ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்!

மதுரையில் பேருந்து நிலையம்-தெப்பக்குளம் வழித்தடப் பேருந்தில், பயணி ஒருவர், எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது 1970 இற்கு முன்பு நடந்த நிகழ்வு. இந்த வழக்கில்  அவரது முன்வரலாறு நன்றாகத்தான் தெரிவிக்கப்பட்டது. உடலுறுப்புகள் தெரிய பெண் அணிந்திருந்த உடை அவருக்கு ஒரு வகை வெறியை ஏற்படுத்திவிட்டதாகவும் இனி அவ்வாறு செய்ய வில்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி,  பொதுவிடங்களில் பெண்கள் கட்டுப்பாட்டுடன் ஆடை அணியவும் அறிவுரை வழங்கினார். இப்பொழுது அவ்வாறு கூறியிருந்தால் போலிப் பெண்ணியவாதிகள் பெண்கள் எப்படி ஆடை அணிந்தால் என்ன என்று கிளர்ந்தெழுந்திருப்பர்.

பாலுறவு ஒழுக்கம் தொடர்பான சில செய்திகள்: சில நேர்வுகளில் பெண்கள் முறை தவறிய உறவுகளில் ஈடுபட்டுக் கணவரைக் கொல்கின்றனர், மாமியார், மாமனார், கொழுந்தனார், நாத்தனார், பிற உறவினர்களை வன்முறையாகவே கொல்கின்றனர். இந்தப் போக்கு தவறானதுதான். எனினும் பெரும்பான்மைக் குற்றங்கள் ஆண்களால்தான் நேர்கின்றன. சிறு குழந்தையின் எந்த உடை அல்லது தோற்றம் ஆணைத் தூண்டியது என்று சொல்ல முடியும்? ஆந்திராவில் கால் நடை மருத்துவர் பிரியங்கா மீது என்ன தவறு சொல்ல முடியும்? திட்டமிட்டு ஊர்திச்சக்கரங்ளைப் பாழ்படுத்தி வண்டியை நிறுத்தச் செய்து வன்முறை உறவும் கொலையும் செய்த ஆண்கள்தானே குற்றவாளிகள். இப்படிப் பல நிகழ்வுகள் ஆண்களின் குற்ற மனப்பான்மையால்தான் நிகழ்கின்றன.

புள்ளிவிவரப்படி பெரும்பான்மையான வன் புணர்வு தெரிந்தவர்களாலேயே நிகழ்கின்றன. பெண்கள் பழகும் முறையும் அணியும் உடையும் பிற தோற்றமும் காரணமாகக் கூறப்படுகின்றன. பெண்கள் களங்கமின்றிப் பழகும் பொழுது தவறான பார்வையும் எண்ணமும் கொண்ட ஆண்கள்தானே குற்றவாளிகள். அவ்வாறிருக்கப் பெண்களைக் குற்றம் சொல்லலாமா?

பொள்ளாச்சியில் காதலனும் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து 16 அகவைப் பெண்ணைச் சீரழித்துள்ளனரே!

குர்கானில் மிதி யூர்தியில்(ஆட்டோவில்) வந்த தாயைக் கற்பழிதது உடனிருந்த குழந்தையை வெளியே வீசிக் கொன்றுள்ளனரே!

ஆத்தூரில் 9ஆம்வகுப்பு மாணவியைத் தாயின் முன்னிலையில் கற்பழித்துள்ளானே ஒரு காமுகன்! தேனியில் 57 அகவைப் பாட்டியைச் சிலர் கூட்டாக வல்லுறவிற்கு ஆளாக்கியுள்ளனரே!

குசராத்து மாநிலம் இராசகோட்டில் விளையாடிக்கொண்டிருந்த 4 அகவைச் சிறுமியைப் பேத்தியாக எண்ணாமல் ஒருவன் கற்பழித்துள்ளானே!

திருப்பூரில் 4 அகவைச் சிறமிக்குத் தொடர்ந்து பாலியல துன்புறுத்தல் கொடுத்து வந்தானே ஒருவன்!

சேலம் வாழப்பாடியில் கள்ளக்காதலுடன் இருந்த பெண்ணை அறுவர் கூட்டாகச் சிதைத்துள்ளனரே!

தேராடூனில் 11 அகவைச் சிறுவன் 3 அகவைச்சிறுமியைக் கற்பழித்துள்ளான்!

