தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் நினைவு நாள் ஆவணி 18 / செட்டம்பர் 3. இலக்குவனார், தம் வாணாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழ்க்காப்பிற்காகவும் பல போராட்டக் களங்களைச் சந்தித்தவர். தமிழ்க்காப்பு என்பது பிற மொழிகளின் ஆதிக்ககத்திலிருந்தும் திணிப்புகளிலிருந்தும் தமிழைக் காக்கப் போராடியதுமாகும்.

    “தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா? வீட்டளவிலும் பல வேற்று மொழிச் சொற்களின் கலப்பால் ஆகிய கலவை மொழிதான் இடம்பெறும். அவ்வாறாயின் தமிழ் மெல்ல இனிச் சாகும் என்றுதான் கொள்ள வேண்டும். தமிழர் இருக்கத் தமிழ் மறைந்தது என்றால் அதனினும் நாணத்தக்க இழிவு வேறொன்றும் இன்று. ” என்று வருந்தி நொந்தவர் இலக்குவனார்.

    அவரது முயற்சிகளால் ஆங்கிலத் திணிப்பு மெல்ல மெல்ல அகன்று   வந்தது. இந்தி எதிர்ப்புப் போரைத் தலைமை தாங்கி நடத்தியதால் இந்தித் திணிப்பு நிறுத்தப்பட்டது. அதற்குக் காரணமான பேராயக்கட்சியின் (காங்கிரசுக் கட்சியின்) ஆட்சி அகன்றது. அதன் பின் இன்று வரை அதனால் ஆட்சிக்கட்டிலில் மீண்டும் ஏற இயலவில்லை. அதைப்போல்  ஆங்கிலத்திணிப்பால் ஆட்சியை இழக்க ஆள்வோர் எண்ணுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தி எதிர்ப்புப் படைத்தலைவர் இலக்குவனார் நினைவு நாளில் இது குறித்து எண்ணிப் பார்ப்போம்.

    திருக்குறள் முற்றோதல், தமிழ்க் கூடல், தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம், தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கம், அதன் வாயிலாக அயல்நாடு-வெளி மாநிலத் தமிழர்களுக்குத் தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், சனவரித் திங்கள் 12ஆம் நாள் அயலகத் தமிழர் நாள் விழாவாகக் கொண்டாடுதல், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை உருவாக்கம், அத்துறைக்கெனத் தனி அமைச்சரை அமர்த்தியமை என இன்றைய ஆட்சியாளர்களின் தமிழ்நலப்பணிகளை நாம் மிகுதியாகச் சொல்லலாம்.

    ஆனால், ஓர் அண்டா பாலில் ஒரு செம்பு நஞ்சாக ஆங்கிலத்தை ஆட்சியளர்கள் வலிந்து ஊற்றுகிறார்களே! கொடுமையிலும் கொடுமையல்லவா இது!

    1915 இல் ஆத்திரேலியப் பெண் மோலி பிங்கைக் காதலித்து மணந்து கொண்ட. புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான், இருமுறை மண விலக்கு பெற்ற அமெரிக்காவைச் சார்ந்த வாலிசு சிம்புசன் என்ற பெண் மீதான காதல் வயப்பட்ட  எட்டாம் சியார்சு, மேகன் என்ற பெண் மீது காதல் கொண்ட பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லசின் மகன் இளவரசர் ஆரி, இங்கிலாந்து அரசி மீது காதல் கொண்ட கிரேக்க மற்றும் தென்மார்க்கு அரச பட்டங்களை உடைய பிலிப்பு, (இ)யோசிகி குரோடா என்ற எளிய மனிதரின் மீதான காதல் கொண்ட சப்பானின் 125-ஆவது பேரரசர் அகிஃகிட்டோவின் மகள் சயாகோ, தன் கல்லூரியில் உடன் பயின்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த  கீ கோமுரோ மீது காதல் கொண்ட பேரரசர் அகிஃகிட்டோவின் பேத்தியான மகோ ஆகியோர் காதலால் அரசபட்டத்தையும் பதவியையும் இழந்தார்கள். இவர்கள் வரிசையில் வரலாற்றில் இடம் பெறுவதற்காக ஆங்கிலம் மீது காதல் கொண்டு ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்களா? புரியவில்லையே!

