எழுவர்+மரு.இராமதாசு - ezhuvar+ramadoss

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு

“இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழக அரசு மடல் எழுதியுள்ளது.

  இது தமிழர்கள் எழுவரின் விடுதலையைத் தட்டிக்கழிக்கும் நோக்கம் கொண்ட, முழுக்க முழுக்க அரசியல் தன்னலம் தேடும் செயலாகும்.

  பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இரவிச்சந்திரன், இராபர்ட் பயசு, செயக்குமார் ஆகிய ஏழு தமிழர்களும் இராசீவுகாந்திக் கொலை வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் ஆவார்கள். இராசீவு கொலை வழக்கில் இவர்களுக்குத் தூக்குத் தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டபொழுதிலும், பின்னர் வெவ்வேறு காலக்கட்டங்களில் தண்டனை குறைக்கப்பட்டு வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது. அது மட்டுமின்றி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432ஆவது பிரிவின்படி இவர்களை விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு எழுதியுள்ள கடிதத்தை ஏற்று ஏழு பேரையும் விடுவிக்க நடுவண் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடும் கோரிக்கையும் ஆகும். ஏற்கெனவே பலமுறை வலியுறுத்தப்பட்ட இந்தக் கோரிக்கையை நடுவண் அரசிடம் பா.ம.க மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.

  ஆனால், ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நடுவண் அரசு ஏற்குமா என்பதுதான் இப்பொழுது விடை தேடப்பட வேண்டிய வினா ஆகும். இராசீவு கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற இவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப் பரிவு (கருணை) அடிப்படையில் விடுவிப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த 18.02.2014 அன்று அறிவுறுத்தியிருந்த நிலையில், அவர்களின் விடுதலை குறித்து நடுவண் அரசின் கருத்தைக் கேட்டு 19.02.2014 அன்று தமிழக அரசு மடல் எழுதியது. ஆனால், அந்த மடலுக்கு விடை அளிப்பதற்கு முன்பே தமிழக அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஏழு பேரின் விடுதலையைக் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்து நிறுத்தியது. அதற்குப் பிறகு நடுவணரசில் ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திரமோடி தலைமையிலான அரசும், ஏழு தமிழர்களை விடுதலை செய்யவே கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் கடுமையாக வாதாடியது. அவ்வழக்கில் உசாவல்(விசாரணை) முடியாத நிலையில் இப்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

  இவற்றுக்கெல்லாம் மேலாகப் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனை நீக்கப்பட்டதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அளித்த மறு ஆய்வு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது முறையாகச் சீராய்வு விண்ணப்பம் அளித்தது நரேந்திரமோடி அரசுதான். மொத்தத்தில் காங்கிரசும், பாரதிய சனதாவும் அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கூடாது என்பதில் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலைப்பாடுதான்.

  செயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், ஏழு தமிழர்களும் இன்று மாலைக்குள் விடுதலையாகி விடுதலைக் காற்றை நெட்டுயிர்க்க (சுவாசிக்க) வாய்ப்பிருக்கிறது.

  அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதுதான் நடைமுறைக்கு ஏற்ற தீர்வாகும். எனவே, 161ஆவது பிரிவைப் பயன்படுத்தி எழுவரையும் விடுதலை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! அதே நேரத்தில் ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் காங்கிரசு, பா.ச.க, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி ஆகிய கட்சிகள் தங்களது தேசியத் தலைமையின் நிலையை வழிமொழியப் போகின்றனவா அல்லது அதற்கு மாறாக, தமிழர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கப் போகின்றனவா என்பதை இக்கட்சிகளின் மாநிலத் தலைமைகள் விளக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.