தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள் !

தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நடிகர் விசய் அரசியலில் முழுமையாக ஈடுபடும் வண்ணம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தமிழ் நாட்டின் நலன், தமிழ் மக்கள் முன்னேற்றம், தமிழ்மொழி வளர்ச்சி முதலியவற்றில்  கருத்து செலுத்தி வாகை சூட வாழ்த்துகிறோம்.

இவர் கட்சியைத் தொடங்குகிறார் எனச் செய்திகள் வந்த பொழுதே இவர் ‘விசய்’ என்று இல்லாமல் வெற்றி என்றோ வாகை என்றோ வரும் வகையில் பெயர் சூட்டினால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. ஆனால், கிரந்த மயக்கம் கொண்ட உலகில் அதற்கான வாய்ப்பு இருக்காது என்றும் மறு எண்ணம் வந்தது. ஆனால், அடுத்தவர்கள் கூறியோ தானாகச் சிந்தித்தோ வெற்றி என்றே தமிழில் சூட்டியுள்ளார். எனவே மனமுவந்து பாராட்டுகிறோம்.

தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரில் வெற்றி, கழகம் ஆகிய சொற்கள் இடையே ஒற்று மிகுந்து வர வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் ஆகிவிடக்கூடாது. எனவே, தொடக்கத்திலேயே இதனைத் திருத்திப் பயன்படுத்த வேண்டுகிறோம்.  முகவரியைத் தமிழிலேயே குறித்துக் கட்சியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

யாஃகூ,  வெபுதுனியா, ஃபோன் பே, அமுதசுரபி, தினபூமி முதலிய பல நிறுவனங்களில் அல்லது ஊடகங்களில் தமிழ் ஆசிரியர் / பிழை திருத்துநர் அல்லது வழிநடத்துநர், வல்லமை நிறுவனத்தின் நிறுவுநர்-முன்னாள் ஆசிரியர் முதலிய பொறுப்புகளில் இருந்த முனைவர் அண்ணா கண்ணன் காணொளி மூலம் தமிழ் வகுப்பு நடத்தி வருகிறார். இவர்,  கட்சி அறிவிப்பில் 65 பிழைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இக்காணுரையைப் பார்த்துத் திருத்திய வரைவை அலுவலகப் பதிவாகவும் இனி அனுப்புவதற்குரியதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுகிறோம். இவ்வறிவிப்பில் மேலும் பல பிழைகள் உள்ளன. இலக்கணப்பபடி நிருவாகம் என்றுதான் வர வேண்டும்; சமூகச் சேவை என வரவேண்டும். (குமுகத் தொண்டு எனலாம்.) நிதர்சனம், நிவாரணம் முதலிய பல தமிழல்லாச் சொற்கள் உள்ளன. பிற பிழைகளையும் அறிந்து திருத்திக் கொள்ள வேண்டுகிறோம்.  தமிழுணர்வு மிக்கத் தமிழறிந்த ஒருவரை அமர்த்திக் கொண்டு பிழையற்ற அறிக்கைகள், செவ்விகள் வர இயன்றவரையில் சிறப்பாகச் செயற்பட வேண்டும். மரு.இராமதாசு இவ்வாறே நல்ல தமிழைப் பின்பற்றித் தமிழோசை என்னும் இதழையும் நடத்தினார். தொல்.திருமா., தமிழ்த் தேசியர் சீமான் முதலானோர் தமிழுணர்விற்கு முதன்மை அளித்து வருகின்றனர். இவர்களைப்போல், இவர்களையும் விஞ்சும் வகையில் நற்றமிழ் உணர்வுடன் செயற்படவும் வேண்டுகிறோம்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே

கெடுக்கும் தகைமை யவர்

(திருவள்ளுவர், திருக்குறள் 447)

ஆதலின் நல்லறிவு கொண்டோர் அறிவுரைகளுக்குச் செவி மடுத்துக் கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுகிறோம். அதே நேரம் வலைப்பூவர் ஒருவர் தலைப்பிலேயே வீழ்ச்சியடைந்த கட்சி எனக் கிண்டலடித்துள்ளார். தமிழகத்திற்கான, தமிழ் நாட்டு மக்களுக்கான வெற்றியை ஈட்டித் தரும் இலக்கை உடையது எனத் தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. இதனை இலக்காகக் கொண்டு திட்டமிட்டுச் செயற்படுத்தி வெற்றி காணலாம். எனவே, அவர் எண்ணியவாறு பெயர் அமையவில்லை எனக் கூறும் இத்தகையோர் கருத்துகளைப் புறக்கணிக்க வேண்டுகிறோம்.

சனாதனத்திற்கு எதிரான “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் உலக நெறியாம் குறள் நெறியைக் கட்சியின் குறிக்கோளுரையாக வைத்துள்ளதற்குப் பாராட்டுகள். அதுபோல் “எண்ணித் துணிக கருமம்” என்பது வள்ளுவன் வாக்கு என அறிக்கையிலும் திருக்குறளைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கும் பாராட்டு.