    அரசுப்பணியாளர்களின் சீருடைகளில் துறை முத்திரை ஆங்கிலத்தில், துறைப்பெயர்கள் ஆங்கிலத்தில், பணியாளர்கள் பெயர்கள் ஆங்கிலத்தில், பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்தில், அரசாணைகள் ஆங்கிலத்தில், பணியமர்த்த ஆணைகள் ஆங்கிலத்தில் பதவி உயர்வு ஆணைகள் ஆங்கிலத்தில், இட மாற்ற ஆணைகள் ஆங்கிலத்தில், குற்றச்சாட்டுகள் ஆங்கிலத்தில், ஒப்பந்தங்கள் ஆங்கிலத்தில் என எதிலும் எங்கும் ஆங்கிலம் ஆங்கிலம் ஆங்கிலம்தான்! நாம் கூட ஆங்கிலத்தின் மீது காதல் உள்ளது என எண்ணினோம்.  ஆனால் ஆட்சியாளர்க்கு  ஆங்கில வெறியே உள்ளது. அரசு என்று சொல்லாமல் ஆட்சியாளர் எனச் சொல்வதன் காரணம், ஆட்சியாளர் கடிவாளம் போட்டால் அரசு செவ்விய பாதையில் செல்லும்.

    தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து தமிழில் முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கும் பொழுது அதை ஆங்கிலத்தில் மாற்ற வேண்டிய காரணம் என்ன? ஏதும் ஐயம் ஏற்பட்டிருப்பின் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலேயே கேட்டிருக்கலாம். அல்லது த.வ.து. கட்டுப்பாட்டில் உள்ள மொழிபெயர்ப்புத் துறையில் கேட்டிருக்கலாம். அப்படி எதுவும் ஐயம் எழாதபோது அதற்கான தேவையும் இல்லை யல்லவா? தமிழ் வளர்ச்சித்துறையின் ஆணையைத் தமிழில் பிறப்பிக்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாத அளவிற்கு ஆங்கில வெறி கண்களை மறைத்து விட்டது.  ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே தமிழ் மீது காதல் இருப்பின் இதற்குக் காரணமானவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இங்கே தமிழ் வளர்ச்சித்துறையில் தொடர்ந்து நேரும் கொடுமையையும் சுட்டிக் காட்ட வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பது இத் தொடர் கொடுமைதான். அஃது என்னவென்றால் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்குத் தமிழில் புலமை தேவையில்லை எனக் கருதுவதுதான்.

    இந்த விதியின் படி  தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பணியிடத்தில் நேரடியாகப் பணியமர்த்தப்படுபவர்கள், இளங்கலையிலும் முதுகலையிலும் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏன் இளங்கலையிலும் என்று கூறுகிறார்கள் என்றால், வேறு துறையில் இளங்கலை அல்லது இளம்அறிவியல் பட்டம் பெற்றுத் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றால் அவர்கள் இப்பதவிக்குத் தேவையில்லை என்பதுதான். சிறப்பு விதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதைப் பாராட்டலாம். ஆனால் அமைச்சுப் பணியாளர்கள் ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. ஆனால், அப்பட்டத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் – அஃதாவது, முதல் பிரிவு, இரண்டாம் பிரிவு, மூன்றாம் பிரிவு என்பனவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவில் – தமிழ் ஒரு பாடமாக இருந்தால் போதுமானது. ஏனெனில் அமைச்சுப் பணியாளர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்துப் பணியாற்றினாலே தமிழ் மேதைகளாகி விடுவார்கள்! எனவே, தமிழில் முதுகலைப்பட்டம் தேவையில்லை என முடிவு செய்து விட்டார்கள். இத்தகைய தவறான போக்கால்தான் அலுவலகக் கண்காணிப்பாளர்கள் தாங்கள் ஒரு பிரிவில் தமிழில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறும் வரை பதவிகள் நிரப்பப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். இது ஒரு தொடர்  நிகழ்வே.

