வெருளி நோய்கள் 1496-1500 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1491-1495 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1496-1500
- நீர்ப்பத வெருளி-Hygrophobia/Turistaphobia
நீர், நீர்ம வகைகள், நீர்ப்பதம், நீர்க்கசிவு முதலானவற்றின் மீது ஏற்படும் அளவு கடந்த பேரச்சம் நீர்ப்பத வெருளி.
தூய்மையற்ற தண்ணீர் தொடர்பான மாசுநீர் வெருளி(Turistaphobia) எனத் தனியாகக் குறிக்கப் பெறுகிறது. நீர்ப்பத வெருளியில் இணைத்துக் குறித்துள்ளேன்.
தண்ணீர் மீது மட்டுமல்லாமல் மது முதலான நீர்ம வகைகளின் மீதும் ஏற்படும் மிகைப் பேரச்சம்.
தூய்மையற்ற நீரினால் நலக்குறைவு ஏற்படும், உடல் நலம் கெடும், இவற்றால் வேலைகள் பாதிக்கும் என்பன போன்றவற்றில் வரும் பேரச்சங்கள் இதில் அடங்கும்.
hygro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் ஈரப்பதம்.
[விக்கி வெருளியில் Ygrophobia(the fear of liquid) என உள்ளது. இதனைத் தனிப் பிரிவாக எண்ணி நானும் தனியாகக் குறித்திருந்தேன். ஆனால், Hygrophobia(the fear of liquids) என்பதில் முதல் எழுத்து எச்(H) விடுபட்டுப் பிழை நேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். எனவே, அதனை நீக்கி விட்டேன்.]
00
- நீர்ப் பல்லி மூ மா வெருளி – Mosasaurphobia நீர்ப் பல்லி மூ மா குறித்த வரம்பற்ற பேரச்சம் நீர்ப் பல்லி மூ மா வெருளி.
மா என்பது விலங்கினத்தைக் குறிப்பதால் மூத்த முதல் உயிரினத்தை மூ மா எனலாம். இது பலவகைப்படும். நீர்ப்பல்லி போல உள்ள மூ மா நீர்ப் பல்லி மூமா எனப்படுகிறது.
நீர்ப்பல்லி மூமா படத்தைப் பார்த்தாலோ அது குறித்த செய்திகளைப் படித்தாலோ திரைக்காட்சியாகக் கண்டாலோ மூ மா எலும்புக் கூடுகள் அருங்காட்சியகம் சென்றாலோ பெரிதும் அஞ்சுவர். வேறு சில மூ மா வெருளி உள்ளவர்களுக்கு நீர்ப்பல்லி மூ மா வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00 - நீர் யானை வெருளி – Hippopotamophobia
நீர் யானை குறித்த வரம்பற்ற பேரச்சம் நீர் யானை வெருளி.
நீர் யானைகள் (Hippopotamus) இயற்கையிலேயே மிகவும் உக்கிரமமான, வலிமை வாய்ந்த விலங்குகள். தங்கள் எல்லை குறித்த விழிப்புணர்வு மிக்கவை. எனவே, தங்களின் குட்டிகள் அருகே அல்லது எல்லைக்குள் பிற உயிரினங்கள் வந்தால் கடுமையாகத் தாக்குகின்றன. எனவே, இயல்பாகவே அவற்றின் மீதான அச்சம் உலகளவில் நிலவுகிறது. ஏறத்தாழ 1500-3200 அயிரைக்கா (கிலோ) எடை கொண்டவை. அவற்றின் வாய் மிக அகலமாக திறக்கக்கூடியது. அதில் ஏறத்தாழ 50 சிறுகோல்(செ.மீ.) நீளம் வரை வளரக்கூடிய நீண்ட கோரைப்பற்களைக் கொண்டுள்ளன. நிலத்திலும் மணிக்கு 30 அயிரைக்கா(கி.மீ.) வேகத்திற்கும் அதிகமாக ஓடுவன.
எனவே பார்ப்பவர்க்கு அச்சம் வருகின்றது. இருப்பினும் சிலர் படத்தில் பார்த்தாலோ தொலைக்காட்சியில் அல்லது திரைக்காட்சியில் பார்த்தாலோ அவை பற்றிய செய்திகளைக் கேட்டாலோ பகுத்தறிவிற்குப்பொருந்தாத பேரச்சம் கொள்கின்றனர்.
“hippos” என்னும் கிரக்கச் சொல்லின் பொருள் குதிரை. எனினும் நீண்ட, பெரிய, வலிய உயிரினங்களையோ சொற்களையோ குறிக்க இச்சொல் பயன்படுகிறது. Hippopotamus என்பது நீர் யானை எனப்படுகிறது.
00
- நீர் மூழ்கி வெருளி – Qonshungphobia
நீர் மூழ்கிக் கப்பல்(submarine) குறித்த அளவு கடந்த பேரச்சம் நீர் மூழ்கி வெருளி.
வெளி உலகம் தெரியாமையால் நீருக்குள் மூழ்கிவிடுவோமோ, திமிங்கிலம் போன்ற வலிமையான நீருயிரிகளால் அழிவு ஏற்படுமோ, போதிய காற்று கிடைக்குமோ என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர். நீர்மூழ்கிக்கப்பல் நேர்ச்சிகள் குறித்து அறிந்துள்ளவர்களும் அவற்றால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
- நீர் வெருளி – Aquaphobia / Waterphobia
தண்ணீரைக் கண்டு தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்வது நீர் வெருளி.
கடல், ஆறு,ஏரி, நீர்நிலைகள், நீருள்ள குளியல் தொட்டி என எதுவாக இருந்தாலும் அதனால் அச்சுறுத்தல் வருவதாகக் கற்பனை செய்து கொண்டு பேரச்சம் கொள்வர்.
சிலருக்குத் தண்ணீரில் கண்டம் இருப்பதாகக் கணியர்(சோதிடர்) கூறியிருந்தால் தண்ணீரைக் கண்டாலே மிகுபேரச்சம் கொள்வர்; நீர்நிலைகளில் மேற்கொள்ளும் படகுப்பயணம், நீச்சல் ஆகியவற்றின் மீதும் பேரச்சம் உண்டாகிறது
புலவர் ஐயூர் முடவனார்
நீர்மிகின் சிறையு மில்லை
என்கிறார். அஃதாவது நீர் மிகுந்தால் அதைத் தடுத்துக் காப்பதற்கான அரண் எதுவுமில்லை என்கிறார். எனவே நீர்ப்பெருக்கு குறித்த பேரச்சம் வருவது இயற்கைதான்.
நாய்க்கடியின் பொழுது வரும் சல வெருளி(Hydrophobia)யிலிருந்து மாறுபட்டது இது.
இலத்தீனிலிருந்து இடைக்கால ஆங்கிலத்திற்கு வந்த சொல்லான Aqua என்பதற்கு நீர் எனப்பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply