jayalalaithakalaignar06election_commission_

எதற்குக் குறுக்கு வழிகள்? அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்!

 

 இடைத்தேர்தல் என்பது தேவையற்ற ஒன்று என்பது ஒரு சாரார் எண்ணம். எந்தக் கட்சியின் உறுப்பினர் வெற்றி பெற்றிருந்தாரோ அக்கட்சியே அடுத்த உறுப்பினரை அறிவிக்கலாம் என்பர். ஆனால், கட்சிச்சார்பின்றித் தனித்து நின்று வெற்றிபெற்றவர் தொகுதி என்றால் அத்தொகுதியிடம் காலியாகும் பொழுது யாரைக்கொண்டு அவ்விடத்தை நிரப்புவார்கள். மேலும், வெற்றி பெற்ற கட்சிக்கே அடுத்த உறுப்பினரைத் தெரிவு செய்து அனுப்பும் உரிமை கொடுத்தால் என்ன ஆகும்?

  1. வெற்றி பெற்று உறுப்பினராக உள்ளவரின் உயிருக்கு உலைவைக்கலாம்.
  2. மக்கள் செல்வாக்குள்ள அல்லது நேர்மையான ஒருவரை வெற்றி பெறச் செய்து பின்னர், அவரை விலக வைத்து, (அல்லது முதலில் சொன்னவாறு அவரது உயிரைப் பறித்து) அந்த இடத்தில் கட்சித்தலைமை, தன்னுடைய குடும்பத்தவரை அல்லது தனக்கு நெருக்கமானவரை உறுப்பினராக்கலாம்.

  இவைதான் நம்நாட்டில் நடைபெறும். எனவே, இடைத்தேர்தல் கூடாது என்பது சரியான வாதமன்று. மேலும், இடைத்தேர்தல் ஆளும் கட்சியின் நாடியை அறிவதற்கு உதவுவதாக உள்ளது. ஆனால், இன்றைய நடைமுறையில் மக்களாட்சி என்பது பணத்தின் ஆட்சி என்றபின், அதற்கான வாய்ப்பு மங்கிவிட்டது உண்மைதான். என்றபோதும், ஓரளவேனும் மக்கள் விழிப்படைய தேர்தல் பரப்புரைகள் உதவும்.

  இப்பொழுது வரும் ஆனி 12, / 27.06.15 அன்று சென்னையில் உள்ள இராதாகிருட்டிணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டமன்றத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அ.இ.அ.தி.மு.க.வின் சட்ட மன்ற உறுப்பினர் திரு வெற்றிவேல், தன் கட்சியின் தலைவரான பொதுச்செயலர் செல்வி செ.செயலலிதா போட்டியிடுவதற்காக விலகியதால் ஏற்பட்டது. முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள புரட்சித்தலைவி செயலலிதாவெற்றி முடிவான ஒன்று என்பதே அனைத்துத்தரப்பாரின் கருத்து. ஆனால், இத்தேர்தலில் மிகுதியான வாக்கு வாங்கியவர், மிகுதியான வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்றவர் போன்ற அருந்திறல் புரிந்தவராக விளங்கவே தேர்தல் பரப்புரை நடைபெறுகிறது.

  இத்தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தவிர பிற கட்சிகள் எதிர்த்துப் போட்டியிடவில்லை. பிற கட்சிகள் போட்டியிடாமல் இருக்கலாம். ஆனால், முதன்மையான எதிர்க்கட்சியான தி.மு.க. போட்டியிடாமல் இருந்துள்ளது நன்றன்று.

  முதல்வர் என்ற முறையில் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதற்காக அவரது கட்சி உறுப்பினர் பதவி விலகி நடைபெறும் தேர்தல் இது. எனவே, முதல்வர், போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுவதால் செலவினமும் இடைத்தேர்தல் ஊழலும் இல்லாமல் போகும் என்பதைக் கருத்தில் கொண்டு, கலைஞர்,   இத் தேர்தலைப் புறக்கணித்ததற்கு மாற்றாகப் போட்டியில்லாத் தேர்தல் நடைபெறும் சூழலை உருவாக்கியிருக்கலாம். நீதிக்குத் தலைவணங்கும் வகையில் இப்போதைய தீர்ப்பில் முதல்வர் குற்றமற்றவர் என்பதால் இவ்வாறு செய்திருக்கலாம்.

