குமரிமுனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

==========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================