Ramadoss05

  தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் மரு.இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எசு.இ) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் வரும் ஆகத்து 7 முதல் 13 ஆம் நாள் வரை சமற்கிருத வாரம் கொண்டாடப் பட வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் சி.பி.எசு.இ நிருவாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இச்செயலை ஒருவகையான மொழி- பண்பாட்டுத் திணிப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

CBSE-letter-sanskritweek03

  சி.பி.எசு.இ. பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடப்படவிருப்பது இதுவே முதல்முறை என்று சுற்றறிக்கையில் உணர்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை நடத்தப்படாத ஒரு நிகழ்வை இப்போது திடீரென கொண்டாடும்படிக் கட்டாயப்படுத்துவதற்கான தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, சமற்கிருத வாரத்தையொட்டி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் எனப் பலதரப்பட்டவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளைப் பார்க்கும் போது அவை சமற்கிருத மொழியையும், அது சார்ந்த பண்பாட்டையும் திணிப்பதற்கான முயற்சியாகவே தோன்றுகிறது.

  சமற்கிருதம் என்பது இந்தியாவில் ஒருசாராரின் மொழியாகவும்,அச்சாராரின் பண்பாட்டு அடையாளமாகவுமே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 14 ஆயிரம் பேர் மட்டுமே அம்மொழியை பேசுவதாக மத்திய அரசின் புள்ளி விவரம் கூறுகிறது. இத்தகைய சூழலில் தமிழ் முதலான பல்வேறு மொழிகளைப் பேசி, தனித்தனிப்பண்பாட்டைக் கடைபிடிக்கும் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் மீது சமற்கிருத மொழியையும், பண்பாட்டையும் திணிக்க முயல்வதை ஏற்க முடியாது.

  உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பதுடன், 10 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் தமிழை விட இனிமையான, செழுமையான, பழமையான மொழி உலகில் இருக்க முடியாது. ஒருவேளை மொழிகளை வளர்ப்பதில் மத்திய அரசுக்கும், இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் அக்கறை இருக்குமானால் அது அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதைவிடுத்து மொழிகளில் பாகுபாடு காட்டுவது சரியான அணுகுமுறையல்ல.

  எனவே, சி.பி.எசு.இ. பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை சி.பி.எசு.இ. நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள சி.பி.எசு.இ. பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எசு.இ. நிருவாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்”. இவ்வாறு மரு இராமதாசு தெரிவித்துள்ளார்.

opposet--snaskrit-week01