வேலியே பயிரை மேயும் நிகழ்வுகளும் பல உண்டு. வல்லுறவு வழக்குகளில் காவலரும் தங்கள் பங்கிற்குக் கைவரிசையைக் காட்டியுள்ளனர். காவலர் மட்டுமல்லர்.  நாட்டைக்காப்பதால் போற்றப்படும்   படைவீரர்களின் கற்பழிப்புச் செய்திகள் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. போரினால் பாதிப்புறும் நாடுகளில் படைவீரர்களால்தானே பெருமபான்மை வல்லுறவுகள் நிகழ்கின்றன.

தம்மிடம் பயிலும் மாணவிகளிடமும் தங்களின் கீழ்ப் பணியாற்றும் பெண்களிடமும் மிரட்டியும் ஆசை காட்டியும் ஏமாற்றும் ஆண்களும் மிகுதியாக உள்ளனர். தன் தாயிடம் பயிலும் மாணவிகளை ஏமாற்றிச் சிதைத்துச் சிறை வாழ்க்கை வாழ்ந்த நடிகரை முந்தைய தலைமுறையினர் அறிவர். இறையன்பை வஞ்சகமாகப் பயன்படுத்திப் பெண்களைச்சிதைக்கும் சாமியார்கள், பூசாரிகள் செயல்களும் அவ்வப்பொழுது வந்துகொண்டுதான் உள்ளன. இப்போதைய அறிவியலையும் தங்கள் குற்றங்களுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒரு முறை வல்லுறவு மேற்கொண்டு, அதனைக் கைப்பேசியில் படம் எடுத்து அதைக் காட்டி மிரட்டியே மீண்டும் மீண்டும் வல்லுறவில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஏனெனில், 2017இல் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த பாலியல் குற்றங்கள் 3,50,000 ஆகும். இந்த விவரம் தேசியக் குற்றப் பதிவு பணியகம் தெரிவித்தது. பதிவாகாத வழக்குகள் மேலும் பல நூறாயிரம் இருக்கும்.

இவற்றிற்கெல்லாம் காரணம் பெண்களின் கட்டுப்பாடின்மையா? ஆண்களின் கட்டுப்பாடின்மையா? ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒளவையார் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

சங்ககாலப் புலவர் ஒளவையார் பாடிய பாடல்கள் 59. இவை, எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில்  உள்ளன. இவற்றுள் புறநானூற்றில் இடம் பெறும் 187 ஆவது எளிய பாடலே நாம் பார்க்கப் போவது. இப்பாடல் பொதுவியல் திணையைச் சேர்ந்தது. எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுவது. நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது; ஆடவரது ஒழுக்கமே உலக மேம்பாட்டிற்கு அடிப்படை  என இதன்மூலம் ஒளவையார் வலியுறுத்தி யுள்ளார்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ,

அவலா கொன்றோ; மிசையா கொன்றோ,

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை; வாழிய நிலனே! (புறநானூறு 187)

கொன்றோ – ஆக ஒன்றோ ; அவல் = பள்ளம்; மிசை = மேடு.

நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும்.

நாடானால் என்ன, காடானால் என்ன? மேடானால் என்ன, பள்ளமானால் என்ன? எங்கெல்லாம் ஆண்கள் நல்லவர்களாக விளங்குகின்றனரோ, அங்கெல்லாம் நிலமே, நீயும் நன்றாக விளங்குவாய்”  என்கிறார் ஒளவையார்.

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி, “எவ்விடத்து நல்லர் ஆண்மக்கள் அவ்விடத்து நீயும் நல்லை யல்லது நினக்கென ஒரு நலமும் உடையை யல்லை வாழி” என விளக்குகிறார்.

ஆண்கள் தங்கள் உழைப்பால், நிலத்தைச் செப்பனிட்டு, வேளாண்மையைச் சிறக்கச் செய்து வளமான வாழ்விற்கு வழிகாட்டுவர். எனவே, ஒளவையார் ஆடவர் என ஆண்களைத்தான் குறிப்பதாகப் பலர் கூறுவர். இல்லை! பொதுவான மக்கள் உழைப்பால்தான் வளம் சிறக்கிறது. எனவே, ஆடவர் என்பது மக்களைக் குறிப்பதே; மக்களைப் பொறுத்ததே அப்பகுதியின் வாழ்வும் தாழ்வும்  என்றும் சிலர் கூறுவர்.

