1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு! – பெ. மணியரசன் இரங்கல்!
1965 மொழிப்போர் வீரர் – இலக்கியப் படைப்பாளி
தோழர் பா. செயப்பிரகாசம் மறைவு பேரிழப்பு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் இரங்கல்!
மிகச் சிறந்த படைப்பிலக்கிய ஆளுமையும், மார்க்சிய லெனினியரும், தமிழ்த்தேசியருமான தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் இன்று (23.10.2022) மாலை தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திக்குளத்தில் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்ற செய்தி சொல்லொணா வேதனையை உண்டாக்குகிறது.
ஆதிக்க இந்தியை எதிர்த்து 1965இல் நடந்த மாபெரும் மாணவர் போராட்டத்தின் தள நாயகர்களில் ஒருவர் தோழர் பா. செயப்பிரகாசம். அப்போது மதுரையில் தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.
பின்னர் மார்க்குசிய – இலெனினிய மெய்யியல் – அரசியலில் ஈடுபாடு கொண்டு மா.இலெ. அமைப்பொன்றின் (TNOC) ஆதரவாளராக இருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணிக் களச் செயல்பாடுகளில் இருந்த கல்லூரி மாணவர்களுக்கு 1967இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக பதவிகள் – மாவட்டங்களில் வழங்கியது. அதன் வழியாக மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார் சே.பி. (செயப்பிரகாசம் அவர்கள் அன்புடன் சே.பி./J.P. என்று அழைக்கப்பட்டார்).
சிறுகதை படைப்பதில் இயல்பான ஆர்வம் கொண்டு, ஆற்றலுடன் கதைகள் வழங்கினார். நான் பா.செ.வின் சிறுகதை இரசிகன். நெல்லைச் சீமை மொழியில் மிகமிக உயிரோட்டமாக எழுதுவார்!
மார்க்குசிய – இலெனினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் “மனஓசை”, “கேடயம்” போன்ற இதழ்களில் அரசியல் திறனாய்வுகள், படைப்பிலக்கியங்கள் எழுதி வந்தார்.
தஞ்சை மாவட்ட மக்கள் செய்தித் தொடர்பு அதிகாரியாக பா.செ. பணியாற்றியபோது, அவருடன் நேரில் சந்தித்து நான் உரையாடுவது வழக்கம். மக்கள் செய்தித் தொடர்புத் துறையில் பதவி உயர்வு பெற்று துணை இயக்குநர் பொறுப்பில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்தார். ஆனால், அதிகார வருக்கத் தோரணை எதுவுமின்றி அப்போதும் தோழராகவே பழகினார். அப்பதவி உயர்வும் அவருக்கு மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது.
எமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைத் தோழமை அமைப்பாகக் கருதி அன்புடன் அணுகுவார். நாம் அழைக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு வருவார். எமது தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழிலும், அதன் மலர்களிலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
ஒரு செய்தியை முழுமையாகத் தெரிந்து கொண்டு, ஆற்றோட்டம் போல் அழகாக உரையாற்றுவார். அவசரப்பட்டு சொற்களைக் கொட்டாமல், அளந்து பேசுவார். அது சே.பி.பாணி என்று சொல்லலாம்.
தோழர் சே.பி.யின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள இராமச்சந்திரபுரம். சே.பி.யின் இழப்பு – தமிழ்த்தேசியத்திற்கும், இடதுசாரிக் கருத்தியலுக்கும் தோழர்களுக்கும் பேரிழப்பு!
நாளை மறுநாள் (25.10.2022) பகல் 12 மணி அளவில் அவரது விருப்பப்படி அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் அளிக்கிறார்கள்.
விளாத்திக்குளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்கள், தம் பொறுப்பில் தோழர் சே.பி. அவர்களை நோயுற்ற நிலையில் பேணிப் பாதுகாத்து வந்துள்ளார்.
தோழர் பா.செ. அவர்கட்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வீரவணக்கத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
=================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : +91 98419 49462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
Leave a Reply