  அல்லது “தீர்ப்பே தவறு என்பதால் அதை விளக்கும் வகையில் போட்டியிடுகிறோம்” எனக் கூறிக் கட்சி வேட்பாளரை அறிவித்து இருக்கலாம். மிகக் குறைந்த வாக்கு வங்கியை உடைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சி போட்டியிடும் பொழுது 30% வாக்கு வங்கி உள்ளதாகச் சொல்லப்படும் தி.மு.க. போட்டியிட என்ன தயக்கம்? குறைவான வாக்குகள் பெறுவதால் கூட்டணிப் பேரத்திற்கும் பொதுத்தேர்தல் வெற்றிக்கும் இடையூறாய் அமையும் என்பது சரியல்ல. வாக்குகளை விலைக்கு வாங்குவது என்பது பேராயக்கட்சியான காங். தொடங்கி வைத்ததுதான். என்றாலும் அதனை முழு வீச்சில் அறிமுகப்படுத்தியது திருமங்கலம் முறை எனப் பேசும் வகையில் கொண்டுவந்தது தி.மு.க.தான். எனவே, இடைத்தேர்தல் கண்டு அஞ்சுவது இயல்புதான். ஆனால், முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு பிற கட்சிகள் போல் தேர்தலில் ஒதுங்குவது முறையல்ல.

  தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும் மொழிப்போர் முதலான போராட்டங்களிலும் தி.மு.க.வின் பங்கே மிகுதியானது. இருப்பினும் ஆங்கிலவழிக்கல்வி போன்ற தமிழுக்குக்கேடு தரும் செயல்களில் ஈடுபட்டதில் தமிழுணர்வுப் பரப்புநராக விளங்கிய கலைஞரின் பங்களிப்பே அவருக்கு எதிராக உள்ளது. இதைவிடக் கடுமையான எதிர்ப்பிற்குக் காரணம் ஈழ விடுதலையில் இனவுணர்வுக்கு மாறாக நடந்துகொண்டு குடும்ப உணர்வுடன் செயல்பட்டு ஒரு வகையில் பல்லாயிர ஈழத்தமிழர்கள் கொலைக்கு அமைதிச் சான்றாய் இருந்தது. எனவே, அவர் மீதுள்ள கசப்பு மக்களிடம் இன்றும் உள்ளது. எனினும், நேரடியாக இனப்படுகொலையில் ஈடுபட்டவர் அல்லர் என்பதாலும், தன் வீட்டு மக்கள் நலனில் கருத்து செலுத்தி நாட்டு மக்கள் நலனைப் புறக்கணித்தவர் என்பதாலும் துடிப்புடன் தொடங்கிய உண்ணாநோன்புப் போராட்டத்தை நாடகமாக ஆக்கிய சூழலையும் இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்களிப்பைத் தனக்குத் தெரிந்தவரை வெளிப்படுத்தி உலகத்தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு முறை, “வென்றால் அண்ணா வழி, தோற்றால் பெரியார் வழி” என்று சொன்னதை நினைவில் கொண்டு தமிழ்த்தேசிய உணர்வைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, இப்பொழுது தேர்தலைப் புறக்கணித்தாலும் தேர்தல் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி அறவழி அரசியலுக்கு வழி வகுக்க வேண்டும்.

  முதல்வரைப் பொருத்தவரை, மிகுதியான வாக்கு பெறுதல், மிகுதியான வேறுபாட்டில் வாக்கு பெறுதல் என்பன போன்ற அருவினைகளில் கருத்து செலுத்துவதை விட இயல்பான இடைத்தேர்தலுக்கு வழி வகுக்க வேண்டும்.

  சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தவிர, பிற அமைச்சர்கள் தேர்தலில் பங்கேற்காமை,   நாடு முழுவதுமுள்ள கட்சியினரைத் தேர்தல் களத்தில் இறக்காமை, அன்பளிப்புகளால் மக்களைக் கவராமை போன்றவற்றால் நேர்மையான இடைத்தேர்தலுக்கு வழி வகுக்க வேண்டும். இவற்றால் கூடுதல் வாக்குகள் கிடைக்காமல் இருக்கலாம்; ஆனால், கூடுதல் மதிப்பு உண்டாகும். எப்படியும் அவர் வெற்றி பெறுவது உறுதி என்ற நிலையில் மிகுதியான வாக்கு பெறுதல் போன்ற எண்ணத்தால் எதற்குக் குறுக்கு வழிகள்?

  வெற்றி வாய்ப்பு இல்லை என அறிந்தும் தன் அரசியல் கடமையைச் செய்யும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சிக்கும் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கும் பாராட்டுகள்!

 C.Makenthiran01

இதழரை

 அகரமுதல 82, வைகாசி 24, 2046 / சூன் 07, 2015

feat-default