கட்சியின் கொள்கைகள் தொடர்பான அறிக்கைகள் குறித்து ஒன்றும் கூறுவதற்கில்லை. ஏனெனில், கட்சி முழக்கங்கள், தேர்தல் அறிக்கைகள் அடிப்படையில் நாம் பாராட்டிச் சொல்வது சிறப்பாக இருக்காது. மக்களைக் கவருவதற்காக எல்லாரும் சொல்லக் கூடியவைதாம். செயற்பாடு ஒன்றே பாராட்டிற்குரியதாகும். 

முன்பே திட்டமிட்டுத் திறம்பட முடிவெடுத்துக் கட்சியைத் தொடங்கியும் மின்வரியும் வலைத்தளமும் உருவாக்காமை பணிக்குறைபாடே. விக்கிபீடியாவில் தரும் வலைத்தள முகவரி, விற்பனை நோக்கில் தனியார் அளித்துள்ள வலைத்தள முகவரியே ஆகும்.  ஆதலின் இவற்றில் உடன் கருத்து செலுத்துக.

கட்சியின் கொள்கை, பணிகள், திட்டங்கள் முதலியவற்றைப் பரப்புவதற்கு நாளிதழ் தேவை. ஆனால், இத்தகைய நாளிதழ்கள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவதில்லை. கட்சிப் பொறுப்பாளர்கள்  தீவிர உறுப்பினர்கள் தகவலறியும் ஆவணமாக வெளி வருகின்றன. எனினும் நாளிதழ் ஒன்று கட்சிக்குத் தேவை. எனவே அச்சிதழ் வரும் வரை உடனடியாக இணைய இதழ் ஒன்றைத் தொடங்க வேண்டும். வெற்றி அல்லது வெற்றிச் செய்தி அல்லது வெற்றிக் கழகம் அல்லது வேறு நல்ல தமிழ்ப் பெயரில் இணைய இதழைத் தொடங்கலாம்.

முதன்மைப் பொறுப்பாளர்களில் ஒருவரான புசி ஆனந்து தன் பெயரைத் தமிழில் குறிப்பிடலே சிறப்பு. என்ன பொருளில் ‘bussy’  எனக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை் தளுக்கி மினுக்கி என்பதுதான் அகராதி தரும் பொருள். தளுக்குவதும் மினுக்குதும் எதற்காக? கவர்ச்சி காட்டத்தானே! எனவே கவர்ச்சி என்றும் பொருள் வரும். இச்சொல்லைப்பயன்படுத்தி கவர்ச்சி ஆனந்து என்பது நன்றாகவா இருக்கும்? கவர்ச்சி காட்டுவது ஈர்க்கத்தான். பிறரை ஈர்க்கும் திறனுடையவர் என்னும் பொருளில் ஈர்ப்பு ஆனந்து என்று குறித்துக் கொள்ளலாம். Bussy என்பதை busy என்னும் பொருள் கொண்டு ஓய்வில்லாத என்றும் குறிப்பார் உண்டு. அப்படியானால் ஓய்வில்லாத உழைப்பாளியைக் குறிக்கும் வகையில் உழைப்பாளி ஆனந்து என்று குறிக்கலாம். அல்லது தான் விரும்பும்  தமிழ்ப்பெயரைச் சூட்டிக் கொள்ளலாம். அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் இதுவே நலம் பயக்கும்.

தமிழகம் என்று பெயர் சூட்டியமை போன்ற வேறு சில குறித்தும் தெரிவிக்க இடமுள்ளது.  இருப்பினும் பிறரது ஏளனத்திற்கு ஆளாகா வண்ணம் சிறப்பாகச் செயற்பட்டுப் பிற கட்சிகளில் இருந்து தனித்து நின்றிடுக! ஆள்பவர்களிடமும் ஆண்டவர்களிடமும் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆதலின், வெறுப்பு அரசியலைக் கைவிடுக! தேவைக்கேற்ப நிறைகளைப் பாராட்டியும் குறைகளைச் சுட்டிக்காட்டியும் பணியாற்றிடுக!

தமிழ்ப் புகழ் பரப்புமின் தந்நலம் அகற்றுமின்

பிறரைக் கெடுக்கும் பேதைமை ஒழிமின்

வளவிய வான்பெருஞ்  செல்வமும் பதவியும்

நில்லா வென்பதை நினைவில் கொண்மின்

அஞ்சி வாழும் அவலம் போக்குமின்

கரந்த வாழ்வு கடவுள் முனின்றென

எல்லாம் அளித்தும் இன்தமிழ் காமின்!

என்னும் தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனாரின் வேண்டுகோளை அனைவர் உள்ளத்திலும் விதைத்திடுக!

தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!

தமிழர் வாழ்ந்தால் தமிழ்நாடு வாழும்!

தமிழ் வாழ்வே தமிழர் வாழ்வு!

என்னும் தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் வாழ்வு நெறி முழக்கத்தைப் பின்பற்றித் தமிழையும் தமிழ்நாட்டையும் வாழ்வில் சிறக்கச் செய்ய ஒல்லும் வகையில் தொண்டாற்றிட வேண்டி வாழ்த்துகிறோம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல – இதழுரை