    1990 இல் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி  முதல்வராக இருக்கும் பொழுது தமிழில் சிறப்பான தேர்ச்சி பெற்றவர்களே தமிழ்வளர்ச்சித்துறை அதிகாரிகளாக இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே கலைஞர் முனைவர் பட்டம் பெற்றவர்களைத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்களாக அமர்த்த முடிவு செய்தார். ஆனால் அமைச்சுப் பணியாளர்கள் தவறான தகவல்களைத் தந்து இதற்குக் கடும் எதிர்ப்பு தந்தனர். எனினும் கலைஞர் தமிழாய்வு அலுவலர் என உதவி இயக்குநர் பணி நிலைக்கு ஒரு படி கீழாகப் பதவிகளை உருவாக்கி முனைவர் பட்டம் பெற்றவர்களை (அல்லது இள முனைவர் பட்டம் பெற்றவர்களை) அமர்த்தினார். அடுத்து அதிமுக ஆட்சி வந்ததும் அமைச்சுப் பணியாளர்கள் இவர்கள் யாவரும் திமுகவினர் என்று சொல்லிப் பல தவறான தகவல்களை முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இவர்களே மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களைத் தி.மு.க.வினராகக் காட்டிக் கொண்டு, கலலைஞர் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் தகுதியற்றவர் என்பன போல் கூறினர். இவர்கள் புகழ் மாலையில் மயங்கிய  அப்போதைய அமைச்சர் முனைவர் மு.தமிழ்க்குடிமகன் நேரடி நியமனம், துறைக் கண்காணிப்பாளர்களில் இருந்து நியமனம் என இரு பிரிவிற்கும் தனித்தனி 50%  அளிப்பதாக உறுதி செய்தார்.

    கலைஞர் பின்னர், தமிழில் முனைவர் பட்டத் தேர்ச்சி பெற்றிருந்த தமிழாய்வு அலுவலர்களை உதவி இயக்கநர்களாகவே உயர்த்தி ஆணை வழங்கினார்.

    கலைஞர் ஆட்சியில் இதுபோன்ற பதவி ஆணை குறித்த நினைவும் வருகிறது. 1990 இல் இவ்வாறு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்களுக்கான பதவி அமர்த்த ஆணை பிறப்பித்தனர். அஃது ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அத்துறைச் செயலர் முனைவர் ஒளவை நடராசன் கைகளுக்கு வந்தது. அவர் அதனை நிறுத்தித் தமிழில்தான் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றார். செயலக ஊழியர்கள் அவ்வாறு தமிழில் பிறப்பிக்கத் தடுமாறினர். நான் வேறு அலுவலாக ஒளைவ நடராசன் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன். “தமிழ் வளர்ச்சி அலுவலர்கள் ஆ்ணைகளைக்கூட ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறார்கள். இவர்களை என்ன செய்வது?” என்றவர், “தமிழ் வளர்ச்சி இயக்ககத்திலிருந்து கண்காணிப்பாளர் ஒருவர் வந்து அதனைத் தமிழ்ப்படுத்திக் கொண்டுள்ளார். இயந்திர மொழிபெயர்ப்பு போல் உள்ளது. இயல்பான நடையில் இல்லை. தமிழில் தர இயலுமா” என்றார். எனக்கான பதவி அமர்த்தமும் அதில் உள்ளதால், எனக்கான ஆணையை நானே எழுதும் நல்வாய்ப்பு கிட்டும் பொழுது மறுப்பேனா என்று சொல்லி அவ்வாணையைத் தமிழில் வடித்துத் தந்தேன். தமிழாய்ந்த தமிழறிஞர் செயலராக இருந்தமையால் இது நடந்தது. கலைஞர் ஆட்சியில் அந்த உணர்வும் இருந்துள்ளது. அவ்ரது மகனார் ஆட்சியிலும் செயலக அதிகாரிகளுக்கு இவ்வுணர்வு வர வேண்டும்.

    காலந்தோறும் இவ்வாறு நிகழும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க த.வ.துறைக் கண்காணிப்பாளர்களும்  நேரடி நியமனம் போன்றே இளங்கலை, முதுகலையில் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கலைஞரின் கனவை நனவாக்கும் வகையில் விதியை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சிறப்பாகச் செயற்படும்.

    இந்த ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அத்தகைய விழைவு இல்லையேல் ஆங்கில வெறியைத் தொடரட்டும்! ஆட்சி நிலைக்க விரும்பினால், உண்மையான தமிழ் ஆட்சியை நடத்தட்டும்!

    ஆங்கிலத் திணிப்பு அகலட்டும்!      அரசு நிலைக்கட்டும்!

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பா ரிலானுங் கெடும்

     (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௮ – 448)