நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றும் உரைக்கும் சட்டமன்றங்களில் ஆளுநர்கள் ஆற்றும் உரைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அது குறித்து வாதங்கள் நடந்து நிறைவேற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்து பேரரசி சார்பில் ஆளுநர்கள் உரையாற்றிய பொழுது நம் அடிமைத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் இருந்துள்ளது. அவர்களை வானத்திலிருந்து வந்தவர்களாக எண்ணி மகிழ்ந்து நன்றி தெரிவித்து உள்ளோம்.

  உண்மையில் குடியரசுத் தலைவர் உரையும் மாநில ஆளுநர்கள் உரைகளும் உரிய அரசுகளால்  எழுதித் தரப்படுவனவே!  அரசுகளின் உரைகள் என்றால் அவை ஆளும்கட்சியின் உரைகள்தாம். அறிக்கையையும் உருவாக்கித் தந்து விட்டு   அவற்றை வாசிப்பதற்காக அல்லது வாசிப்பதாகக் கருதிக் கொள்ளுமாறு அறிவிப்பதற்காக நன்றி தெரிவிக்கும் சடங்கு தேவையில்லை.  அப்படியே வேண்டும் எனக் கருதினால்,  குடியரசுத்தலைவர் உரை /  ஆளுநர் உரை ஏற்புத் தீர்மானம் எனக் கொணர்ந்து  வாதிடலாம்.

  அடிமையாட்சியில் நடைபெற்ற நடைமுறைகளையே பின்பற்றிக் கொண்டு விடுதலை அடைந்து விட்டோம் எனச்  சொல்வதில் பொருளில்லை என்பதை உணரவேண்டும்!

  இத்தகைய பல பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் சட்டங்களையும் நீக்க வேண்டும். இதற்கு இது முதற்படியாக அமையட்டும்!

மாசி 04, தி.பி.2045 / பிப்.16, கி.பி.2014                                                                           feat-default