இரு நாட்டு மீனவர் பேச்சு – இனப்படுகொலைகளை மறைக்கும் திரை!
இருவர் அல்லது இரு குழுவினர் அல்லது இரு பிரிவினர் அல்லது இரு தரப்பாரிடையே சிக்கலோ மோதலோ எழும் பொழுது அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் சொல்லாடல் நிகழ்த்துவது முறையே. இப்பொழுது சிங்கள மீனவர்களிடையேயும் தமிழக மீனவர்களிடையேயும் ஏற்படுத்தப்படும் பேச்சு அவ்வாறு, எவ்வாறு அமையும்?
இரு நாட்டு மீனவர்களும் தத்தம் நாட்டு அறிவுரைகளையும் மீறித் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டனரா? ஆதலின், அவர்களிடையே ஒற்றுமைப்படுத்தும் பேச்சு தேவைப்படுகிறதா?
ஆயிரத்தைத் தொடும் அளவு தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டது சிங்கள மீனவர்களாலா?
பல்லாயிரக்கணக்கானவர்கள் உறுப்பு இழப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் ஆளானது சிங்கள மீனவர்களாலா?
மீனவர்களின் மீன்பிடிப்புப் பேராசையால்தான் இத்துயரங்கள் நிகழ்கின்றனவா?
இல்லை! இல்லை! இல்லை! என்று உலகிற்கே தெரியும்.
தமிழக மீனவர்களைக் கொல்ல வில்லை என்று சிங்களக்கொடுங்கோலரசு சொல்லி வருகிறது அல்லவா? அதை உண்மை என்று போலியாகக் காட்டுவதற்காகவே இந்த நாடகம்!
தங்களைத்தாங்களே தமிழக மீனவர்கள் சித்திரவதை செய்து கொண்டும் துப்பாக்கிகளை வெடிக்க வைத்தும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானதால் இரக்கப்பட்ட சிங்கள அரசு, பரிவுகொண்டு காரணம் அறிந்து நீக்குவதற்காக இப்பேச்சு என்று நாம் நம்ப வேண்டுமாம்!
தமிழர்கள் மீதும் தமிழக மீனவர்கள் மீதும் உண்மையிலேயே சிங்களக் கொடுங்கோலரசிற்கு மதிப்பும் அன்பும் உள்ளதால் இந்த ஏற்பாடு செய்துள்ளதாக நம்ப வேண்டுமாம்!
சிங்கள இனப்படுகொலைகளுக்கு இந்தியக் கொல்லரசு உதவ வில்லை; உண்மையிலேயே நல்லெண்ணச் செயல்களுக்குத்தான் உதவி வருகிறது; என்றெல்லாம் உலக மக்கள் நம்ப வேண்டுமாம்!
ஒருவனின் மொழி ஆயுதமாக இருக்கும் பொழுது அவன் எதிராக இருப்பவனும் ஆயுத மொழியைப் பேசினால்தானே அவனுக்குப் புரியும். ஆனால், இந்தியக் கொல்லரசு தம் நாட்டு மீனவர்களைக் காப்பதற்காக ஆயுத மொழி கொண்டு பேசவில்லையே! எப்படி அதனால் பேச இயலும்? எதிரிக்குப் பின்னால் இருந்து குரல் கொடுப்பதும் இதுதானே!
கேரளமீனவர் இருவர், (பிப்பிரவரி 15,2012 அன்று) இத்தாலியக் கப்பல் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதற்காக – இத்தாலியக் கடல் எல்லையில் இந்நிகழ்வு நடந்ததாக இத்தாலிய அரசு கூறினாலும் – இந்தியச்சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள அரசும் துணிந்து இத்தாலிக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் அவர்கள் மலையாளிகள்! நாமோ இந்தியர்கள்! எனவே, அவர்களுக்கொரு நீதி! நமக்கொரு நீதி! எனவேதான், கேரள இருவருக்காகக் கடும் நடவடிக்கையை எடுக்கும் இந்திய அரசு தன்னுடைய தமிழின எதிர்ப் போக்கை உறுதிப்படுத்தும் வகையில் சிங்களக் கொடுங்கோலரசிற்கு மேலும் படையுதவி அளித்து வருகிறதே தவிர, வேறு நடவடிக்கை எடுக்க வில்லை.
