தமிழ் நாடு அரசு பணியாளர்களை இந்திய அரசு தேர்ந்தெடுக்கத் த.தே.பே. கண்டனம்!
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்திய அரசு, தேர்வு நடத்துமாம்!
வெளிமாநிலத்தவர் வேட்டைக்கு இன்னொரு வழி!
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன் கண்டனம்!
இந்திய அரசின் பணியாளர் நலன்-பயிற்சித் துறை திசம்பர் 4 – 2019 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுப் பணிகளுக்கும் அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தவிருப்பதாக முன்மொழிவை வைத்துள்ளது.
இந்திய அரசு அமர்த்தும் ஒரு நிறுவனத்தின் வழியாக இப்போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், மாநில அரசுகள் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அனைத்திந்திய அளவில் போட்டித் தேர்வு நடத்தி, தனது மாநிலத்திற்கான பணியாளர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டுமென அந்த அறிவிக்கை கூறுகிறது.
தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் அனுமதிக்கப்படுவதைக் கண்டித்து, தமிழ்நாட்டு இளைஞர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில், அத்தேர்வையே இந்திய அரசின் நிறுவனம் நடத்தும் என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாநில அரசுப் பணிகளை வெளி மாநிலத்தவர் மயம் ஆக்குவதற்கான சதித் திட்டமாகும்! மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொதுத்தேர்வு(‘நீட்’) நடத்தியிருக்கும் தமிழர் பகைத் திட்டத்தைப் பார்த்து வருகிறோம்.
மேலும், நிறுவனங்களின் பணியமர்த்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உரியவாறு செயல்படுத்தப்படுவதில்லை என்ற குறைபாடும் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. இச்சூழலில், இந்திய அரசு நிறுவனமே அத்தேர்வை நடத்தும் என்றால், மாநில அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்புகளும் மறுக்கப்படும்.
எனவே, தமிழ்நாட்டுப் பணிகளை வெளியார் மயமாக்கும் தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்புகளை மறுக்கும் இந்த அறிவிப்பை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு வலுவாக மறுப்புத் தெரிவிக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================
Leave a Reply