(தோழர் தியாகு எழுதுகிறார் 163 : ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர்3 தொடர்ச்சி)

ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணமாய் வாழ்ந்த புலவர் 4/4

மரணத் தண்டனைக் கைதியாக இருந்த போதும் சரி, அத்தண்டனை ஆயுள் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகும் சரி, புலவரைத் தொடர்ந்து தனிக் கொட்டடியிலேயே அடைத்து வைத்தனர். 12 ஆண்டுக்கு மேல் பல்வேறு சிறைகளில் போராட்டமும் அடக்குமுறையுமாகக் கழிந்தபின் பத்திரிகையாளர் கன்சியாம் பருதேசு எடுத்துக் கொண்ட முயற்சியால் புலவர் பிணையில் விடுதலை ஆனார். சற்று முன்பின்னாக அவ்வழக்கில் மற்றவர்களும் விடுதலையானார்கள்.

சிறையில் புலவரை நான் கடைசியாகப் பார்த்தது 1974 கடைசியில்தான். 1977இல் தொடங்கி என்னைச் சிறைசிறையாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். சேலம், கோவை, சென்னைச் சிறைகளில் சில ஆண்டுகள் வள்ளுவனோடும் நம்பியோடும் இராசமாணிக்கம் ஆறுமுகத்தோடும் இருந்தேன். ஆனால் புலவரைச் சந்திக்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை. சென்னைச் சிறையில் அவர் ஒரு பகுதியிலும் நான் ஒரு பகுதியிலுமாக இருந்த போதும் சந்தித்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஆனால் புலவரைப் பற்றிய செய்திகள் மற்றவர்கள் வாயிலாக எனக்கு வந்து கொண்டுதான் இருந்தன. அவரும் தமிழரசனும் மேலும் மூன்று தோழர்களும் திருச்சி மத்திய சிறையிலிருந்து சுவரேறித் தப்ப முயன்றதும் சிறைக் காவலர்களால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதும் அப்போது சேலம் சிறையிலிருந்த எனக்கும், பாலன், நம்பி உள்ளிட்ட தோழர்களுக்கும் பெரிதும் கவலையளித்தன.

நானும் தோழர் இலெனினும் கருத்து வேறுபாட்டால் புலவரைப் பிரிந்தோம் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது கருத்துநிலையில் ஏற்பட்டு வந்த மாற்றங்கள் பற்றிய செய்திகளை அக்கறையோடு கவனித்து வந்தோம்.

குறிப்பாகத் தேசிய இனச் சிக்கல் தொடர்பான  பார்வையில் அவரிடமும் எங்களிடமும் ஒரு மாற்றம் மெல்லமெல்ல வந்து கொண்டிருந்தது. சுருங்கச் சொன்னால் வெவ்வேறு முனைகளிலிருந்து புலவரும் நானும் தமிழ்த் தேசியப் புள்ளி நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். இதற்கு முகன்மையான உந்துவிசையாகத் தமிழீழ விடுதலைப் போராட்டம் அமைந்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

புலவர் விடுதலையாகிக் சென்றபின் நான் ஒருமுறை சிறையிலிருந்து அவசர விடுப்பில் வந்த போது சௌந்தர சோழபுரம் சென்று அவரையும் வள்ளுவன் நம்பியையும் பார்த்துவிட்டு வந்தேன். அப்போதும் புலவர் புரட்சியைப் பற்றித்தான் பேசினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக நானும் தோழர்களும் 1990ஆம் ஆண்டு திலீபன் மன்றம் தொடங்கி அதற்காக நான் மா.பொ.க.(சிபிஎம்) கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது புலவரும் நானும் முழுமையாகவே நெருங்கி விட்டோம். ‘திலீபன் மன்றம்’ அமைப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவரும் பேசினார். பிறகு கடந்த 17 ஆண்டுக் காலத்தில் எத்தனையோ முறை சந்தித்துக் கலந்துரையாடினோம். தமிழீழம் தொடர்பாக மட்டுமல்லாமல் தமிழ்த்தேசியம், சாதி ஒழிப்பு தொடர்பாகவும் நாங்கள் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தோம்.

ஏறத்தாழ ஈராண்டு முன்பு அரியலூரில் தமிழகப் பெருவிழா நிகழ்ச்சியில் அவரும் நானும் கலந்து கொண்டு பேசினோம். உடல்நலம் பெரிதும் குன்றிய நிலையிலும் அவர் அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியிலும் நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னிடமும் அவர் பேசியவற்றைக் கேட்டபின், தமிழ்த் தேசிய விடுதலை, தமிழீழ விடுதலை, தமிழகப் புரட்சி, சாதி ஒழிப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு… இப்படி ஒவ்வொன்றிலும் நாங்கள் ஒரே நிலைப்பாட்டை அடைந்திருந்தோம் என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டதால் மகிழ்ச்சி! நிம்மதி!