இப்பொழுது, உலக நாடுகள் முன்னர் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் சூழலில் இருந்து தப்பிப்பதற்காகச் சிங்களக் கொடுங்கோலரசும் நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ் நாட்டில் சந்திப்பதற்காக இந்தியக் கொல்லரசும் இணைந்து நாடகமாடுகின்றன. எனவேதான், இதுவரை நடைபெற்ற அட்டூழியங்களுக்கெல்லாம் காரணம் மீனவர்களே யன்றி, வேறு எந்த அரசும் அல்ல என்று காட்ட முயல்வதற்காக இரு நாட்டு மீனவர் சந்திப்பு அரங்கேறுகிறது.
இந்நாடகமும் சிறிது காலத்திற்குத்தான்! பன்னாட்டு அவையில் சிங்களத்திற்கு எதிரான போக்கைத் திசை திரு்ப்பிய பின்பும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும் இதற்குத் தேவை இராது. தமிழக மீனவர்கள் ஒற்றுமைப்பேச்சிற்கு ஒத்துழைக்கவில்லை எனப் பழி போட்டுவிட்டு வழக்கம்போல் சிங்களக் கொடுங்கோலரசு ஆயுத மொழி பேசப் புறப்பட்டுவிடும். அதற்கான உதவியையும் இந்திய அரசு செய்யும்! ‘மக்களே போல்வர் கயவர்’, ‘தேவரனையர் கயவர்’ என்னும் குறளடிகளுக்குச் சான்றானவர்கள் சிங்கள அரசும் இந்திய அரசும்தான்.
‘கரும்பு போல் கொல்லப் பயன்படும் கீழ்’ என்னும் தெய்வப்புலவர் மெய்யுரையை உணர்ந்து தமிழக அரசு நடந்து கொண்டால்தான் பயன் விளையும். தமிழக மீனவர்களை விடுதலை செய்தால்தான் பேச்சு என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், அதனால் விளையும் சிறு பயன் மட்டும் போதாது என்பதை உணர்ந்திருப்பார். எனவே, மீனவர்காப்புக் கடலணி ஒன்றை உருவாக்க வேண்டும். தமிழகக் கடலோரங்களில் தமிழக மீனவர்களுக்கு எதிராக ஆயுதம் மூலம் பேசுவோரிடம் இக்கடலணியும் ஆயுதம் மூலம் பேசும் என்பதை அறிவிக்க வேண்டும். இதுவரை கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கும் உறுப்புகள் உடைமை இழந்தவர்களுக்கும் தக்க இழப்பீடுகளைச் சிங்களக் கொடுங்கோலரசிடம் பெறுவதற்கு நம் நாட்டு நீதி மன்றங்களையும் உலக நீதிமன்றத்தையும் நாட வேண்டும்! இந்தியக் கொல்லரசிடமிருந்தும் இழப்பீடுகள் பெறுவதற்கு வழக்கு தொடுத்து வாகை சூட வேண்டும்!
‘இருநாட்டு மீனவர் பேச்சு’ என்ற நாடகம் போதும்!
இனி அரங்கறே வேண்டியது கொடுங்கோலர்கள் தூக்குமேடையில் ஏற்றப்படுவதே!
கொலைகாரக் கூட்டாளிகள் அரசுமேடைகளில் இருந்து தூக்கி எறியப்படுவதே!
அந்நாள் விரைவில் வர நாம் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம்!
பங்குனி 2, 2045 / மார்ச்சு 16, 2014
Leave a Reply