தமிழ்நாட்டு மருகரான புதிய தலைமைச் செயலரை வரவேற்கிறோம்!
தமிழ்நாட்டின் தலைமைப் பதவிகளிலும் தமிழ் அமைப்புகளிலும் தமிழரல்லாதார் அமர்த்தப்படுவதே மரபாக உள்ளது. அந்த வகையில் புதிய தலைமைச் செயலராகத் திரு மோகன் வருகீசு சுங்கத்து இ.ஆ.ப. (Mohan Verghese Chunkath, I.A.S.) தலைமைச் செயலராக அமர்த்தப்பட்டு பங்குனி 18, 2045 / ஏப்பிரல் 1, 2014 அன்று பொறுப்பேற்றுள்ளார்!
தமிழ்நாட்டு மருகரான அவரைத் தமிழ், தமிழர் நலனுக்குப் பாடுபட வாழ்த்துகிறோம்!
கல்வியகங்களில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டில் தமிழர்க்கான தமிழர்களின் கோயில்களில் தமிழே வழிபடுமொழியாக இருக்க வேண்டும்!
தமிழில் பிற மொழி எழுத்துகளும் பிற மொழிச் சொற்களும் கலப்பது தடுக்கப்பட வேண்டும்!
ஊடகங்கள் வாயிலான தமிழ்க்கொலைகள் தடுக்கப்பட்டுத் தமிழ்த்தூய்மை காக்கப்பட வேண்டும்!
தமிழ் அமைப்புகளில் தமிழ்ப்புலமை மிக்கத் தமிழ்ப்பற்றாளர்களான தமிழர்களையே அமர்த்த வேண்டும்!
முதன்மைப் பதவிகளில் தமிழர் நலன் நாடும் தமிழர்களையே அமர்த்த வேண்டும்!
ஈழத்தமிழர்களைச் சிறைக் கொட்டடிகளான முகாம்களில் இருந்து அகற்றி இயல்பு வாழ்க்கை வாழ வழி வகுக்க வேண்டும்!
மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிவரும் தமிழ் இலக்கிய இதழ்களுக்கு அரசு விளம்பரங்கள் வழங்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில், தமிழக அரசு, மத்திய அரசு, பிற அரசு, தனியார், அயலார் போன்ற எவ்வகைப் பாகுபாடுமின்றி எல்லா நிலைகளிலும் தமிழே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும்!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிலை நீதி மன்றங்களிலும் தமிழே அலுவல்மொழியாகவும் வழக்காடு மொழியாகவும் திகழ வேண்டும்!
தமிழ்நாட்டின் தலைநகரைச் சென்னை என அழைக்க வழி வகுத்தும் மெட்ராசு என்ற பெயரில் இயங்கும் நிறுவனங்கள் பெயர்களை மாற்றி அவற்றையும் சென்னை என்றே அழைக்கச் செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றமும் அதன் கிளையும் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றம் என்றே அழைக்கப்பட வேண்டும்!
உயர்நிலைப்பள்ளிகளில் பிற மொழிப் பாடம் எடுத்துப் படிக்கும் முறைக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்!
மருத்துவம், பொறியியல் முதலான தொழிற் கல்விகளுக்குத் தகுதி மதிப்பெண்களுடன் தமிழ் மதிப்பெண்களில் பத்து விழுக்காடு சேர்க்கப்பட வேண்டும்!
தொழிற் கல்வியகங்களில் தமிழ்மொழிப்பாடம் வைக்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டில் பாடமாக உள்ள பிறமொழிப் பாடப்புத்தகங்களில் தமிழக இலக்கியச் செழுமை, பண்பாட்டுச் சிறப்பு, வரலாற்று உயர்வு, தமிழறிஞர்கள்-தமிழ்ப்புலவர்கள் வரலாறு முதலானவை பாடங்களாக இடம் பெற வேண்டும்!
தமிழர் நலன் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கும் பொறுப்பிலுள்ள அதிகாரிகள் தமிழரல்லாதவர்களாக இருப்பின், அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள தமிழறிந்த தமிழ் அதிகாரிகளைப் பங்கேற்கச் செய்ய வேண்டும்!
தமிழக அரசு சார்பில் மத்திய அரசு மீதும், சிங்கள் அரசு மீதும் வழக்கு தொடுத்து தமிழக மீனவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுத் தர வேண்டும்! தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழறிந்தவர்களையே தூதர்களாக நியமிக்க மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்!
தமிழர் வாழும் நாடுகள் எங்கும் தமிழ்ப்பண்ப்பாட்டு உறவகங்களை ஏற்படுத்தி அவர்களின் மொழி, இன, வாழ்வியல் நலன்களுக்கு உதவ வேண்டும்!
மொழிப்போர் முதலான தமிழக வரலாறு பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும்!
வரலாறு, புவியியல் பாடங்களில் தமிழக வரலாறும் புவியமைப்புமே தொடக்கப் பாடமாக அமையச் செய்ய வேண்டும்!
அறிவியல் பாடங்களில் தமிழ்அறிவியல் இடம் பெறும் வகையில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்!
செயல்பாடின்றி இருக்கும் அறிவியல் தமிழ் மன்றம் முதலான தமிழ் அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட வழி வகை செய்ய வேண்டும்!
சிறந்த படிப்பாளியான அவர், தமிழ் அறிஞர்களின் நூல்களைப் படித்துத் தமிழுக்கு எல்லா வகையிலும் தொண்டாற்ற வேண்டும்!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்னும் ஆரவார முழக்கம் உண்மையிலேயே நடைமுறையாக்கப்பட வேண்டும்!
ஒல்லும் வகை யெல்லாம் தமிழ், தமிழர் நலன் காக்கப்படவும் பேணப்படவும் சிறப்பாகப் பணியாற்ற தலைமைச் செயலர் திரு மோகன் வருகீசு சுங்கத்து, இ.ஆ.ப. அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்!
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். – திருக்குறள் 668
இதழுரை
ஏப்பிரல் 13, கி.பி. 2014
Leave a Reply