தமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால்

தேர்வாணையத்தை இழுத்துமூடுங்கள்

– மரு.இராமதாசு

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில்  தமிழில் நடத்த முடியாது என்று த.ந.அ.ப.தேர்வாைணயம் அறிவித்துள்ளது. இரண்டாம் தொகுதித் தேர்வுகள் அடுத்தவாரம் இதே நாளில் தொடங்கவிருக்கும்  நிலையில்,  இந்த அறிவிப்பு பெரும்  அதிர்ச்சியளிக்கிறது. இரண்டாம் தொகுதித் தேர்வு எழுதும் 6.26 இலட்சம் பேரில் 4.80 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் தமிழையும், 1.45 இலட்சம் பேர் பொது அறிவு மற்றும் ஆங்கிலத்தையும் விருப்பப்பாடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கான முதனிலைத் தேர்விலோ முதன்மைத் தேர்விலோ அரசியல் அறிவியல், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான வினாக்கள் தமிழில் கேட்கப்படாமல், ஆங்கிலத்தில்  மட்டும் கேட்கப்பட்டால் அது தமிழில் தேர்வெழுதுபவர்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும். தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படாததற்காகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள்  தேர்வாணையம் கூறியுள்ள விளக்கம் ஏற்கத்தக்கதல்ல என்பது மட்டுமின்றி, மிகவும் அபத்தமானதும் ஆகும்.

தமிழில் அல்லாமல் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் வழங்கப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கூறுவது இயல்பான ஒன்றாகத்  தெரியவில்லை. தமிழ்நாடு  அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்  செயலாளர் நந்தகுமார் கூடத் தமிழில் தேர்வெழுதி இ.ஆ.ப.(ஐஏஎசு அதிகாரி ஆனவர்தான். அவ்வாறு இருக்கும் போது மாநில மொழியில்  தேர்வெழுதுவதற்கான வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாதது அவமானம் ஆகும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் போட்டித்தேர்வுகளை நடத்த முடியவில்லை என்று கூறுவதற்குத் தமிழ்நாடு தேர்வாைணயம்(TNPSC) வெட்கப்பட வேண்டும். தமிழில் வினாத்தாள்களைத் தயாரிக்க முடியாவிட்டால் தேர்வாணையத்தையே மூடிவிடலாம். இதற்கான அறிவிப்பு சில நாட்களில் வெளியிடப்படாவிட்டால் பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் மாணவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம்  நடத்தப்படும். இதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு  மரு.இராமதாசு அறிக்கை மூலம்தமிழர்களின் உணர்வுகளை எதிரொலித்துள்ளார்.