வெளி மாநிலத்தவர்களே!

 திரும்பிப் போங்கள்!”

சென்னை மத்தியத் தொடரி நிலையம் முன்பு 

மனிதச் சுவர் போராட்டம்!

சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் 

பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் அறிவிப்பு!

தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும்  வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்!” என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை மார்கழி 04, 2050 / 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடரி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது.

இதையொட்டி, மார்கழி 02, 2050  (18.12.2019) காலை, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர்கள் சங்க அரங்கில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், பொதுச்செயலாளர் தோழர் கி. வேங்கடராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முதலான பேரியக்க                       நிருவாகிகள் பங்கேற்றனர். 

பெ. மணியரசன் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது :

“தமிழ்நாட்டில் தமிழர்களுக்குரிய தொழில், வணிகம், வேலை வாய்ப்பு அனைத்தையும் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளார்கள். அன்னையின் மடியில் அனாதை ஆகிப்போன குழந்தையைப் போல் சொந்த மண்ணில் தமிழர்கள்      அனாதைகளாக – வேலை வாய்ப்பற்ற வறியவர்களாக அலைகிறார்கள்.

தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைத் தமிழ்நாட்டிலேயே இந்திய அரசு செயல்படுத்துகிறது. ஒரே ஓர் எடுத்துக்காட்டு : தமிழ்நாட்டு மக்களவை உறுப்பினர் திரு. மாணிக்கம் தாகூர் 11.12.2019 அன்று மக்களவையில் கேட்ட வினாவுக்கு விடையளித்த தொடரித்துறை அமைச்சர் பியூசு கோயல் “அனைத்திந்தியாவிலும் கடந்த  ஐந்தாண்டுகளில் தொடர்வண்டித்துறையில் 1,31,000 பேர் வேலையில் சேர்க்கப்பட்டனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,433 பேர் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இதேபோல் தான், இங்குள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலையில் சேர்த்துள்ளார்கள்.

தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும்  வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்”  என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடரி நிலையம் முன் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்துகிறது. கீழ்க்காணும் கோரிக்கைகளை இப்போராட்டத்தில் முன்வைக்கப்படுகின்றன.

  1. வெளி மாநிலத்தவர்கள் மிகையாக வந்து குடியேறுவதைத் தடுக்க நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் இருப்பதுபோல் தமிழ்நாட்டில் உள் அனுமதி (Inner Line Permit) வழங்கும் அதிகாரம் தமிழ்நாடு அரசு பெற வேண்டும். வரைமுறை இன்றித் தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவரை இச்சட்டப்படி தடுக்க வேண்டும்.

 

  1. இந்தியஅரசின் ஒப்பந்தப்படியும் உச்ச நீதிமன்ற ஆணைப்படியும்  அசாமில் நடந்த மண்ணின் மக்கள் கணக்கெடுப்பு போல் தமிழ்நாட்டில் 1956 நவம்பர் 1க்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்தோர் மற்றும் அவர்களின் மரபுரிமையர் மட்டுமே தமிழ்நாட்டுக் குடிமக்கள் என்று அறிவித்து, அவ்வாறில்லாத வெளி மாநிலத்தவர்களை அவரவர் தாயக மாநிலத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.

 

  1. தமிழ்நாட்டில்உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பத்து விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும். இவ்வேலைகளுக்கு அனைத்திந்தியத் தேர்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்.

 

  1. கருநாடகம், குசராத்மாநிலங்களில் இருப்பதுபோல் மாநில அரசு,  இந்திய அரசு, தனியார் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு வேலை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்”.

இவ்வாறு பெ. மணியரசன் கூறினார்.

  #தமிழகவேலைதமிழருக்கே     #TamilnaduJobsForTamils   

சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம் 

போராட்டத்தையொட்டி, மார்கழி 04, 2050 /திசம்பர் 20 அன்று காலை 8 மணி முதல் சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils ஆகிய Hashtag-களுடன் பரப்புரை இயக்கம் நடக்கிறது. போராட்டத்திற்கு வர இயலாத தமிழ் மக்கள், தங்கள் இல்லத்திலிருந்தபடியே அவரவர் ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில், இக்குறிச்சொற்களுடன் தங்கள் கருத்தை எழுதிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம்! 

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

=====================================