சென்னையில் ‘மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்’ நூல் வெளியீட்டு விழாவில் நான் சிறை நினைவுகளை மீட்டெடுத்துப் பேசிய போது புலவர் உணர்ச்சிவயப்பட்டதாக வள்ளுவன் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி உடல்நிலை சரிவுற்றுக் கொண்டிருந்த போது இனி நீண்ட நாள் வாழ மாட்டோம் என்பதை அவரே உணர்ந்து விட்டதாகத் தோன்றியது. கண்மூடுவதற்குள் தமிழீழ விடுதலை பெறக் காண வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்.

இதோ புலவரின் வீட்டு வாசலில் வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. “தமிழீழம் விடுதலை பெறக் காண வேண்டும்” என்பதே புலவரின் இறுதி விருப்பமாக இருந்தது என்பதை அவருடன் கடைசி நாட்களில் பழகிய பஞ்சநாதன் உள்ளிட்ட பல தோழர்களும் உறுதி செய்கிறார்கள். வீரவணக்க உரையாற்றும் தோழர்களில் சிலர் புலவரிடத்தும் அவரது அரசியல் கருத்தியல் மற்றும் நடைமுறையிடத்தும் குறை காணவும் தயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், எல்லா மனிதர்களையும் போலவே எல்லாப் புரட்சியாளர்களையும் போலவே புலவரும் நிறைகுறைகள் உடையவரே. அவரிடத்தும்  ஏற்ற இறக்கங்களும் முரண்பாடுகளும் இருக்கவே செய்தன. அவரது வாழ்க்கை வெற்றிகளால் மட்டுமல்ல தோல்விகளாலும் வரையப்பட்ட ஒன்றே.

ஆனால் தொடக்கம் முதல் இறுதி வரை அவருடைய வீரமும் ஈகமும் கேள்விக்கப்பாற்பட்டவை. அவரிடம் ஒருபோதும் காணப்படாதவை  கோழைத்தனமும் தன்னல வேட்கையும். அரசியலுக்கு வரத் துடிக்கும் இளைஞர்கள் இந்தத் தனிச் சிறப்புகளை புலவரிடமிருந்து வரித்துக் கொள்ள வேண்டும்.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ. மணியரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொழிலன், நான் உள்ளிட்ட பதிற்றுக்கணக்கான தோழர்கள் வீரவணக்க உரையாற்றி முடிக்க… புலவரின் இறுதிப் பயணம் அவர் வாழ்ந்த இல்லத்தின் வாசலில் இருந்து புறப்படுகிறது. உச்சி வெயில் சுட்டெரிக்க, அதை விடவும் வெப்பமான புரட்சி முழக்கங்களோடு ஆயிரத்துக்கு மேற்பட்ட தோழர்கள் பின்னால் நடக்கிறார்கள். அவர்களில் பலர் பல நிலைகளில் புலவரோடு முரண்பட்டவர்கள்தாம். ஆனால் அத்தனை பேரும் புலவரின் முரணற்ற புரட்சி ஆர்வத்தைப் போற்றுவதில்  ஒன்றுபட்டவர்கள்.

புலவர் தம் வாழ்க்கையின் மிகக் கொடிய நிகழ்வாகக் கருதிய அந்த வெடி விபத்து – கணேசன், காணியப்பன், சருச்சிலை பலிகொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற அதே தென்னந்தோப்பில் புலவரும் விதைக்கப்படுகிறார். நெஞ்சம் சுமந்த நினைவுகளோடு தோழர்கள் அமைதி வணக்கம் செலுத்துகிறார்கள்.

எல்லார் மனங்களிலும் புலவர் என்ற ஒரு சொல் நிறைகிறது. புலவர் – இலக்கியம் படைத்தாரா? இல்லை, இலக்கணம் படைத்தார்! ஈகத்துக்கும் வீரத்துக்கும் இலக்கணம்! அந்த இலக்கணமாகவே அவர் வாழ்ந்தார்.

புலவரைப் போற்றுதல் என்பது கொண்ட கொள்கைக்காக எதையும் இழக்க அணியமாய் இருத்தல் எனப் பொருள்படும். அடி உதைக்கும் சிறைக் கொடுமைகளுக்கும் பிரிவுத் துயரங்களுக்கும் தனிமைக்கும் பசிபட்டினிக்கும் அஞ்சாது போராடுதல் என்பதாகும்.

தமிழ்த் தேசியத்திற்கும் சாதி ஒழிப்புக்குமான போராட்டக் களத்தில் புலவரின் வீரத்தையும் ஈகத்தையும் கைவிளக்குகளாய் ஏந்தித் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தன் புரட்சிப் பயணத்தைத் தொடரும்.

புலவருக்குச் செவ்வணக்கம்!

புரட்சித் தோழருக்குச் செவ்வணக்கம்! 

2007 வைகாசி (சூன்) – தமிழ்த்தேசம் இதழ்

தொடரும்
தோழர் தியாகு

தாழி மடல் 152