மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மும்மொழித் திணிப்புகளையும் எதிர்ப்போம்!
இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல் நாம் ஆங்கிலத்திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளோம். இந்தி, சமற்கிருதத் திணிப்புகள் தமிழைக் குற்றுயிரும் குறையுயிருமாகச் சிதைத்து வருகின்றன. அவற்றிற்குச் சிறிதும் குறைவி்லாத வகையில் ஆங்கிலத் திணிப்பு நம் தமிழை அழித்துக் கொண்டு வருகிறது. தமிழ் இருக்க வேண்டிய இடத்தில் பிற மொழிச்சொல் இடம் பெற்றது என்றால், அந்தத் தமிழ்ச்சொல் வாழ்விழந்து விடுகிறது.
மு.க.தாலின் அரசு, அரசுப் பணியிடங்களில் தமிழ் தகுதித்தேர்வு கட்டாயம், அயலகத் தமிழர் நலன் – மறுவாழ்வுத் துறை ஆணையரகம், புலம்பெயர் தமிழர் நலவாரியம் எனத் தமிழர் நலன்களுக்கான தனித்துறை, தனி வாரியம் அமைத்தல், அயலகத்தமிழர் நாள் கொண்டாடுதல், தமிழ் எழுத்தாளர்களை இலக்கிய மாமணி விருது கொடுத்துப் பாராட்டுதல், தகைசால் தமிழர் விருது அளித்தல், விருது பெற்ற படைப்பாளர்களுக்குக் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் வழங்கல், என்றெல்லாம் தமிழர் நலன்களைச் சிந்தித்துத் திட்டங்களைச் செயற்படுத்தி வருவது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழைத் துரத்தும் பணிகளிலும் அரசு ஈடுபட்டுவருவது வருத்தத்திற்கும் கண்டனைக்கும் உரியன அல்லவா?
“திராவிடம் என்பது மொழிப்பற்று. திராவிடம் என்பது இன உரிமை.” என்கிறார் முதல்வர். ஆனால் தாய்க்கழகம் போல், பிற சேய்க்கழகங்கள் போல், இன உரிமைக்குக் குரல் கொடுக்கும் அளவிற்குத் தமிழ்ப்பற்றில் கருத்து செலுத்துவதில்லை. எனவேதான், திராவிட மாடல், போலீசு அக்கா, நம்ம செசு, நம்ம இசுகூல் பவுண்டேசன் எனத் திட்டங்களில் தமிழை இடம் பெயரச் செய்யும் ஆங்கிலப்பெயர்கள் கோலோச்சுகின்றன.
“தமிழால் இணைவோம்” என்பது அரசின் முழக்கமாகவும் “தமிழை மறப்போம்” என்பது அதிகாரிகளின் செயற்பாடுகளாகவும் உள்ளன. இந்நிலை என்று மாறுமோ? “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உதட்டளவில் தமிழைத் தாய் என்கிறார்கள். ஆனால், ஆங்கிலத்தின் அருந்தவப்பிள்ளைகளாகச் செயல்படுகிறார்கள். இந்தியை எதிர்ப்பதுபோல் நாடகமாவது ஆடுகிறார்கள். ஆனால், ஆங்கிலத்திற்குக் காவடி தூக்குகிறார்கள்.”(ஆங்கிலத்திற்கு வரவேற்புப் பா பாடும் திமுக, அதிமுக!, மின்னம்பலம்)
“2012-13 இல் செயலலிதா அரசு, அரசின் தொடக்க – நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்தது. 320 பள்ளிகளில் முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2013-14 கல்வியாண்டில் மேலும் 3200 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இவ்வாறு ஆண்டுதோறும் ஆங்கிலவழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டதால், 4,84,498 பேர் தமிழ்வழிக் கல்வியை இழந்தனர். இதைத் தொடர்ந்து 2017-2018 இல் ஆங்கிலவழிக் கல்வித் திணிப்பு அரங்கேறியுள்ள அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை 3,916.” இவ்வாறு தமிழ்வழிப்பள்ளிகளாக இருந்த அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியைத் திணித்துள்ளது காலந்தோறும் அழிவை ஏற்படுத்தும் அடாத செயலல்லவா? இன்றைய அரசாவது இதற்கு முற்றுப்புள்ளி வைத்து நிலை பெயர் பெற வேண்டாவா?
“சொல்லாதையும் செய்வோம்-சொல்லாமலும் செய்வோம்” என்பது முதல்வரின் முத்தான முழக்கங்களில் ஒன்று. தமிழைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதையாவது செய்யுங்கள். “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” என்பதைச் செயலில் காட்டுங்கள். “எண்ணுக தமிழில்! எழுதுக தமிழில்!” என்பதை நடைமுறைப்படுத்துங்கள். ஆங்கில முத்திரைகளையும் ஆங்கிலப் பெயர்களையும் அடியோடு அகற்றுங்கள்! தமிழ்த்திட்ட விளம்பரங்களில் ஆங்கில விளக்கங்களும் ஆங்கில முத்திரைகளும் தேவையில்லை என்பதை உணருங்கள்!