சிலர் ஆடவர் என்பது ஆட்சியாளரைக் குறிப்பது. ஆட்சியாளர் நல்லாட்சி தந்தால் மக்களும் நலமாகவும் வளமாகவும் வாழ்வர் என்கின்றனர். இவையும் பொருந்தி வரக்கூடியனவே. எனினும் பெண்களில் ஒழுக்கம் என்பது ஆண்களின் ஒழுக்கத்தைப் பொறுத்தது என்பதே மிகச் சரியாகும்.

பாலி மொழியிலான தம்மபதத்திலுள்ள பாடல் ஒன்றினுடனும் வடஇந்திய-ஆரியமொழிகளின் தாயாகக் கருதப்படும் அபபிரம்சா மொழிப்பாடல் ஒன்றிடனும் ஒப்பிட்டு அறிஞர் தெ.பொ.மீ., அறிஞர் செ.வை.சண்முகனார் கூறுகின்றனர். சரியான கால ஆராய்ச்சி நடை பெற்றது என்றால் ஒளவையார் பாடலே மூத்தது என மெய்ப்பிக்கப்படலாம். ஒவையார் நமக்கு உணர்த்துவதுதான் ஆடவர் நல்லவராக இருந்தால் உலகமும் நல்லதாக இருக்கும் என்பது!

இதற்குத் தொன்மைக் கதைகள் அடிப்படையில் விளக்கம் காணலாம். பதவி வெறி பிடித்த இந்திரன், தன்பதவி பறிபோகுமோ என்ற அச்சத்தில் விசுவாமித்திரர் தவத்தைக் கலைக்க மேனகையை அனுப்பினான். பொதுவாக வானுலக அரம்பரையர் அங்குள்ள கந்தர்வர்களின் மனைவியர். அப்படி என்றால் இவள் திருமணமானவள். இவள் தவத்தைக் கலைத்த பின்னர் விசுவாமித்திரர் இவளையே திருமணம் செய்து கொண்டார். (இருவருக்கும் பிறந்தவள்தான் சகுந்தலை.) எனினும் அவளுக்குச் சாவம் – சாபம் இட்டார்.

விசுவாமித்திரர் கட்டுப்பாட்டுடன் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. அல்லது இந்திரன் பதவி வெறிக்காகத் தரங்கெட்ட நிலைக்கு இறங்கி மேனகையை அனுப்பாமலிருந்தாலும் இந்த நிலை வந்திருக்காது. எனவே, ஆடவர் நல்லவராக இருந்தால் பெண்டிரும் நல்லவராக இருப்பர்.

கெளதம் முனிவரின் மனைவி அகலிகையிடம் கெளதம் முனிவர் வேடத்தில் உறவு கொண்டவன் இந்திரன். அவன் தன் கணவன் அல்ல என்று தெரிந்த பின்னரும் உறவைத் தொடர்ந்தவள் அகலிகை. கெளதம முனிவருக்கு இது தெரிந்த பின்னர் அவள் கல்லாக மாற்றப்பட்டாள். ஆடவனான இந்திரன் ஒழுக்கமாகவும் கட்டுப்பாடாகவும் இருந்திருந்தால் அகலிகை தவறுக்கு ஆளாக நேர்ந்திருக்காது; கல்லாகவும் மாறியிருக்க மாட்டாள். எனவே, உண்மை நிகழ்வுகளும் தொன்மக் கதைகளும் ஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்தே பெண்களின் ஒழுக்கம் உள்ளதை மெய்ப்பிக்கின்றன எனலாம். இருப்பினும், பெண்களுக்குத் தற்காத்துக் கொள்ளும் கடமை உணர்வும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய பொறுப்புணர்வும் உள்ளன.

ஆண்மை என்பது பெண்மையைத் தவறாகவோ வன்முறையிலோ துய்ப்பது அன்று. பெண்மையைக் காப்பதே ஆண்மை! பெண்மையைப் பேணலே ஆண்மை! பெண்மையைப் போற்றலே ஆண்மை! இக்கருத்து ஆண்கள் உள்ளங்களில் விதைக்கப்பட வேண்டும்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்

பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! என்பான்  பாரதி.

  • இலக்குவனார் திருவள்ளுவன், தொடர்புக்கு:thiru2050@gmail.com
தினச்செய்தி 04.12.2019