ஒட்டடார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

கொட்டான் எனப்படுதல் நன்று.

inida01 

  இந்தியக் கூட்டரசு பதினான்கு மொழிகளையும் தேசிய மொழிகளாக ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசியல் சட்டம் கூறுகின்றது. எல்லா மாநிலங்களும் இணைந்துள்ள கூட்டரசில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்தல் வேண்டும். கூட்டரசுப் பாராளுமன்றில் அவைகளைப் பயன்படுத்துவதற்குத் தடை இருத்தலாகாது. கூட்டரசுப் பாராளுமன்றில் தேசிய மொழிகள் என ஒப்புக் கொள்ளப்பட்டவற்றுள், எதில் வேண்டுமானாலும் யாரும் உரை நிகழ்த்தலாம் எனும் உரிமை ஒப்புக் கொள்ளப்படல் வேண்டும். இவ்வுரிமை மறுக்கப்பட்டால் கூட்டரசு என்பது பொருளற்று விடும்.

   இந்தியக் கூட்டரசுப் பாராளுமன்றில் குடியரசுத் தலைவர் இந்தியிலோ ஆங்கிலத்திலோதான் உரைநிகழ்த்த இயலும். அவருடைய அன்னைமொழியாம் தெலுங்கில் கூட உரை நிகழ்த்த உரிமையில்லையென உரைத்துவிட்டனர். ஆங்கிலமோ அயல்மொழி; இன்னும் சில ஆண்டுகளில் அகன்றுவிடும். பின்னர் இந்தி ஒன்றில்தான் அங்கு உரையாடல் முடியும் என்ற நிலை ஏற்படுகின்றது. அங்ஞனமாயின் ஏனைய தேசிய மொழிகளில் நிலை என்ன? கூட்டரசுப் பாராளுமன்றில் கூறும் உரிமையில்லாத மொழியினர் கூடி வாழ்வது எற்றுக்கு என நினைப்பதில் தவறு என்ன? மொழியுரிமைக்காக இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிளர்ச்சி செய்வது பொருளற்றது எனக் கூறுவது பொருந்தாது எனப் புலப்படுகின்றதே.

 

  சின்னச்சாமி எனும் இளஞ்செம்மல் செந்தமிழ் காக்கச் செந்தீ மூழ்கிச் செத்து முடிந்ததும் அறியாமையால் நிகழ்ந்தது எனப் புறக்கணிப்பதற்கு இல்லையன்றோ?

 

  பரத கண்டத்தில் எல்லா மாநிலத்தவரும் கூடி வாழ வேண்டும்; கூடி வாழும் கூட்டரசு என்றும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அக்கூட்டரசுமன்றில் எல்லா மாநில மொழிகட்கும் சம உரிமை அளிக்கப்படல் வேண்டும். ஒரு மொழிக்கே முதன்மையளித்து ஏனையவற்றிற்கு அதன் பின்னிற்கும் தாழ்நிலை கொடுப்பின், அம்மொழிகட்கு, உரியாரிடம் ஒற்றுமையுணர்வு தோன்றுவது அரிதாகிவிடும். கூட்டரசு ஆட்சி மொழியாம் இந்தியே உயர்ந்தது; ஏனைய தாழ்ந்தன எனும் நிலை எளிதில் ஏற்பட்டுவிடும். உயர்வும் தாழ்வும் ஒற்றுமையுறுவது எங்ஙனம்?

  ஆதலின் எல்லா மொழியாளரும் ஒன்று கூடி ஒற்றுமையுணர்வுடன் வாழ வேண்டுமென்றால், எல்லாத் தேசிய மொழிகட்கும் ஆட்சிமன்றில் சமநிலை அளிக்கப்படவேண்டும். பாரதப் பாராளுமன்றில் அனைத்துத் தேசிய மொழிகளையும் விரும்புவோர் விரும்புங்கால் பயன்படுத்துவதற்குத் தடையிருத்தல் கூடாது. ஒற்றுமையின் பெயரால் உரிமையையிழக்கச் செய்வது உண்மைக் கூட்டரசை நிலைக்கச் செய்யாது என்பதை உணர்ந்து ஒருமைப்பாடு வேண்டுவோர் செயல்புரிவார்களாக.

–          தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

–          குறள்நெறி: மாசி 03, 1995 / 15.02.1964