உங்களின் தமிழ்ச்செயலாண்மையைக் காட்டும் வகையில், நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இந்நாள் வரை தமிழ்ஆட்சிமொழித்திட்டத்தைச் செயற்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு நாள் ஊதியப்பிடிப்பாவது தண்டைனயாகச் செய்யுங்கள். எச்சரிக்கையோ சுற்றறிக்கையோ ஆணையோ தேவையில்லை. இவை வேண்டிய அளவிற்கு மேலேயே விடப்பட்டுள்ளன. இப்பொழுது தேவை, நடவடிக்கையே! இதன்மூலம் உங்களின் தமிழ்ச்செயற்பாட்டு எண்ணத்தைப் புரிந்து கொண்டஅதிகாரிகள் தமிழுக்கு வாழ்வளிப்பார்கள்.
எனவேதான், நாம் ஆங்கிலத் திணிப்பு எதிர்ப்பிற்கு முதற்கட்டமாக, ‘மாநில அரசே! ஆங்கிலத்தைத் திணிக்காதே!’ என வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்தியையும் சமற்கிருதத்தையும் ஒன்றிய அரசு திணிப்பதை நிறுத்தவில்லை. எனவே, மற்றொரு மொழிப்போராட்டம் தேவைப்படுகிறது. அதைக் குறிப்பிடவே, ஒன்றிய அரசிற்கும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரசின் செயற்பாடுகளுக்கும் செயற்பாடின்மைகளுக்கும் மக்களும் காரணம், எனவேதான், அவர்களுக்கும் “தமிழைச்சிதைக்காதே!” என வேண்டுகோள் விடுக்கின்றோம். தமிழா என்பது தமிழச்சியையும் குறிக்கும் தமிழால் வாழும் பிற மொழியினரையும் குறிக்கும். ஊடகத்தினரையும் குறிக்கும். ஊடக மக்கள் பயன்படுத்தும் ஐந்து சொற்களில் நான்கு ஆங்கிலம் என்ற நிலை மாறி, இப்பொழுது அந்த இடத்தில் இந்தி புகுத்தப்படுகின்றது. தமிழறியா ஊடகத்தினர் ஊடகத்தை விட்டு வெளியேறுவதே நன்று.
நண்பர்களே! தமிழ் அன்பர்களே! நீங்கள் எக்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் எக்கட்சி சார்புடைய அமைப்பில் இருந்தாலும் பொதுவான அமைப்பில் இருந்தாலும் பின்வருமாறு வேண்டுகோள்களை முதல்வருக்கும் தலைமையருக்கும் விடுக்க வேண்டுகிறோம். இம் முழக்கத்தில் உங்கள் அமைப்பின் பெயரை அல்லது உங்கள் பெயரைக் குறிப்பிட்டு உரியவர்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.
தமிழே விழி! தமிழா விழி!
மாநில அரசே! ஆங்கிலத்தைத் திணிக்காதே!
ஒன்றிய அரசே! இந்தி, சமற்கிருதங்களைத் திணிக்காதே!
தமிழா! தமிழைச் சிதைக்காதே!
தமிழ்க்காப்புக் கழகம்
தமிழ்நாடு-புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
என நாம் மும்மொழித்திணிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தமிழ்நாட்டு முதல்வருக்கும் இந்தியத் தலைமையமைச்சருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புவோம்! மின் வரிகள் அனுப்ப இயலாதவர்கள் அடுத்தவர் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்புவோம்! அஃதாவது ஒரே மின்வரியிலிருந்தே தனித்தனியே அவரவரவர் பெயரைக் குறிப்பிட்டு மின்னஞ்சல்கள் அனுப்புவோம்! அல்லது பிற தளங்களில் பதிவோம்! அதற்கும் வாய்ப்பிலலாதவர்கள், அல்லது கூடுதலாக அஞ்சலட்டையில் இவ்வேண்டுகோளை அனுப்புவோம்!
முதல்வர் இணையவரிகள்:
facebook.com/MKStalin
twitter.com/mkstalin
instagram.com/mkstalin/
தலைமையமைச்சர் இணையவரிகள்:
https://www.facebook.com/narendramodi
https://twitter.com/narendramodi
முதலமைச்சர் முகவரி:
மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு
25/9, சித்தரஞ்சன் சாலை,
நிலவறை (செனடோப்பு) 2ஆவது தெரு,
சென்னை 600 018
தலைமையர் முகவரி:
மாண்புமிகு இந்தியத்தலைமையமைச்சர்
Honourable Prime minister of India
7, Race Course Road/Lok Kalyan Marg
New Delhi 110011
உலகத்தாய்மொழி நாளுக்கு முந்தைய வரும் ஞாயிறன்று தமிழ்க்காப்புகழகம் சார்பில் மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு அரங்கத்தை இணைய வழியில் நடத்துகிறோம். இனி ஒவ்வோர் ஆண்டும் மாசி முதல் ஞாயிறு / பிப்பிரவரி மூன்றாவது ஞாயிறன்று நாம் மும்மொழித்திணிப்பு எதிர்ப்பு நாளை நிகழ்த்துவோம். வாய்ப்புள்ளவர்களும் அவ்வாறு நடத்த வேண்டுகிறோம்.
நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply